2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் (மேஷம் முதல் கன்னி வரை)

By ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

பொதுப்பலன்

நிகழும் மன்மத வருடம் மார்கழி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை, கிருஷ்ண பட்சத்து சப்தமி திதி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம், சிம்ம ராசி, கன்னி லக்னம் மற்றும் ரிஷபம் நவாம்சத்தில், சௌபாக்கியம் நாம யோகத்தில், பத்தரை நாமகரணத்தில் நேத்திரம் நிறைந்த மந்த யோக நன்னாளில் 2016-ம் ஆண்டு பிறக்கிறது. (2+0+1+6=9) எண் ஜோதிடப்டி 2016-ம் ஆண்டின் கூட்டு எண்ணாக அங்காரகனாகிய செவ்வாயின் ஆதிக்க எண்ணாகிய ஒன்பது வருவதால் இந்த ஆண்டு மிகப் பரபரப்பாக இருக்கும். மக்கள் சின்னச் சின்ன ஆசைகளில் நாட்டம் கொள்வார்கள். சட்டங்கள் கடுமையாகும். கருப்புப் பணத்திற்கு வழி பிறக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் தங்கம் விலை உயரும்.

அன்னிய முதலீடுகள் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். லக்னாதிபதியாகிய புதன் குரு பகவான் வீட்டிலும் குரு பகவான் புதன் வீட்டிலும் பரிவர்த்தனா யோகம் பெற்று அமர்ந்திருப்பதால் பள்ளிக், கல்லுரிகளில் புதிய பாடத்திட்டம் அமலாகும். கல்விக் கடன் பெறும் முறை எளிதாகும். மத்திய மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் திருக்குறள் கட்டாயமாக்கப்படும். செவ்வாயும் சுக்கிரனும் பரஸ்பரம் மாறி அமர்ந்த நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகள் சூடுபிடிக்கும். மக்களிடையே கண், காது, மூக்கு தொடர்பான நோய்கள் அதிகரிக்கும். 27.2.2016 முதல் 9.9.2016 வரை எதிரெதிர் கிரகங்களான செவ்வாயும் சனியும் செவ்வாயின் வீட்டில் சேர்ந்து காணப்படுவதால் தீவிரவாதிகளால் இளைஞர்கள் சீரழிவார்கள்.

குண்டுவெடிப்பு, நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு, ஆட்சி கவிழ்தல், தலைவர்களின் உயிருக்கு ஆபத்து, பருவம் தவறி மழை, கனிம, கரிம வளங்கள் கொள்ளை போகுதல் என்றெல்லாம் நிகழும். சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான அனுஷத்தில் வக்கிரமாவதால் ராமர் கோயில், பாபர் மசூதிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். மதக் கலவரங்களால் நாட்டின் பெருமையும் பொருளாதாரமும் பின்னோக்கித் தள்ளப்படும். அரசியலில் ஆள்பவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாட்டால் போராட்டத்தில் குதிப்பார்கள். கம்ப்யூட்டர் துறை மீண்டும் புத்துயிர் பெறும். சாப்ட்வேர் துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

மேஷம்

மகிழ்ச்சியான நேரத்திலும் எல்லை மீறாதவர்களே! உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் சுக்ரன் அமர்ந்து தனஸ்தானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பண வரவு அதிகரிக்கும். சமயோஜிதமாகப் பேசிச் சமாளிப்பீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டை புதுப்பிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பூர்வீகச் சொத்தைச் சீர்திருத்தம் செய்வீர்கள். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் ஆகியவற்றால் வீட்டில் களைக்கட்டும்.

நம்பிக்கைக்குரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். நட்பு வட்டத்தால் பலனடைவீர்கள். குற்றம், குறைகள் கூறிக்கொண்டிருந்த உறவினர்களின் மனது மாறும். இந்த ஆண்டு முழுவதும் அஷ்டமத்துச் சனி நீடிப்பதால் இனிமையாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம். உங்களுக்கு நெடுங்காலமாக நல்ல நண்பர்களாக இருப்பவர்களை மற்றவர்களுக்கு இப்போது அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.

தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். 08.01.2016 முதல் கேது சாதகமாவதால் இந்த வருடத்தில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் மூலமாக ஆதாயமடைவீர்கள். முடிந்து வைத்திருந்த காணிக்கையைச் செலுத்திப் பிரார்த்தனையை இந்த வருடம் நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பித்து முன்னின்று கும்பாபிஷேகம் நடத்துவீர்கள். 5-ல் ராகு நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை அதிசாரத்திலும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை 6-ம் வீட்டில் குரு மறைவதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வரக்கூடும். வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கி லாக்கரில் பத்திரப்படுத்திவிட்டுச் செல்வது நல்லது. 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வாய்தா வாங்கியதால் தீர்ப்பு தள்ளிப்போன வழக்கு சாதகமாகும். 27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டு பலவீனமடைவதால் குடும்பத்தில் சச்சரவுகள் வரும். பணப் பற்றாக்குறை ஏற்படும். சகோதரர் பாதிப்படைவார். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு ஏற்படும். மார்ச், ஜூலை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். சகிப்புத்தன்மையால் சாதிக்கும் வருடமிது.

ரிஷபம்

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்பவர்களே! உங்கள் ராசியை ராசிநாதன் சுக்கிரன் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் வசதி, வாய்ப்புகள் கூடும். 01.01.2016 முதல் 07.02.2016 வரை அதிசாரத்திலும் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் 5-ம் வீட்டில் அமர்வதால் தன்னிச்சையாக முடிவெடுப்பீர்கள். மகனுக்கு நல்ல பண்புள்ள பெண் மணமகளாக அமைவார். மகளுக்கு இருந்துவந்த மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்று வலி விலகும். குலதெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள்.

உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்வார்கள். சிலர் புது வீட்டில் குடிபுகுவீர்கள். பிள்ளைகளால் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு 4-ல் அமர்வதால் கோபமும், அலைச்சலும், செலவுகளும் அதிகமாகும். 08.01.2016 முதல் ராகு 4-ம் வீட்டிலும், 10-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் தாயாருக்கு நெஞ்சு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடும். உத்யோகத்திலும் சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். முடிந்தவரை இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டு மனை, நிலம் வாங்கும்போது சொத்துக்குரிய தாய்ப்பத்திரத்தைக் கேட்டு வாங்குங்கள். வழக்கு விஷயங்களில் பின்னடைவு ஏற்படும்.

வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்கள் ராசிக்குச் சாதகமான வீட்டில் சந்திரன் நிற்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப இடித்துக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உங்களது ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் குடும்பத்தில் விவாதங்கள் வந்து செல்லும். இந்த ஆண்டு முழுக்க சனி சரியில்லாததால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுங்கள். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் சிலர் பழகுவார்கள். சின்ன விவகாரங்களுக்கு நீதிமன்றம் செல்ல வேண்டாம். பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்.

27.02.2016 முதல் 09.09.2016 வரை உங்களின் சப்தமாதிபதியான செவ்வாயுடன் சனி சேர்வதால் சட்டத்திற்குப் புறம்பாக யாருக்கும் உதவ வேண்டாம். மனைவிக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். சகோதரங்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி மூலமாக விற்றுத் தீர்ப்பீர்கள். ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் அநாவசியப் பேச்சுகள் வேண்டாம். பதவி உயர்வு கிடைக்கும். அயல்நாடு சென்று வருவீர்கள். 9.9.2016 முதல் 25.10.2016 வரை வாகனப் பழுது, விபத்து வந்து நீங்கும். அலுப்பு, சலிப்புகளை அகற்றினால் வெற்றி பெறும் வருடமிது.

மிதுனம்

எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து ஏமாறுபவர்களே! இந்த ஆண்டு முழுக்க சனி வலுவாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிவந்த குழப்பங்கள் தீரும், கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். வேலை கிடைக்கும். பங்குச் சந்தை மூலம் பணம் வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி பேசிப் புகழடைவீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மீதிப் பணத்தைத் தந்து சொத்துப் பத்திரப் பதிவை முடிப்பீர்கள். 08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 9-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் வீடு வாங்கும் கனவு நனவாகும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். உங்கள் ராசிக்கு தைரிய வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

தேர்வில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாளாகக் கேட்டுக்கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகனுக்குத் திருமணம் முடியும். வீடு கட்டுவதற்கான திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும். குரு பகவான் சாதகமாக இல்லாததால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், விபத்து நேரிடலாம். இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வீண் விவாதங்கள் மற்றும் கோபம் வேண்டாம். மன அழுத்தம், டென்ஷன் அதிகரிக்கும். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். நல்லவர்கள் போலப் பேசி உங்களைப் புகழ்பவர்களைத் தள்ளியே வைத்திருக்கவும். ராசிநாதன் புதனும் சூரியனும் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

உறவினர், நண்பர்களில் உண்மையானவர்களை இனங்காணுவீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் பணத்தைத் திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டிவரும். அலுவலகங்களில் வேலைபுரிபவர்கள் கூடுதல் நேரத்தைச் செலவழித்து, பணிக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்ற வேண்டிவரும். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மார்ச், ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கையெழுத்தாகும். உத்யோகத்தில் ஒரு ஸ்திரமற்ற போக்கு நிலவும். மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருக்கிறாரா, பாதகமாக இருக்கிறாரா என்று உணர்ந்துகொள்ள முடியாமல் போகும். நிதானமாகக் கையாண்டால் வெற்றி நிச்சயம். இழந்த சலுகைகளைப் போராடிப் பெறுவீர்கள். வருஷ ஆரம்பத்தில் மலையாய் தோன்றிய விவகாரங்கள் வருட இறுதியில் பனியாய் மறையும். திட்டமிட்டுச் செயல்பட்டால் முன்னேறும் வருடமிது.

கடகம்

காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! சுக்கிரன் வலுவாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால் குடும்ப வருமானம் உயரும், சோர்வு நீங்கும், கணவன் மனைவிக்குள் இடைவெளி குறையும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பதவி உயர்வுகள் உண்டு. அலுவலகம் வழியாகவே அயல்நாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வருடம் முழுக்க சனி உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டிலேயே நிற்பதால் பிள்ளைகளின் பிடிவாத குணம் அதிகமாகும். அவர்களைப் பாதை மாறாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் இயல்பாகப் பேசிப் பழகுவதற்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்குவது நல்லது. அவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டாமல் அவர்களின் திறமைகளையும் நீங்கள் பாராட்டிப் பேசுவது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது பயம் வரும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்த வகையில் பணம் வந்து எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் புகழ், கவுரவம் ஒரு படி உயரும். புதிய பதவிகள் தேடி வரும். சகோதரர்களுக்குள் நிலவிவந்த போட்டி பூசல்கள் விலகும். விலை உயர்ந்த மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். புது மனை வாங்கும் யோகம் உண்டு. நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும். 08.01.2016 முதல் ராகு பகவான் 2-ம் வீட்டிலும், கேது 8-ம் வீட்டிலும் அமர்வதால் கண் பார்வையைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். பல் ஈறு வீக்கம், கணுக்கால், காது, மூக்கு வலி வந்து போகும். அநாவசியப் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. பரிச்சயமில்லாதவர்களிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது மறவாமல் தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்.

தானே முயன்று முன்னுக்கு வரப்பாருங்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரைக் கலந்தாலோசித்துப் புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பழைய பங்குதாரர் விலகுவார். சந்தைக்கு வரும் புதிய பொருட்களை விற்று லாபம் காண்பீர்கள். கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வுடன், வேலைச் சுமையும் கூடும். இடம் மாற்றம் கிடைக்கும். இருப்பதை வைத்து நிம்மதி அடையும் மனதால் மற்றவர்களைக் கவரும் வருடமிது.

சிம்மம்

ஆளும் குணமும், ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த வாகனங்கள், மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். கைமாற்றாகவும் கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். மெடிகிளைம் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. 08.01.2016 முதல் ஜென்ம ராசிக்குள் ராகுவும், 7-ம் வீட்டில் கேதுவும் அமர்வதால் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ளுங்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வெற்றுத் தாளில் கையொப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.

கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சினையால் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அரசாங்க விஷயம் தாமதமாகி முடியும். இந்த வருடம் முழுக்க அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். செவ்வாயும், சனியும் 27.02.2016 முதல் 9.9.2016 வரை 4-ல் தொடர்வதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும், சேமிப்பு கரையும், உங்களின் அடிப்படை குணம் மாறும். வீண் விவாதங்கள் வேண்டாம். வழக்கிலும் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்வதால் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அறிவுபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

குழந்தை பாக்கியம் உண்டு. ஆனால் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை குரு உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். டிசம்பரில் வாகன விபத்துகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் புதிய பொறுப்புகளால் திணறுவீர்கள். கண்டும் காணாமல் சென்றுகொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். உழைப்புக்கேற்ற அந்தஸ்தைப் பெறுவீர்கள். சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் பேசி ராஜதந்திரத்தால் சாதிக்கும் வருடமிது.

கன்னி

இனம், மொழி, மதம் எனப் பாகுபாடு பார்க்காமல் அனைவருடனும் சகஜமாகப் பேசி உதவுபவர்களே! உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும் பயணங்களும் உங்களைத் துரத்தும். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நீங்கள்தான் முன்னின்று நடத்த வேண்டிவரும். உங்கள் குடும்பத்தினரைப் பற்றி மற்றவர்களிடம் குறைத்துப் பேச வேண்டாம். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இந்த ஆண்டு முழுக்க சனி ஆதரவாக இருப்பதால் எதிரணியில் இருப்பவர்களும் ஆதரிப்பார்கள். கம்ப்யூட்டர், லேப்டாப் என பல எலக்ட்ரானிக் சாதனங்களைப் புது மாடலில் வாங்குவீர்கள். சமையலறையையும், படுக்கை அறையையும் அதிகம் செலவு செய்து நவீனமாக்குவீர்கள். புது வேலை கிடைக்கும்.

மார்ச் மாதம் முதல் யோகப் பலன் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமணமும் கூடிவரும். 08.01.2016 முதல் ராகு 12-ம் வீட்டிலும், கேது 6-ம் இடத்திலும் மறைவதால் எதிரும் புதிருமாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள். மாதக்கணக்கில் தள்ளிப்போய்க் கொண்டிருந்த வேலைகளெல்லாம் முடிவடையும். கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை குரு அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை ஜென்ம குருவாகத் தொடர்வதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த பாருங்கள். மஞ்சள் காமாலை, வாயுக் கோளாறால் நெஞ்சு வலி, சிறுநீரகத் தொற்று வரக்கூடும். நடைப் பயிற்சி அவசியமாகிறது. உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக்கொள்வீர்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை தருவது நல்லது. ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் மறைவதால் மாதம் தவறாமல் அசலைச் செலுத்தினாலும் வட்டி கூடிக் கொண்டே போகிறதே என்று அச்சப்படுவீர்கள். 27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாயுடன் சனி சேர்வதால் தைரியம் பிறக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்யப்பாருங்கள். உத்யோகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாகும். இந்த புத்தாண்டு புதிய பாதையில் பயணித்துப் புதிய நண்பர்களால் சாதிக்க வைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்