ஜூன் 19: ஸ்ரீ ரங்கம் ஜேஷ்டாபிஷேகம்
திவ்ய தேசங்களான 108 திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம். காவிரி, கொள்ளிடம் ஆறுகள் இத்தலத்தைப் பூ மாலை போல் சுற்றிச் செல்வது இந்தத் தலத்துக்கு அபரிமிதமான இயற்கை அழகை வழங்குகிறது.
தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் கொண்டது இத்திருக்கோயில். ஏழு மதில் சுவர்களும், 21 கோபுரங்களும் கொண்ட இத்திருக்கோயில், பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர்.
தல வரலாறு
ஸ்ரீரங்கம் கோயில் விமானம் சுயம்புவாக, பிரம்மாவின் தவப் பயனால், திருபாற்கடலில் இருந்து வெளிவந்தது என்கிறது ஸ்ரீரங்க மகாத்மியம். இந்த விமானத்திற்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார் பிரம்மா. சூரியன் பல்லாண்டு காலம் பூஜை செய்து வர, சூரிய குலத்தில் பிறந்த இட்சுவாகு என்ற மன்னன் அயோத்திக்கு இவ்விமானத்தை எடுத்து வந்தான். சூரிய குலம் இட்சுவாகு குலம் என்றும் அழைக்கப்பட்டது. அக்குலத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீராமன்.
கைமாறிய குலச் சொத்து
ராவணனை வென்று, சீதையை மீட்டு இலங்கையைத் தன் வசப்படுத்திய ஸ்ரீராமருக்கு, அயோத்தியில் பட்டாபிஷேகம். அதனைக் காண வந்தவர்களுக்கெல்லாம் பரிசுப் பொருட்களை வாரி வழங்கினார் ராமர். அந்த வகையில், ராவணன் தம்பி விபீஷணனுக்கு, தான் பூஜித்துவந்த ஸ்ரீரங்க விமானத்தைக் கொடுத்தார் ராமர். சூரிய குலச் சொத்து அன்புப் பரிசாகக் கை மாறியது.
அதனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினான் விபீஷணன். அப்படியே தன் நாடு நோக்கிக் கிளம்பினான். ஆகாய மார்க்கமாகச் சென்ற அவன், இயற்கை எழில் கொஞ்சும் தற்போதுள்ள ஸ்ரீரங்கத்தைக் கண்டான். அங்கு சந்தியாகால பூஜை செய்ய, ஆற்றங்கரையை அடைந்தான்.
தலையிலிருந்த விமானத்தை இறக்கி வைத்தான். நீரில் இறங்கி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். பின்னர் வந்து விமானத்தைத் தூக்க முயல, அவ்விமானம் தரையோடு ஒட்டிக்கொண்டது.
அங்கு ஆண்டு வந்த மன்னன் தர்மவர்ம சோழனிடம், இதனை பெயர்த்து எடுத்துத் தர உதவி கோரினான் விபீஷணன். மன்னனும் தனது படைவீரர்களைக் கொண்டு பெயர்க்க முயல, அசீரீரி கேட்டதாம். தான், தென் திசையில் உள்ள இலங்கையை நோக்கிப் பள்ளி கொண்டருளுவதாகக் கூறினாராம் ஸ்ரீரங்கநாதர். அதனையடுத்து அவ்விமானத்தை சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்துவந்தான் தர்மவர்ம சோழன் என்கிறது தலபுராணம். தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டதைப் பாசுரமாக்கி உள்ளார்.
கோயில் ஒழுகு
காவிரிக்கரையில், உலா வந்தான் கிளிச் சோழன். அப்போது அங்கே மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று, செய்யுளொன்றைத் திருப்பித் திருப்பிக் கூறியது. வைகுந்தத்தில், பெருமாள் இருந்த கோயில் இங்குள்ளது. அதனை இன்றும் காணலாம் என்று அச்செய்யுளின் பொருள் இருந்தது. இதனை அறிந்த கிளிச் சோழன், அவ்விடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய, விமானத்துடன் தர்மவர்மன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் மீண்டெழுந்தது என்கிறது கோயில் ஒழுகு என்ற நூல்.
தற்போது உள்ள ஸ்ரீரங்கம் கோயிலில் நடைமுறையில் உள்ள செயல்பாடுகள் அனைத்தையும் சீர்படுத்தி மேம்படுத்தியவர் உடையவர் என்று பெருமாளால் அழைக்கப்பட்ட ஸ்ரீராமானுஜர். வரலாற்றுப் பெருமை கொண்ட இந்த கோயிலில்தான் ஜூன் மாதமான இம்மாதம் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஜேஷ்டாபிஷேகம் காண்டல்
ஸ்ரீரங்கம் மூலவர் ரங்கநாதப் பெருமாள் சயனத் திருக்கோலம் கொண்டவர். இந்த சிலா ரூபம் சுதையால் ஆனது. அதனால் மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை தைலம் அதாவது எண்ணெய்ப் பூச்சு செய்வார்கள். இதற்கு ஏதுவான நாள் நட்சத்திரமாக கொண்டு ஜேஷ்டாபிஷேகம் என்று பெயரிட்டுள்ளனர். இவ்வாண்டு இந்த ஜேஷ்டாபிஷேகம் ஜூன் 19 ம் தேதி வருகிறது.
பெருமாளின் திருமுகத்தையும், திருமேனியையும் சுத்தம் செய்து, தைலத்தை அழகாகப் பூசுவார்கள். பின்னர் திருமுகம் மட்டும் காட்சி அளிக்க, திருமேனியை வெளிக் காட்டாமல் மறைத்து விடுவார்கள். தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்கள் மூலவர் தைலக்காப்பில் இருக்கும்பொழுது, உற்சவர் புறப்பாடு கிடையாது.
நாற்பத்து எட்டு நாட்கள் நிறைவு பெறுவதை ஒட்டி, தொடந்து வரும் பத்து நாட்களுக்கு பெருமாளுக்குச் சாந்து காப்பு இடுவார்கள். இதுவும் தைலம்தான், என்றாலும் கெட்டியாக இருக்கும். இந்தக் காப்புகள் முடிந்த பின் பெருமாள் திருமேனி விகசித்து ஜொலிக்கும். இந்தப் பத்து நாட்கள் உற்சவர் புறப்பாடு உண்டு. தீபாவளித் திருநாளை ஒட்டி, ஸ்ரீரங்கநாதப் பெருமாளின் திருமுக தரிசனத்துடன் திருமேனி தரிசனத்தையும் முழுமையாக காணலாம் என்பது பக்தர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago