அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு ஸ்வாமி மலையில் ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்ப’னாக முருகப் பெருமான் ஒரு சிறு குன்றின் மேல் நின்று அருள்பாலித்துவருகிறார். கோயில் நகரமான கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவலஞ்சுழிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அருள்மிகு ஸ்வாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில்.
கண்ணில் கருணையும் கையில் கதிர்வேலும், அபிஷேக விபூதி மணக்கும் திருவுருவும் கழுத்தில் ருத்திராட்ச மாலையும் அணிந்து, இங்கு ஸ்வாமிநாத ஸ்வாமியாகக் காட்சி தருகிறார் முருகன்.
60 அடி உயரமுள்ள சிறிய செயற்கைக் குன்றின் மேல் அமைந்துள்ளது இக்கோயில். மூன்று வாயில்களும் மூன்று பிராகாரங்களும் கொண்டது. தெற்கு நோக்கிய நுழைவாயிலுக்கு, ஸ்தல புராணக் கதைகள் வடிவமைந்துள்ள பெரிய சுதைக் கோபுரம் உள்ளது. நுழையும்போதே பக்தர்களுக்கு அன்னை மீனாட்சியின் அருள் பார்வை படும்படி சன்னிதி அமைந்துள்ளது.
தனயனின் சீடனாக சிவபெருமான்
அருகில் கிழக்கு நோக்கிய சன்னிதியில், தனயனின் சீடனாக இத்தலத்தில் எழுந்தருளும் சிவபிரான், அருள்மிகு சுந்தரேஸ்வரர் என்ற நாமத்துடன், லிங்க ரூபமாகக் காட்சியளிக்கிறார். இதைச் சுற்றி தக்ஷிணாமுர்த்தி, விநாயகர், நவக்கிரக சன்னிதிகள் அமைந்துள்ளன. நெல்லி மரம் இங்கே ஸ்தல விருட்சமாக உள்ளது.
இந்தக் கீழ்த்தளத்திலிருந்து 60 படிகள் ஸ்வாமிநாத சுவாமி சன்னதிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. இவை 60 வருடங்களைக் குறிப்பதாக அமைந்துள்ளன. இந்தப் படிகள் நடுவில் பிளவுபட்டு இரண்டாவது பிராகாரத்திற்கு நம்மைச் செலுத்துகின்றன. இதில் ஒரு பிரதட்சிணம் செய்து மீண்டும் விட்ட படியில் ஏறிச் சென்றால் கண்ணெதிரே நேத்ர கணபதியின் சன்னிதி உள்ளது. இவரது பிரகாசம் நம் கண்களில் பட்டுக் கண்ணின் மணிகளுக்கு ஒளி, தரும் சக்தி பெற்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை. தீர்த்தத்திலும் நேத்ரா தீர்த்தம் என்று ஒன்று உள்ளது.
அரோகரா கோஷம்
தும்பிக்கையானிடம் அனுமதி பெற்று முன்னே சென்றால் நம்மை சுவாமிநாதஸ்வாமியின் சன்னிதியின் மகாத்துவாரம் நம்மை வரவேற்கிறது. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷம் விண்ணை முட்ட, அடியார் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு ஆறு கால பூஜைகளும் முறையாக நடைபெறுகின்றன. கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை தீபம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, நவராத்திரி, பிரம்மோத்சவம் போன்ற பண்டிகைகளும் திருவிழாக்களும் ஆகம நெறிகளின்படி விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. நக்கீரர், அருணகிரிநாதர், முத்துஸ்வாமி தீட்சிதர், பிரம்ம அனந்தராம தீட்சிதர் போன்ற பலப்பல மகான்களால் பாடப்பட்ட பெருமை இத்தல மூர்த்திக்கு உண்டு.
சிவமைந்தன் சிவகுருநாதன் ஆன கதை
ஒரு சமயம் ஓம்காரத்தின் அர்த்தத்தை முருகன் பிரம்மதேவனைக் கேட்டார். அதற்கு சரியான விடை தெரியாமல் அவர் முழிக்க, குஹனுக்குக் கோபம் பொங்கி வந்து, பிரம்மனின் தலையில் ஒரு குட்டு குட்டிச் சிறையில் தள்ளினாராம். இதை அறிந்த சிவபிரான் விரைந்து வந்து முருகனைக் கடிந்துகொண்டார்.
“தந்தையே !ஓம் என்ற பிரணவ மந்திரத்துக்குக் கூட பொருள் தெரியாத பிரம்ம தேவர், படைக்கும் தொழிலை எப்படிச் செவ்வனே செய்ய முடியும்? அதனால் தான் அவரைச் சிறையில் அடைத்தேன்” என்றார் முருகன்.
வெகுண்டெழுந்த பரமன், “உனக்குத் தெரியுமா அதன் அர்த்தம்? தெரிந்தால் சொல்லேன் பார்க்கலாம்” என்று மகாதேவன் கேட்டார்.
சிவ சக்தி ஐக்கியத்தின் விளைவால் பிறந்த முருகன், “உங்களுக்கு அதை நான் உபதேசம் செய்ய வேண்டுமானால், நீங்கள் சீடனாக அமர்ந்து நான் குருவாக உங்கள் செவியில் சொல்லுவது தானே நெறி?” என்று அமைதியாகக் கூறினானாம்.
“நீ குட்டிக் குழந்தையாயிற்றே? உன் மடியில் நான் உட்கார்ந்தால் நீ எப்படி என் காதில் ஓதுவாய் மகனே?” இது சிவனாரின் கேள்வி.
“அப்படியெனில், என்னை நீங்கள் தூக்கி மடியில் வைத்துக்கொள்ளுங்கள். அங்கிருந்து உங்கள் செவியில் பிரணவத்தின் பொருளைச் சொல்கிறேன்” என்றான் முருகன்.
அப்புறம் என்ன? எடுத்த நாடகத்தை இனிதே முடிக்கும் வகையில், முக்கண்ணன் பாலமுருகனைத் தன் மடியில் அமர்த்த, சிவபாலன் அவரது செவியில் ஓம்காரத்தின் தத்துவத்தை விளக்கி குருநாதனாக, ஞானஸ்கந்தனாக நின்ற மலையே ஸ்வாமிமலை க்ஷேத்திரம்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
12 days ago
ஆன்மிகம்
18 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
20 days ago
ஆன்மிகம்
21 days ago
ஆன்மிகம்
25 days ago