மனதில் சஞ்சரிக்கும்: சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரமேந்திரர், த்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். அது மட்டுமல்லாமல் பல சங்கீதக் கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். மானஸ சஞ்சரரே இவரது புகழ்பெற்ற கீர்த்தனை ஆகும். இவர், மதுரையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சோமநாத அவதானியார். - தாயார் பார்வதி அம்மையார்.

அவருக்கு பால்ய வயதிலேயே விவாகம் செய்துவைக்கின்றனர். ஆனாலும் 13ஆவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டுவிட்டார். பரமசிவேந்திராள், வேங்கடேச அய்யர் ஆகியோர்களிடம் சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தார். சதாசிவ பிரமேந்திரரின் திறமைகளைக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா, அவரை சமஸ்தான வித்வானாக்கிக் கொண்டார். அவர், தன் வாதத் திறமையால், சமஸ்தானத்தின் மற்ற வித்வான்கள் அனைவரையும் தோற்கடித்தார்.

சதாசிவ பிரமேந்திரரின் இந்நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பரமசிவேந்திராள் குரு அவரை அழைத்து, “ஊர் வாயெல்லாம் அடக்கக் கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்கக் கற்றுக்கொள்ளவில்லையே” எனக் கண்டித்துள்ளார். உடனே சமஸ்தான வித்வான் பதவியைத் துறந்து, மெளனத்தைக் கடைபிடித்தார். மனிதர்கள் அரவமற்ற மலைப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கினார். அங்கு தவத்தில் ஈடுபட்டார். தவத்தின் விளைவாகத் தான், தனது என்ற எண்ணங்கள் நீங்கி ஸ்ததப் பிரக்ஞையை அடைந்தார்.

அதுமுதல் சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரமேந்திரரின் வழக்கமானது. உறக்கம், உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆடைகளைத் துறந்து நடமாடத் தொடங்கினார்.

மகானின் தவ வலிமை

ஒருமுறை கொடுமுடி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ பிரமேந்திரர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் வடிந்த பிறகு மகானைக் காணாததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார் என்றே மக்கள் கருதினர்.

பல நாட்கள் கழித்து, வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒரு புறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தம் வந்ததைக் கண்ட அவர்கள் அஞ்சினர். தோண்டிப் பார்த்தபோது, உள்ளே கண்கள் மூடிய நிலையில் சதாசிவ பிரமேந்திரர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டுச் சென்றுவிட்டார்.

ஜீவ சமாதியான மகான்

ஒரு முறை சதாசிவ பிரமேந்திரர் எல்லையற்ற பிரம்மம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்துவிட்டார். பிரமேந்திரரைப் பற்றி அறியாத மன்னன், கடுங் கோபத்துடன் மகானின் கையை வெட்டிவிட்டார். பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதைக்கூட உணராமல் சென்றுகொண்டிருந்தார். மன்னன் தவறை உணர்ந்து. பிரமேந்திரரிடம் மன்னிப்புக் கேட்டான்.

சதாசிவ பிரம்மேந்திரர், 1753ஆம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் நெரூர் என்னும் ஊரில் ஜீவ சமாதி ஆனார். அங்கு பழமையான அக்னீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் சமாதி அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE