மேடையில் அவதரித்த
 விநாயகர்கள்

பிள்ளையாரின் பதினாறு சொரூபங்களைப் பார்த்திருக்கிறீர்களா? கோவிலில் அல்ல, மேடையில் அவற்றைப் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. பிரியங்காவின் அற்புதமான அபிநயங்களில் பதினாறு விதமான விநாயகர்களும் மேடையில் எழுந்தருளினார்கள். ரசிகர்கள் மெய்மறந்துபோனார்கள்.

சென்னை கல்சுரல் அகாடமியின் சார்பில் நடைபெற்ற பிரியங்கா சாய்ஷங்கரின் நடன நிகழ்ச்சியில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பல விதங்களிலும் அலாதியான நடன நிகழ்ச்சியாக அமைந்தது. ‘வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா’ என்ற விநாயகர் ஸ்துதியைக் கொண்டு நடனத்தைத் துவக்கிய பிரியங்கா, அதனைத் தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ‘மஹாகணபதிம் மனசா ஸ்மராமி’ என்ற கீர்த்தனையை எடுத்துக்கொண்டு நடனம் ஆடினார்.

இந்தக் கீர்த்தனையில் ‘ஷோடச கணபதி’ என்று ஒரு வரி வரும். பதினாறு கணபதிகள் என்று இதற்குப் பொருள். பார்ப்பவர் கண் முன்னே 16 கணபதிகளின் திருவுருவங்களையும் கொண்டுவந்து நிறுத்தி, தரிசனம் செய்யவைத்தார் பிரியங்கா. இப்படி ரசிகர்களை பக்தர்களாக மாற்றிய பிரியங்கா அடுத்து, மறைந்த சங்கீத மாமேதை மதுரை னிவாசன் இயற்றிய, நளினகாந்தி ராகத்தில் அமைந்த வர்ணத்திற்கு ஆடினார் பாருங்கள்! அப்படியொரு அற்புதமான நடனம். அன்றைய நிகழ்ச்சியின் விசேஷ முத்திரை அதுதான்.

திருப்பதி வேங்கடேசப்பெருமாளின் மீது அமைந்த அந்த வர்ணத்தில் அவர் காட்டிய பாவங்கள் அசாத்தியமானவை. ஏழு மலைகள், திருப்பதி ஏழுமலையான் பத்மாவதித் தாயாரை மணந்துகொண்டது, பெருமாள் வராஹ அவதாரம் எடுத்து பூமியைக் காப்பாற்றியது, தேவர்கள் பார்க்கடலில் பள்ளிகொண்ட விஷ்ணுவை வணங்குவது, திருமாலின் மார்பில் குடிகொண்ட தேவி, என்று அனைத்தையும் தனது சிறப்பான அபிநயத்தில் கொண்டு வந்து விட்டார் பிரியங்கா.

அதன் பிறகு உளுந்தூர்ப் பேட்டை ஷண்முகத்தின் ‘சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை தனை உடுத்தி’ என்ற பாடலில் துர்காதேவியை அவர் அபிநயித்தபோது பார்வையாளர்கள் பிரமித்துப்போனார்கள். பின்னர் ‘அதலசேதனாராட’ என்ற திருப்புகழுக்கும் கபீர் தாசரின் ‘குருகிருபான்சனே’ என்ற பஜனைப் பாடலுக்கும் மிகச் சிறப்பாக ஆடினார். திருப்புகழுக்கு ஆடியபோது அவரது நிருத்தம் அருமையாக இருந்தது.

‘ஹரிவராசனம்’ என்ற ஐயப்பன் துதியுடன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார் பிரியங்கா. குரலிசையில் கிரிஜா ராமசாமியும், வயலினில் எம்.எஸ். கண்ணனும், குழலிசையில் சசிதரனும், மிருதங்கத்தில் நெல்லை கண்ணனும் அருமையாக ஒத்துழைப்பு தந்தனர்.

தேர்ந்த நடனமணி போல் நடனமாடும் ப்ரியங்கா பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ப்ரியங்காவுவின் குரு அவரது அன்னை கற்பகவல்லி. அன்று நட்டுவாங்கம் செய்தவரும் அவரே. இத்தனை சிறிய வயதில் பாடலின் பாவங்களை உணர்ந்து இவ்வளவு சுத்தமான நடனத்தை வழங்கிய பிரியங்கா நடனத்தில் பல சாதனைகள் படைப்பார் என்பதற்குக் கட்டியம் கூறுவதுபோல் அமைந்தது அன்றைய மாலை நிகழ்வு.

பிரியங்காவின் அன்னையும் குருவுமான கற்பகவல்லி சாய் ஷங்கர் சமீபத்தில் தமிழிசைச் சங்கத்தில் ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் பெற்ற கிருஷ்ணகுமாரி நரேந்திரன், குரு உடுப்பி லக்ஷ்மி நாராயணன் ஆகியோரின் மாணவி. அமெரிக்காவில் நார்த் கரோலினா பகுதியில் உள்ள ராலே என்னும் நகரில் ‘குருகிருபா ஸ்கூல் ஆப் இந்தியன் டான்ஸ்’ என்ற பரதநாட்டியப் பள்ளியை நிறுவிச் சிறப்பாக நடத்திவருகிறார்.

இவரிடம் சுமார் நாற்பத்து ஐந்து மாணவிகள் நடனம் பயில்கின்றனர். அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற நடனமணிகளுள் இவரும் ஒருவர். மேலும் துபாய், சிங்கப்பூர், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு அவ்வப்போது இவரும் இவரது மகளும் நடன நிகழ்ச்சி நடத்துவதற்காகவும் நடனம் பயிற்றுவிப்பதற்காகவும் செல்வது வழக்கம். இவர் புரந்தரதாசர் என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அதற்காகத் தமிழக அரசின் சிறந்த நடிகை என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்