பூனையை மட்டும் அனுமதிக்காதே

By சங்கர்

மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார்.

“ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது.

“ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர்.

அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் தெரியாது. அவர் வார்த்தைகளுக்குப் பின்னர் நீண்ட கதை ஒன்று உள்ளது. முத்தாய்ப்பான ஒரு பொன்மொழியையே உனக்குக் கூறினார்” என்று தெரிவித்தார்.

இளைய சீடன் மூத்த சீடரிடம் குருவின் பூர்வாசிரமக் கதையைக் கேட்டான்.

முன்பொரு காலத்தில் அவர் தனது மனைவியையும் குழந்தைகளையும் வீட்டையும் துறந்து இமாலயத்திற்குச் சென்றார். இமாலயத்தின் அடிவாரத்தில் ஒரு கிராமத்திற்கு அருகே அவர் தியானம் செய்தார். அங்கிருந்த கிராமத்து மக்கள் அவருக்கு உணவு அளித்தனர். அவருக்காக சிறிய அளவில் மூங்கில் கொட்டகை ஒன்றையும் கட்டிக்கொடுத்தனர்.

குரு தனக்கென உடைமையாக இரண்டு வேஷ்டிகளை மட்டுமே வைத்திருந்தார். ஒரு வேஷ்டியைத் துவைத்து உலர்த்தி இன்னொன்றைக் கட்டிக்கொள்வார். அதில்தான் பெரிய தொந்தரவு உருவானது. கொடியில் தொங்கவிடப்படும் வேஷ்டியை இரவில் எலிகள் கடித்துக் குதறி கந்தலாக்கின.

என்ன செய்வது என்று யோசித்து கிராமத்தவர்களிடம் ஆலோசனை கேட்டார். கிராமத்தவர், குருவிடம் ஒரு பூனையை வளர்க்கச் சொன்னார்கள். பூனைக்குப் பால் வேண்டுமே? என்ன செய்வது என்று கிராமத்தினரிடம் மறுபடியும் ஆலோசனை கேட்டனர். ஒரு பசு மாட்டை வாங்க ஆலோசனை கூறப்பட்டது. குருவும் பசு மாட்டை வாங்கினார்.

பசு மாட்டுக்குத் தினசரி புல் தேவைப்பட்டது. துறவி கிராமத்திற்குள் சென்று ஒவ்வொரு வீட்டிலும் புல்லைப் பிச்சையாகப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. கிராமத்தினர் துறவியிடம், “உங்கள் கௌரவத்துக்கு இது சரியல்ல. புல்லுக்காக ஒரு துறவி வீடுதோறும் ஏறி இறங்குவதா? இது முறையல்ல” என்றனர்.

“என்ன செய்வது? எனது பசுவையும், பூனையையும் நான் எப்படி பராமரிப்பது” என்று கேட்டார்.

“ ஒரு எளிய தீர்வு இருக்கிறது. எங்கள் ஊரில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் விதவை. அவளைப் பாதுகாக்க ஒருவரும் இல்லை. அவளைச் சம்மதிக்க வைக்கிறோம். ஒரு ஞானிக்கு சேவை செய்வதில் அவளும் சந்தோஷமே அடைவாள். அவள் உங்கள் பசுவையும் பூனையையும் பார்த்துக்கொள்வாள். உங்களையும் பார்த்துக் கொள்வாள். உங்கள் வீட்டைச் சுற்றி நிலத்தைத் திருத்தி பயிரும் செய்யலாம்” என்று ஆலோசனை கூறினார்கள்.

அவளும் சம்மதித்தாள். குருவும் சம்மதித்தார். இப்படியாக எல்லாம் நடந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே …

புல் தானாகவே வளர்கிறது என்று பாஷோ கூறியது போல எல்லாம் வளரத் தொடங்கியது. துறவியும் அந்தப் பெண்ணும் காதல் கொண்டார்கள். அவர்கள் சேர்ந்து விவசாயப் பணிகளில் ஈடுபட்டார்கள். கோதுமை வளர்ந்தது. மாட்டுக்குப் புல்லும் கிடைத்தது. பூனையும் சந்தோஷமாக இருந்தது. குழந்தைகள் பிறந்தன. ஒரு நாள் அந்த குருவுக்கு திடீரென்று ஒரு எண்ணம் எழுந்தது.

“இந்த உலகத்தைத் துறந்து நான் இமாலயத்திற்கு வந்தேன். இப்போதும் இங்கேயும் அதே உலகத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேனே” என்று யோசித்தார்.

பூனையால் தானே இத்தனை பிரச்சினை. அதனால்தான் பூனையை அனுமதிக்கக் கூடாது என்று குரு கூறியதாக மூத்த சீடர் இளைய சீடரிடம் கூறினார்.

எலிகள் எல்லா இடத்திலும் இருக்கவே செய்கின்றன. திரும்பவும் அதே கதைதான் தொடங்கும். அதனால் அமைதியாக இருப்பது நல்லது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்