துருவ சரித்திரம்: பக்தியின் மகிமை

By முக்கூர் லஷ்மி நரஸிம்மாச்சாரியார்

மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான்.

துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று திட்டி அவனைத் தள்ளிவிட்டாள். கீழே விழுந்த குழந்தையைப் பார்த்த ராஜா அவனைத் தூக்கவுமில்லை, ஏன் தள்ளினாய் என்று சுரூசியினிடம் கேட்கவுமில்லை. தனக்கு ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி மவுனமாக வாய் மூடி உட்கார்ந்திருந்தான். அது அந்தக் குழந்தைக்குப் பிடிக்கவில்லை.

மிகுந்த கோபத்துடன் காட்டிற்குள் வந்தான் துருவன். என்ன நடந்தது என்று தாயார் கேட்டதும் நடந்ததைச் சொன்னான். “சுரூசி சொன்னதில் என்ன தப்பு? நான் பாபம் செய்தவள். என்னிடத்திலே பிறந்த நீயும் பாபத்தையே செய்திருக்கிறாய். பாபத்தைப் பண்ணிவிட்டு உயர்ந்த பலனை அடைய நாம் விரும்பலாமா?” என்று கேட்டாள்.

கோவிந்தனை அடைவதே ஒரே வழி

எந்த நிலையிலும் பிறரை நிந்தனை செய்யும் மனம் சுநீதிக்கு வரவில்லை. “நீயும் நானும் பாவாத்மாக்கள். நம்முடைய கஷ்டத்திற்கு ஒரே வழி கோவிந்தனை அடைந்து பூஜிப்பதே” என்று துருவனிடம் சொன்னாள். அம்மா சொன்னதைக் கேட்ட குழந்தை காட்டிற்குப் போனான்.

சப்தரிஷிகளும் குழந்தையைப் பார்த்து க்ஷத்ரிய தர்மமான தேஜஸ், கோபம் இரண்டும் இவனுடைய முகத்திலே தெரிகிறதே என்ற ஆச்சரியப்பட்டார்கள். “குழந்தாய்! உன்னுடைய அப்பா, அம்மா யாராவது உன்னை வைதார்களா? அல்லது முறத்தின் காற்று உன் மேல் பட்டதா?” என்று கேட்டார்கள். மகரிஷிகள் கேட்டதும் நடந்த விஷயத்தைக் குழந்தை சொல்லிற்று. “நீ உயர்ந்த நிலையை அடைய கோவிந்தனையே சரணடைந்து பூஜிப்பாயாக” என்று மகரிஷிகளும் சொன்னார்கள். நாரதரும் அவ்வாறே சொன்னார்.

எப்படிப் பூஜை செய்ய வேண்டும்

எப்படிப் பூஜிக்க வேண்டும் என்று கேட்டது நாலரை வயதுக் குழந்தை. சங்கு சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு, மார்பிலே கௌஸ்துப மணியுடன் திவ்ய மங்கள ரூபத்துடன் கூடிய பரமாத்மாவைப் பூஜி என்றார்கள். ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்ற மந்திரத்தை நாரதர் அக்குழந்தையின் செவியில் உபதேசம் செய்தார்.

யமுனை நதிக்கரைக்குச் சென்று தவம் செய்கிறது குழந்தை. முதல் மாதம் பழத்தை மட்டும் சாப்பிட்டுத் தியானம். இரண்டாவது மாதம் இலை, தழை சாப்பிட்டுத் தியானம். மூன்றாவது மாதம் தீர்த்தம் மட்டும் பருகிவிட்டுத் தியானம். நான்காவது மாதம் வாயுவை மட்டும் எடுத்துக்கொண்டு தியானம். ஐந்தாவது மாதம் எதையும் உட்கொள்ளாது நின்றுகொண்டு தியானம்.

நாரத மகரிஷி போன்ற ஆச்சார்யரின் அனுக்கிரகம் ஏற்பட்டதால் துருவன் பெரிய பக்தனாகிவிட்டான். ஒவ்வொரு மாதமும் துருவனுக்குப் படிப்படியாகச் சுத்தி ஏற்பட்டு ஐந்தாவது மாதத்தில் பரப்பிரம்ம ஞானம் சித்திக்கிறது. தியானம் செய்யும் மூர்த்தி இருதயத்தில் தெரிகிறான். நாரதரின் உபதேசத்தினால் ஐந்தாவது மாதத்திலேயே பகவானைப் பார்த்துவிட்டது குழந்தை.

ஞானம் தந்த சங்கின் ஸ்பரிசம்

எதிரே பரமாத்மா வந்து நின்று “துருவா!” என்று அழைத்தார். கண்ணைத் திறந்து பார்த்த குழந்தை திக்பிரமையாகித் திகைத்து நிற்கிறது. குழந்தையின் நிலையைப் பார்த்த பரமாத்மா தன் இடது கையிலேயிருந்த பாஞ்சஜன்யமாகிற சங்கின் நுனியால் துருவனின் கன்னத்தைத் தொட்டார்.

சங்கு வேதம் என்றால், சங்கின் நுனி ப்ரணவம். சங்கின் நுனி பட்ட மாத்திரத்தில் மகா ஞானியாகி பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறான் துருவன். “நீ அல்லவோ என்னுள் உட்புகுந்து பேச வைக்கிறாய்” என்று பகவானை ஸ்தோத்திரம் பண்ணுகிறது குழந்தை.

`உன்னுடைய அனுக்ரஹம் இல்லாமல் ஏதாவது நடக்குமா!’ என்று ஸ்தோத்திரம் பண்ணிய துருவனைப் பார்த்துப் பரமாத்மாவிற்குப் பரம சந்தோஷம். முப்பத்தாறாயிரம் வருடங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்யவைத்தார். துருவன் முன் ஜென்மத்தில் பிராமணனாக இருந்தபோது ராஜ்ய பவனத்தைப் பார்த்து ராஜ்ய பரிபாலனம் பண்ண மாட்டோமா என்று நினைத்ததால், அதையும் நிறைவேற்றி வைத்தார் பரமாத்மா. இதற்கிடையில் சுரூசியும் உத்தமனும் காட்டுத் தீயில் மாண்டு போனார்கள்.

பரமாத்மா துருவனுக்காக நட்சத்திர மண்டலத்தில் உத்தமமான இடத்தை அமைத்துக் கொடுத்தார். புஷ்பக விமானம் வந்து அவனை அழைத்துக்கொண்டு போனது. நம் அம்மாவை விட்டுவிட்டு வந்துவிட்டோமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த துருவனுக்கு முன்னே மற்றொரு விமானத்தில் சுநீதி சென்றுகொண்டிருந்தாள். துருவனால் அம்மாவிற்குப் பெருமை. பரமாத்மா அமைத்துக் கொடுத்த இடத்தில் துருவன் இன்னமும் வீற்றிருக்கிறான் என்பது பக்தர்கள் நம்பிக்கை. அதுதான் துருவ நட்சத்திரம் என்று வழங்கப்படுகிறது. துருவ நட்சத்திரத்தின் பக்கத்தில் சிறிய நட்சத்திரமாக சுநீதி இருக்கிறாள்.

துருவன் போன விமானத்திலிருந்து துருவ பதத்தின்மேல் கால் வைக்க வேண்டும் என்றால் ஒரு படிக்கட்டு இருந்தால் சௌகரியமாக இருந்திருக்கும். துருவனுக்குக் கால் எட்டவில்லை. இதைப் பார்க்க எல்லா தேவதைகளும் வந்திருந்தனர்.

கொஞ்சம் கால தாமதமாக வந்த யமன் எல்லா தேவதைகளையும் தள்ளிவிட்டு முன்னே வந்து தலையை நீட்டினான். ஒரு படி இருந்தால் தேவலை என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் யமன் தலையை நீட்டியவுடன், யமன் தலை மேல் காலை வைத்து துருவ பதத்தில் இறங்கினான் துருவன்.

வேதம் அறிவுறுத்தும் வகையில் பகவானைப் பிரார்த் தனை செய்தால் இவ்வுலகில் வாழ்வதற்கான ஆரோக்யம், ஐஸ்வர்யம், நல்ல குடும்பம் எல்லாம் தந்து கடைசியில் மோட்சத்தையும் கொடுக்கிறான் பகவான். இதுதான் துருவனின் கதை நமக்குச் சொல்லும் சேதி. இந்தச் சரித்திரத்தை நாம் தினமும் நினைத்தால் சர்வ மங்களங்களும் உண்டாகும் என்கிறார்கள் சமயப் பெரியார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்