பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா இந்த ஆடிப்பெருக்கு. தங்களை வாழவைக்கும், வளப்படுத்தும் காவிரியை அதன் கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் சிறப்பிப்பதற்காகத் துவங்கப்பட்ட இந்த விழா இன்று ஒட்டுமொத்த தமிழகம் முழுவதிலும் எல்லாத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு விழாவின்போது என்ன நடக்கும்?
ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையோரம் முழுவதும் உற்சாகக் கோலாகலம்தான். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எல்லோருக்கும் கொண்டாட்டம்தான் என்றாலும் குறிப்பாக இதைப் பெண்கள் திருவிழாவாகவே நடத்துவதைக் காண முடியும். காலையில் எழுந்து குளித்து முடித்து பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களோடு தன் வயதொத்தவர்களோடு கிளம்புவார்கள் பெண்கள். சிறு தேர் உருட்டும் சிறுமிகள், சில்லிக்கோடு அடிக்கும் இளம் பெண்கள், தற்போதுதான் திருமணமாகியிருக்கும் குமருகள், திருமணமான இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், வயோதிகப் பெண்கள் என்று எல்லாப் பருவத்தினரும் ஆற்றங்கரைக்குப் போகக் கிளம்புவதில் இருந்தே கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும்.
ஆற்றங்கரைக்குப் போவதற்கு முன் கலப்பு சாதம் செய்ய அதிகாலை நான்கு மணியில் இருந்தே வேலை தொடங்கிவிடும். ‘‘கொஞ்சம் எலுமிச்சை பழத்தை பிழிஞ்சு கொடுங்களேன், தேங்காயை துருவி கொடுங்களேன்’’ என்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும். எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் என்று எல்லாம் செய்து முடித்து அவற்றை ஆற்றுக்கு எடுத்துப் போக பாத்திரத்தில் அடைத்துவைப்பார்கள். அதன் பிறகு காலை சிற்றுண்டி தயார் செய்து முடிப்பார்கள். அதன் பிறகு ஆற்றுக்குக் கிளம்பும் வைபவம் தொடங்கும்.
பெண்கள் செம்பில் மஞ்சளை வைத்து எடுத்துக்கொண்டு தன் பிள்ளைகள், ஓரகத்தி, அவர்களின் பிள்ளைகள், நாத்தனார், பக்கத்து வீட்டுத் தோழி என்று பட்டாளத்தோடு தேர் அசைவதுபோல தெருவைக் கடப்பார்கள். சிறு பிள்ளைகள் பனைச் சக்கரத்தால் செய்யப்பட்ட சிறிய சப்பரத்தை இழுத்துக்கொண்டு முன்னே போவார்கள். எல்லோருமாக ஆற்றை அடைந்ததும் ஒவ்வொரு பெண்ணும் தனக்கான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அந்த இடத்தை சாணம் போட்டு மெழுகி சுத்தப்படுத்து அதில் வாழை இலை விரித்துவைத்து வெற்றிலை வைத்து அதில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். அதற்கு பூப்போட்டு இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி வணங்குவார்கள். பிறகு அவை எல்லாவற்றையும் ஒரு வாழைப் பட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விடுவார்கள். அந்த விளக்கு எரிந்துகொண்டே மற்ற பொருட்களோடு மிதந்து செல்வது காவிரியின் உயிர்ப்பை உலகத்துக்கு உணர்த்துவதாக இருக்கும்.
வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிடுவார்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவதும் நடக்கும். பிறகு கொண்டு வந்திருக்கும் பதினெட்டு வகையான பதார்த்தங்களையும், கலப்பு சாதத்தையும் எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு ஆற அமர வீடு திரும்புவார்கள். காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கச் செய்யப்படும் இந்த விழா ஒரு வகையில் குடும்ப, சமூக விழாவாக நடக்கும்.
ஆனால் கடந்த பல வருடங்களாகக் காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு அத்தனை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆடிப்பெருக்கு என்பது மற்றுமொரு பண்டிகைக் காலம். காலையில் எழுந்ததும் இறைச்சிக் கடைகளை நோக்கிக் குவிகிறார்கள் மக்கள். தேவைக்குத் தகுந்தபடி இறைச்சி வாங்கி மதிய சாப்பாட்டைக் கொண்டாடிப் பண்டிகையை முடித்துக்கொள்கிறார்கள். வழக்கமாக ஒரு வாரத்தில் விற்கும் தொகை அன்று ஒரு நாளில் மட்டும் விற்கிறது என்கிறார்கள் டாஸ்மாக் வட்டாரத்தில்.
வீட்டிலேயே கொண்டாடலாம்..!
காவிரியின் கரையோரம் உள்ளவர்கள்தான் ஆடிப்பெருக்கு கொண்டாடுவார்கள்; நாம் என்ன செய்வது என்று யாரும் கவலைபட வேண்டாம். நம் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை அற்புதமாகக் கொண்டாடலாம் என்கிறார் ஆச்சாள்புரம் சம்பந்த சிவாச்சாரியார். எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும் அவர் விளக்குகிறார்: “ஒரு செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்திலிருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள், நீரில் கலந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அதன் முன் செம்பை வைத்துத் தண்ணிரில் பூக்களைப் போட வேண்டும். கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, ‘எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம். அவர்களுக்கு அருள் செய்ததுபோல எங்களுக்கும் அருள் செய்யுங்கள்’ என்று மனதார வேண்டிக் கற்பூர ஆரத்தி காட்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபட வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரைத் தோட்டத்தில் இருக்கும் செடிகொடிகளுக்கு ஊற்றிவிட வேண்டும். சர்க்கரைப் பொங்கல் செய்து படைத்தால் ஆடிப்பெருக்கு விழா நிறைவாகும்” என்கிறார் சம்பந்த சிவாச்சாரியார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago