முன்னோட்டம்: ஸ்ரீ ராமானுஜர் 1000 - சாதி பேதம் ஒழித்த மகான்

By கே.சுந்தர்ராமன்

தத்துவத்தின் மெய்யியலை உணர்ந்தவர் ராமானுஜர். ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொண்டாடும் சீர்திருத்தவாதி. சாதி, மத, தீண்டாமை தலை தூக்கி நின்ற நிலையில் ராமானுஜரின் வருகை இருளை விலக்க வந்த சூரியன் போல் கருதப்பட்டது.

ஆளவந்தார் கண்ட அதிசயம்

ஒரு நாள், ஆளவந்தார்  வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில் தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த உழவர் உழுதுகொண்டிருந்தார். உச்சிவேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் உள்ள ஓடைக்குச் சென்று சேற்று நீரை கையால் அள்ளி எடுத்து, எம்பெருமானுக்கு நிவேதனம் செய்து, பின் பருகினார்.

இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது சீடர்கள் இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, ‘எனக்கு இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்’ என்றார்.

மாறன் நேர் நம்பி

உழவரை ஒரு வித்தியாசமான சித்தராக உணர்ந்த ஆளவந்தார், அவர் சடகோப மாறன் என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர் என்று கூறி அவருக்கு மாறன் நேர் (இணையான) நம்பி என்று பெயர் சூட்டினார்.

உழவரிடம், வைணவ நெறியில் ஈடுபட்டவர்களுக்கு சாதிபேதம் கிடையாது, உயர்வு தாழ்வு என்பது இல்லை என்று கூறி அவரை அன்புடன் அழைத்து ஆரத்தழுவி பஞ்ச சமஸ்காரம் செய்வித்தார் ஆளவந்தார். மாறனேரி நம்பிக்கு வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்து வைத்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார்.

பெரிய நம்பியின் கருணை

முதுகில் ராஜ பிளவை எனும் கட்டியால் அவதியுற்ற மாறனேர் நம்பியிடம் அன்பு பாராட்டினார் ஆளவந்தாரின் சீடர் பெரிய நம்பி. அவரது மகள் அத்துழாய்க்கும் மாறனேர் நம்பி மீது அன்பும் பாசமும் அதிகம். குடிசையில் இருந்த மாறனேர் நம்பியால் குளிக்கவோ சமையல் செய்து உணவருந்தவோ இயலாத நிலையில் பெரிய நம்பி தன் வீட்டில் செய்த உணவை மாறனேர் நம்பிக்கு அளித்தார். இச்செயலைக் கண்ட உடையவர் இவரல்லவா உண்மையான வைணவர் என்று ஆனந்தித்தார்.

சமநீதி

மாறனேர் நம்பிக்கு அரங்கன் பிரசாதம் அளித்த பெரிய நம்பியைப் பாராட்டிய ராமானுஜர், அவரைப் பழித்தவர்களை நோக்கி, “யார் இழிந்தவன்? வேதம் வகுத்த வியாசர் ஒரு செம்படவர். ராமகதை உரைத்த வால்மீகி ஒரு வேடர். திருப்பாணாழ்வாரை லோகசாரங்க முனிவர் தன் தோளில் சுமந்து அரங்கன் முன் நிறுத்தவில்லையா? அனைவருக்கும் ஒரே நீதி. சமநீதி. பொதுநீதி. இதுதான் என் கொள்கை. சாதிகளை ஒழிக்க ஒரே வழி, எல்லோரையும் வைணவர்களாக்கி விடுவதுதான்” என்றார்.

ரத்தம் ஒரே நிறம்தான்

மாறனேர் நம்பிக்கு நோய் முற்றி, ஆளவந்தாரை தியானித்துக் கொண்டே மறைந்தார். அவரின் அந்திம சடங்குகளை பெரிய நம்பி செய்தார். அங்கு வந்த ராமானுஜரிடம், ‘இந்த மகானுக்கு சரம கைங்கர்யம் செய்யும் பேறு எனக்குக் கிட்டியது. ஜடாயுவுக்கு ராமபிரான் இறுதிச் சடங்கு செய்யவில்லையா? வேலைக்காரியின் மகன் விதுரருக்கு தருமபுத்திரர் சரம கைங்கர்யம் செய்யவில்லையா? எல்லோர் உடலில் ஓடும் குருதி சிவப்புதான். சாதியால் ஏன் இந்த பாகுபாடு?’ என்றார்.

அத்துழாயின் மனவலிமை

அரங்கன் தேர்த் திருவிழா அன்று, பஞ்சமனுக்கு சடங்குகள் செய்தவர்கள் அக்ரஹாரத்தில் இருக்க யோக்யதை அற்றவர்கள் என்று கருதி பெரிய நம்பியின் வீட்டு வாசலில் சிலர் முள்கட்டுகளைப் போட்டு இருந்தனர். அதனை அறிந்த அத்துழாய், “எக்குலத்தில் பிறந்தாலும் அடியார்கள் வழிபடத்தக்கவர்கள். நம்மாழ்வார் போற்றும் பரமர்கள், பாகவத உத்தமர்கள் கடையர்களா?

பாகவதரை அவமதித்து இகழ்பவர்கள் தாமே அதுவாகி விடுகிறார்கள் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் தெளிவாகக் கூறியுள்ளார்” என்று கூறி தெருவில் அமர்ந்துவிட்டாள். அங்கு வந்த ராமானுஜர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியபின் முள்கட்டுகள் அகற்றப்பட்டன. அதன் பின் திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்