புத்தர் வாழ்வில்: புத்தர் வழங்கிய சொத்து

By ஆதி

புத்தர் ஞானம் பெற்ற பிறகு, அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அவருடைய தந்தை சுத்தோதனருக்கும் இந்தச் செய்தி கிடைத்தது. கௌதம புத்தர் ஒரு முறை கபிலவஸ்து நகருக்கு வர வேண்டும் என்று அவர் தந்தை விருப்பப்பட்டார். ஊர் திரும்பினால் தன் துறவி வேடத்தைக் களைந்து அரச பதவியைப் புத்தர் ஏற்றுக்கொள்வார் என்று அவர் நினைத்தார்.

புத்தர் ராஜகிரஹத்தில் இருப்பதைச் சுத்தோதனர் தெரிந்துகொண்டார். புத்தரை அழைத்து வருவதற்காகத் தன் அமைச்சரை அவர் அனுப்பினார். ஆயிரம் சேவகர்கள் அவருடன் சென்றார்கள். அவர்கள் ராஜகிரஹத்தை அடைந்தபோது, புத்தர் ஒரு கூட்டத்தில் உபதேசம் செய்துகொண்டிருந்தார். உபதேச மொழிகளால் கவரப்பட்டுச் சேவகர்கள் எல்லாருமே புத்தப் பிட்சுகள் ஆகிவிட்டார்கள். புத்தரைக் கபிலவஸ்துவுக்கு அழைத்துப்போக வந்திருக்கிறோம் என்பதையே அடியோடு மறந்துவிட்டார்கள்.

பிறகு சுத்தோதனர் புத்தரின் சிறு வயது நண்பர் காலூதியனை ராஜகிரஹத்துக்கு அனுப்பினார். காலூதியனும் புத்த பிட்சு ஆகிவிட்டார். ஆனால், தான் வந்த காரணத்தை அவர் மறக்கவில்லை. ஒரு நாள் அவர் புத்தரிடம் கபிலவஸ்துவைப் பற்றி நினைவூட்டினார். "உங்கள் தந்தை சுத்தோதனரும் சித்தி பிரஜாபதி கௌதமியும் மனைவி யசோதரையும் உங்களைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். உங்களை அழைத்து வரவே நான் இங்கே வந்தேன்" என்றார் அவர்.

புத்தர் கபிலவஸ்து செல்ல ஆயத்தமானார். சுத்தோதனர் தன் அவையினர், நகர மக்களுடன் புத்தரை எதிர்கொண்டு அழைக்க வந்தார். அப்போது தன் மகனின் முகத்தில் தெரிந்த ஒளியைக் கண்டு அவர் பிரம்மித்துப் போனார். "மகனே, இனி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மனிதக் குலத்துக்கு நீ வழி காண்பித்திருக்கிறாய்."

துறவியாகிவிட்டதால், அரண்மனையில் தங்காமல் நகருக்கு அருகிலிருந்த நந்தவனத்தில் சீடர்களுடன் தங்கினார் புத்தர்.

நகர மக்கள் அவரைக் காணத் திரண்டு வந்தனர். அனைவரும் புத்தரின் உபதேசத்தைக் கேட்க விரும்பினார்கள். அவரைக் கண்டு கோபமடைந்தவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆனால், புத்தரின் உபதேசத்தால் அவர்கள் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர்.

அடுத்த நாள் புத்தர் பிட்சை (பௌத்தப் பிட்சுகள் உணவு கோரி இல்லங்களுக்கு வருவதே பிட்சை. இது பின்னால் பிச்சை ஆகிவிட்டது) கேட்டுப் புறப்பட்டார். அதைக் கண்ட அவரது தந்தை சுத்தோதனர் வருத்தமடைந்தார். என் தலைநகரிலேயே என் மகன் பிச்சை எடுப்பதா என்று நினைத்த அவர், புத்தரைத் தடுத்து, "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால், பிச்சையெடுப்பது என்னை அவமதிப்பது போலாகும்" என்றார்.

அதற்குப் புத்தர், "பிச்சை கேட்பது பௌத்தத் துறவிகளின் பணி" என்றார்.

"ஆனால், நீ அரசகுமாரன். இந்த அரச பதவியே உன்னுடையதுதானே!" என்றார் சுத்தோதனர்.

அதற்குப் புத்தர், "நான் சாதாரணத் துறவி. துறவிக்கு எப்படி வரும் அரச பதவி?" என்றார் அமைதியாக.

புத்தரைச் சுத்தோதனர் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த எல்லோரும் அவரைக் கண்டாலும், யசோதரை மட்டும் வரவில்லை. "அவரே என்னைத் தேடி வரட்டும்" என்றார் யசோதரை.

"நீ வீட்டை விட்டுப் போனதிலிருந்து யசோதரை துறவி போலவே வாழ்கிறாள். முடியைக் களைந்து, காவி உடையே அணிகிறாள்" என்றார் சுத்தோதனர்.

யசோதரை இருக்குமிடத்துக்கு புத்தர் சென்றார். அவரைக் கண்டு யசோதரை அடக்கமாட்டாமல் அழுதார். புத்தர் அவளுக்கு ஆசி வழங்கினார்.

புத்தரின் மகன் ராகுலனுக்கு அப்போது ஏழு வயது. புத்தர் கபிலவஸ்துவை அடைந்த ஏழாவது நாளில் ராகுலனைப் புத்தரிடம் அனுப்பினாள் யசோதரை. புத்தர்தான் ராகுலனின் அப்பா என்று தெரிந்துகொள்வதற்காக.

புத்தர் ராகுலனைப் பார்த்தார். பிறகு, தன் சீடர் சாரிபுத்திரனிடம் "ராகுலனுக்குத் தீட்சை அளித்துச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவனுக்குத் தந்தையாக நான் அளிக்கும் சொத்து அதுதான்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்