ரமலான்: ஈந்து கனிந்த மனம்

By இக்வான் அமீர்

ரமலான் சிறப்புக்கட்டுரை

கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிறச் சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.

அன்று ரமலான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்று கொண்டாடும் நன்னாள்.

பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைகட்டின.

நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ‘ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.

மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமலான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.

தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.

எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில், தெருவொன்றில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். முழங்கால்களுக்கு இடையே முகம்புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.

அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் சொல்லி, வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

“மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.

சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள்?” என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே.

சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமலான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனைத் தலை நிமிராமலேயே பேச வைத்தது.

“எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். அவர்களும் என்னை வீட்டில் சேர்ப்பதில்லை. ரமலான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” என்று கூறிவிட்டு சிறுவன் ஓவென்று அழலானான்.

நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.

“மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே” என்று ஆறுதல் சொன்னார்.

இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.

கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.

“இறைவனின் திருத்தூதரே!” மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.

ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தை. எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?”என்று அன்புடன் கேட்டார்.

உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?

அந்தச் சிறுவனைத் தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார், அவனைக் குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார். தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமலான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.

ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பெருநாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்