தாய்மொழியைக் கொண்டாடிய சமணம்

By ஆதி

பழங்காலத்தில் சமணச் சமயம் தமிழகத்தில் செழித்து வளர்ந்து இருந்ததற்கு முக்கியக் காரணம், சமணச் சமயத்தினர் மேற்கொண்ட தாய்மொழிப் பிரச்சாரம்.

சமணச் சமயத்தினரும் பௌத்தச் சமயத்தினரைப் போலவே, எந்தெந்த நாட்டுக்குப் போனார்களோ, அந்தந்த நாடுகளில் புழங்கிய தாய்மொழியில் தங்கள் மதநூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதாக இந்த மதத்தின் கொள்கைகளை அறிந்துகொண்டு பின்பற்ற முடிந்தது.

அதேநேரத்தில், வைதீக மதத்தின் மத நூல்கள் மக்களுக்குப் புரியாத மொழியில் எழுதப்பட்டிருந்தன. அந்த நூல்கள் அனைவரும் படிக்கும் வண்ணம் கட்டுப்பாடுகள் அற்றதாகவும் இல்லை. சமண மதத்தினர், தமிழில் தங்கள் மத நூல்களை மொழிபெயர்த்து அளித்தது மட்டுமில்லாமல், தமிழிலேயே பல நூல்களை இயற்றினார்கள். இதனால் தமிழகத்தில் அந்த மதம் செழித்துப் பரவியது.

மக்கள் அறியாத வேற்று மொழியில், மதக் கொள்கைகளை எழுதுவது மன்னிக்க முடியாதக் குற்றம், பெரும்பாவம் என்று சமணர்கள் கருதியிருக்கிறார்கள். அதனால்தான் தங்கள் மத நூல்களை மக்கள் பேசும் தாய்மொழியில் எழுதினார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். இந்தச் சம்பவம் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய 'சமணமும் தமிழும்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது:

உஜ்ஜைனி நாட்டு அரசனுடைய அவையில், வடமொழியைக் கற்றுத் தேர்ந்து, புகழுடன் விளங்கிய சித்தசேன திவாகரர் என்ற பிராமணர் இருந்தார். அதே காலத்தில், அவரைப் போலவே கற்றுத் தேர்ந்து புகழுடன் வாழ்ந்து வந்தார் விருத்தாதி முனிவர் என்ற சமணத் துறவி.

இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து, விவாதம் செய்து, இவர்களில் யார் அதிகமாகக் கற்றுத் தேர்ந்தவர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் இருந்தனர். அந்தக் காலத்தில் துறவிகள் இடையே விவாதம் செய்து, அதில் வெற்றி பெறும் பழக்கம் இருந்தது. அதுவே இன்றைய பட்டிமன்றத்தின் வேர். இந்த விவாதம் மக்கள் முன்னிலையில் நடக்கும்.

நெடுநாட்கள் சென்ற பிறகு, இருவரும் ஒருவரையொருவர் காண நேரிட்டது. இருவரும் விவாதம் செய்ய ஒப்புக்கொண்டு, இருவரில் யார் தோற்கிறார்களோ அவர், மற்றவருக்குச் சீடராகச் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு விவாதத்தைத் தொடங்கினார்கள். இந்த விவாதத்தில் வெற்றி, தோல்வியை முடிவு செய்யக்கூடிய நடுநிலையாளர்களாக விவாதம் நடந்த ஊர் பொதுமக்கள் இருந்தனர்.

சித்தசேன திவாகரர் தனது வடமொழிப் புலமையை வெளிப்படுத்த நினைத்து வடமொழியில் தன் வாதத்தை முன்வைத்தார். விருத்தாதி முனிவரோ, வடமொழியை நன்கு அறிந்திருந்தும், அந்த மொழியில் அவர் விவாதம் செய்யவில்லை. விவாதம் நடந்த ஊரிலிருந்த பொதுமக்கள் பேசிய தாய்மொழியில் தனது கருத்தை முன்வைத்தார். இந்த விவாதத்தில் வெற்றி பெற்றவர் விருத்தாதி முனிவர்தான் என்று மக்கள் முடிவு செய்தனர். முன்பே ஒப்புக்கொண்டபடி விருத்தாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.

அதன் பிறகு சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் படித்து வந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த சமணச் சமய நூல்களை வடமொழியில் மொழிபெயர்க்கலாமே என்று தன் குரு விருத்தாதி முனிவரிடம் கேட்டார். ஆனால், விருத்தாதி முனிவர் அப்படிச் செய்ய வேண்டாம் என்று தடுத்தார்.

மக்கள் பேசும், படிக்கும் அர்த்தமாகதி மொழியில் உள்ள நூல்களை வடமொழியில் எழுதி, மக்கள் புரிந்துகொள்ள முடியாதபடி செய்வது பெரும்பாவம் என்று விருத்தாதி முனிவர் விளக்கினார். தனது குரு சொன்ன கூற்றில் இருந்த உண்மையை உணர்ந்த சித்தசேன திவாகரர், தான் செய்ய இருந்த தவறுக்குப் பிராயச்சித்தமாகப் பன்னிரெண்டு ஆண்டுகள் மௌனவிரதம் இருந்தார்.

இந்தக் கதை எடுத்துரைப்பது போலத் தமிழகத்தில் இருந்த சமணத் துறவிகள் தாய்மொழியில் தங்கள் மதக் கொள்கைகளை எடுத்துரைத்தார்கள். அது மட்டுமில்லாமல் நீதிநூல்கள், நிகண்டுகள், காவியங்கள் உள்ளிட்டவற்றைத் தமிழில் எழுதினர். அதுவே சமணச் சமயம் அக்காலத்தில் தமிழகத்தில் பரவக் காரணமாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்