குருவின் பாதங்கள்

By சாரு நிவேதிதா

சுமார் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது நான் agnostic ஆக இருந்தேன். இறை சக்தி என்ற ஒன்று உள்ளதா, அல்லது அது மனிதனின் கற்பனையா என்று உறுதியாகத் தெரியாத நிலை. கடவுள் எனக்குக் காட்சி கொடுத்தால் நம்புவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அகந்தையினால் அல்ல; ஆர்வத்தினால். சொல்லிக் கொண்டு சும்மா இருக்கவில்லை. வடக்கே காஷ்மீரத்தில் உள்ள வைஷ்ணவோ தேவியிலிருந்து தெற்கே ராமேஸ்வரம் வரை நான் அறிந்த கோவில்களுக்கெல்லாம் சென்று கொண்டும் இருந்தேன். ஆனாலும் எனக்கு சாட்சி கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு நான் தகுதி பெற்றவனாக இல்லை என்று இப்போது அதைப் புரிந்து கொள்கிறேன்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நான் இருதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியதாயிற்று. ஒன்றரை லட்சம் ஆகும் என்றார்கள். என்னுடைய வங்கிக் கணக்கில் ஒன்றரை ஆயிரம் கூட இல்லை. நான் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தேன். பக்கத்துப் படுக்கையில் ஒருவர் என் மகள் திருமணத்துக்கு வைத்திருந்த பணமெல்லாம் போச்சே என்று வாய் விட்டு அழுது கொண்டிருந்தார். அப்போது என் அருகே வந்த என் மனைவி அவந்திகாவிடம் துக்கத்துடன் பணத்துக்கு என்ன செய்வது என்றேன். ஏனென்றால் எனக்கு எந்த உறவினர் பலமும் கிடையாது. குடும்பத்தினரால் முற்றாக ஒதுக்கப்பட்டவன் நான். பாபா பார்த்துக் கொள்வார் என்றாள். அவளிடம் அப்போது ஒரு குந்துமணி நகைகூடக் கிடையாது. ஒவ்வொரு நகையும் என்னுடைய ஒவ்வொரு புத்தகமாக மாறிக்கொண்டிருந்த நேரம் அது. அவந்திகா ஒரு தீவிரமான பாபா பக்தை. வீடே பாபாவின் கோவிலைப் போல் தான் இருக்கும். இரவும் பகலுமாக ஸ்ரீ சாயி சத் சரித்திரம் என்ற புத்தகத்தையே திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருப்பாள்.

ஆனால் எனக்கு அவள் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. ஒரே நாளில் எப்படி ஒன்றரை லட்சம் ரூபாய் கிடைக்கும்? மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் காரைக்கால் அம்மையாரின் காலமா இது? (மந்திரம் என்பதை மேஜிக் என்று நினைக்கிறார்கள். தவறு. மந்திரம் என்பது இறை நாமம்).

மறுநாள் என்னை தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றி விட்டார்கள். அறுவை சிகிச்சைக்கு முன் என் உடம்பை அதற்குத் தயாராக்குவதற்கான சிகிச்சை தொடங்கியது. அன்றைய தினம் யாருமே நம்ப முடியாத அந்த அதிசயம் நடந்தது. என் வாசகர் ஒருவர் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பணவோலை கொடுத்து அனுப்பியிருந்தார். அவர் எனக்கு முன்பின் பழக்கம் இல்லாதவரும் கூட.

அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் நான் செய்த முதல் காரியம், பாபாவின் சத் சரிதத்தைப் படிக்கத் தொடங்கியதுதான். பாபாவுடன் வாழ்ந்த பக்தர்களில் ஒருவரான கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர் எழுதிய அந்த நூலைப் படித்த ஒருவர் அதற்கு முன்பு வாழ்ந்த மனிதராக இருக்க மாட்டார். அந்த அளவுக்கு ஒருவரின் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தகம் அது.

ஆனால் என்னுடைய அனுபவத்தைப் பொருளியல் ரீதியாகப் புரிந்துகொள்ளக் கூடாது. காசு கேட்டால் கொடுப்பார் பாபா என்று மேலே சொன்ன நிகழ்ச்சியைப் புரிந்துகொண்டால் அது தவறு. பாபா யாருக்கெல்லாம் அருள் புரிகிறார்? யாருடைய வாழ்க்கையில் அதிசயம் நிகழ்த்துகிறார்? அதற்கு அவர் சொல்லும் ஒரே தகுதி அகந்தையை அழித்தல். யாரொருவர் தன் அகங்காரத்தை என் காலடியில் போடுகிறாரோ அவரது இதயத்தில் சென்று அமர்கிறேன் நான் என்றவர் பாபா. ஏனென்றால், தான் என்ற அகந்தை அழிந்தால்தான் மற்ற உயிர்களிடத்தில் நம்மால் அன்பு பாராட்ட முடியும். எப்படி என்று பார்க்கலாம்.

நான் வசிக்கும் மைலாப்பூரில் உள்ள பாபா கோவிலுக்கு தினந்தோறும் காலை ஆறு மணி அளவில் சென்று விடுவேன். ஒருநாள் தாமதம் ஆகி விட்டது. எட்டு மணி. அப்போது பாபா கோவில் வாசலில் ஒரு கார் நின்றது. யாரும் இறங்கவில்லை. அதனால் பின்னால் வந்த வாகனங்கள் ஹாரனை அலற விட்டபடி வழி விடச் சொல்லிக் கதறிக் கொண்டிருந்தன. என்ன நடக்கிறது என்று நான் ஆட்டோவிலிருந்து வேடிக்கை பார்த்தேன். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரம். கடுமையான ட்ராஃபிக் ஜாம் ஆன போது அந்தக் காரிலிருந்து இறங்கிய சாரதி காரை ஒரு சுற்று சுற்றி வந்து காரின் பின் கதவைத் திறந்து விட ஒரு இருபது வயதுப் பெண் சாவகாசமாக இறங்கினார். பிறகு அந்த சாரதி திரும்பவும் காரைச் சுற்றிக் கொண்டு வந்து ஏறி, காரை எடுத்தார்.

இது போன்றவர்களை நான் அருகில் சேர்க்க மாட்டேன் என்று பலமுறை சொல்லியிருக்கிறார் பாபா. தன் ஆயுள் முழுவதுமே தன்னை ஒரு பக்கிரி என்று சொல்லிக் கொண்டவர் அவர். பக்கிரி என்றால் பிச்சைக்காரன். சொன்னது போலவே அவர் வாழ்ந்தார். கடைசி வரை அவரது உடமைகளாக இருந்தவை, ஹூக்கா, புகையிலை, ஒரு தகர டப்பா, தலையைச் சுற்றி ஒரு துணி, நீண்ட கஃப்னி, ஒரு குச்சி ஆகிய இவ்வளவுதான். அவர் காலணி கூட அணிந்திருக்கவில்லை. ஒரு பாழடைந்த மசூதியில்தான் படுப்பார்.

பாபாவின் மற்றொரு விசேஷம் என்னவென்றால், அவர் மதங்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டவராக இருந்தார். அவர் இந்துவா முஸ்லீமா என்று யாருமே அறிந்ததில்லை. அவர் அவதரித்த ஊர், இளமைக்காலம், பெற்றோர் பற்றிய எந்த விபரமும் யாருக்கும் தெரியாது. அவர் தங்கியிருந்த இடத்தில் ஒரு பக்கம் சைவ உணவும், இன்னொரு பக்கம் பிரியாணியும் தயாராகிக் கொண்டிருக்கும். இரண்டையுமே அவரவர் உணவுப் பழக்கத்துக்கு ஏற்ப தன் கையினாலேயே எடுத்து வழங்குவார் பாபா. கொதித்துக் கொண்டிருக்கும் பிரியாணி அண்டாவிலிருந்து தன் கையால் எடுப்பார் என்கிறார்கள் உடன் இருந்தவர்கள். இன்றைக்கும் பாபாவின் திருக்கோவில்களில் காலை, மாலை, இரவு எந்நேரமும் பக்தர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கிடைக்கும். பசியோடு உன்னை வருத்திக் கொண்டு என்னிடம் வராதே என்பார் பாபா. “உணவுக்காகவும் உடைக்காகவும் துன்பம் அடையாதீர்கள். என்னைச் சரணடைந்தவர்களின் இல்லங்களில் இல்லாமை என்ற பேச்சே இருக்காது” என்பது பாபாவின் வாக்கு.

பாபாவின் ஸ்தலங்களில் வேதமும் ஒலிக்கும். திருக்குரானும் ஒலிக்கும். இறைவனுக்கு ஏது மத அடையாளம் என்பது பாபாவின் உபதேசம். ஷீர்டியில் கிருஷ்ண பஜனையும் நடந்தது. அதே சமயம் அவர் எப்போதும் அல்லாஹ் மாலிக் என்று உச்சரித்தபடியே இருந்தார். ஷீர்டி பாபாவை என் குருவாக வரித்த பிறகு அவர் என் வாழ்வில் எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார். காட்டு வழியே செல்பவர்களுக்கான ஒரு வழிகாட்டியைப் போன்றவர் பாபா. அவரது கரங்களைப் பற்றிக் கொள்வோம்.

இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் போதும் முடித்த பிறகும் இரண்டு ஆச்சரியங்கள். மிக அரிதாகவே அவந்திகா பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பாபா கோவிலுக்குச் செல்வது வழக்கம். கட்டுரையைத் துவங்கிய நேரம், OMR பாபா கோவிலுக்குப் போகிறேன், வருகிறாயா என்று கேட்டாள். நானும் அவளும் சேர்ந்து அங்கே சென்று இரண்டு ஆண்டுகள் இருக்கலாம். இல்லை, தன்னைப் பற்றி மற்றவர்களுக்காக எழுதச் சொல்லி பாபா என்னைப் பணித்திருக்கிறார், அதுதான் ஆலயத்துக்குப் போவதை விட முக்கியமான பணி, அதனால் நீ போய் வா என்றேன்.

ஒரு அதிகாலையில் இந்தக் கட்டுரையை எழுதி முடித்தேன். நான் மைலாப்பூர் பாபா கோவிலில் இருக்க வேண்டிய நேரம் அது. அப்போது என் நண்பரிடமிருந்து ஒரு கடிதம். “நீங்கள் ஷீர்டி போயிருக்கிறீர்களா? நான் போயிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக அவரைப் பின்தொடர்கிறேன். அவர் எனக்கு மிகுந்த மன அமைதியைக் கொடுத்திருக்கிறார். அவர்தான் துக்கநிவாரணியாக இருக்கிறார்” அவருக்கு நான் எழுதிய பதில் இது: மைலாப்பூர்,் மகாபலிபுரம் சாலை பாபா கோவில்களை மட்டுமே அறிவேன். ஷீர்டியிலிருந்து இதுவரை அழைப்பு இல்லை. இதோ உங்கள் கடிதம் மூலம் அழைப்பு வந்து விட்டதாக உணர்கிறேன். விரைவில் செல்வேன்.’’

தென்னிந்தியாவின் ஷீர்டி

தென்னிந்தியாவின் ஷீர்டி என அழைக்கப்படும் சென்னை மைலாப்பூர் சாய்பாபா கோயில் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாய்பாவிற்காக எழுப்பப்பட்ட கோயில்களில் மிகப் பழமையான கோயில்களுள் வெங்கடச அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள இக்கோயில் பிரதானமானது. சாய்பாபாவின் பக்தரான நரசிம்ம ஸ்வாமிஜி என்பவரால்தான் இக்கோயில் கட்டப்பட்டது. நரசிம்ம ஸ்வாமிஜி தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர்.

சந்நியாசியைப் போல வாழ்ந்துவந்த நரசிம்ம ஸ்வாமிக்கு, சீர்டி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவருக்கு சித்தி கிடைத்தது. சென்னை திரும்பிய அவர் சாய்பாபாவைத் தினமும் பூஜிக்கத் தொடங்கினார்.

இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்த ஒரு புளிய மரத்தில் சாய்பாபாவின் படத்தை மாட்டி அதை நரசிம்ம ஸ்வாமிஜி பூஜித்து வந்துள்ளார். அதன் பிறகு அவர் வேறு ஒரு தெருவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். இருந்தாலும் அதே இடத்தில் சாய்பாபாவுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது பெரும் விருப்பம் இருந்துள்ளது. சில ஆண்டுகளில் அவருடைய நண்பரான ஜே.டி. பன்னாலால் உதவியுடன் அதற்கான முதல் கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு நரசிம்ம ஸ்வாமிஜியின் கடின உழைப்பால் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. மனிதாபிமான சேவையே இக்கோயிலின் பிரதானமான நோக்கம் என நரசிம்ம ஸ்வாமிஜி கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய காரியத்தைத் தனிமனிதனாகச் செய்துமுடித்திருந்தாலும் நரசிம்ம ஸ்வாமிஜியின் பெயரையோ அது பற்றிய குறிப்பையோ கோயிலின் உள்ளே எங்கும் காண முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயக் கோயிலாக இல்லாமல் சர்வ சமயங்களைச் சேர்ந்தவர்களும் தரிசித்துத் தங்கள் இன்னல்களைத் தீர்த்துச் செல்லும் தலமாக இக்கோவில் திகழ்கிறது.

அகந்தையை அழித்தல் வேண்டும். யாரொருவர் தன் அகங்காரத்தை என் காலடியில் போடுகிறாரோ அவரது இதயத்தில் சென்று அமர்கிறேன் நான் என்றவர் பாபா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்