முன் அறிவித்த நபிகள்

1400 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள். திருக்குர் ஆனின் 30ஆவது அத்தியாயம் சூரத்து ரூம் எனும் அத்தியாயத்தின் முதல் நான்கு வசனங்கள் அருளப்பட்டன.

“ரோம் வெற்றி கொள்ளப்பட்டது.

(உங்களுக்கு) அருகில் உள்ள பூமியில்.

சில ஆண்டுகளில் மீண்டும் ரோம் வெற்றியடையும்.

இதற்கு முன்னரும் இதற்குப் பின்னரும் (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது”.

இதுதான் அந்த வசனங்கள். அன்றைக்கு ரோமாபுரியும், பாராசீகமும் உலகின் இரு பெரும் வல்லரசுகள். எந்த நாட்டை யார் ஆள்வது என்பது குறித்து இரு வல்லரசுகளுக்கும் இடையில் ஆதிக்க போர் இடை விடாது நடந்துகொண்டிருந்த நேரம். இந்நிலையில் நபிகள் நாயகத்தின் நபித்துவ ஆண்டுகளின் மத்திய பகுதியில் ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்கும் சிரியா பகுதியில் நடைபெற்ற போரில் அன்றைக்கு பாரசீகம் பெரிய வெற்றி அடைந்தது.

இந்தச் செய்தி அரேபியாவுக்கு வந்து சேர குறைந்தது மூன்று தினங்களாவது ஆகும் என்ற நிலையில் பாரசீகர்கள் வெற்றி பெற்ற அன்றைய தினமே நபிகள் நாயகம் இதை அறிவித்தார்கள். இது அவரது விசுவாசிகள் மத்தியில் ஆச்சர்யமான செய்தியாகும். அதே நேரம் இறை மறுப்பாளர்கள் மத்தியில் முஹம்மதைப் பைத்தியக்காரன் என்று கூறிட மற்றொரு துருப்புச் சீட்டாக இந்த செய்தி பயன்பட்டது.

பின்னாட்களில் பாரசீகம் வெற்றி பெற்ற செய்தி முறையாகக் கிடைத்து எதிர்ப்பாளர்கள் வாயடைத்துப் போனார்கள். நடைமுறைக்கு மாற்றமான முறையில் முஹம்மதால் இந்தச் செய்தியை எப்படிக் கூற முடிந்தது? இவர் இறைத் தூதர் என்பதற்கான மற்றொரு சான்றாகத்தான் வரலாறு இதைப் பார்க்கிறது.

ரோமாபுரி மீண்டும் வெற்றி அடையும் என்ற மற்றொரு முன்னறிவிப்பையும் இந்த வசனம் கூறுகிறது. இந்த வசனத்தில் உள்ள “பிழ் அ சினீன்” என்ற வார்த்தை பத்தாண்டுகளை (decade) குறிக்கும். உண்மையில் அடுத்த பத்தாண்டுகள் நிறைவடையும் முன்னர் ரோமாபுரி, பாரசீகத்தை வென்றதன் மூலம் இது இறை வசனம்தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆனது.

அன்றைய நாளில் விசுவாசிகள் மகிழ்வார்கள் என்றும் இந்த வசனம் கூறுகிறது. உண்மையில் ரோமானியர்கள் வென்ற நாட்களில் தான் அரேபியாவில் பத்ரு போர் நடந்தது. இப்போரின் வெற்றி முஸ்லிம்களுக்கு உண்மையான வரலாற்று வெற்றியாகும்.

இந்த முன்னறிவிப்பு மூலமாகவும் குர் ஆன் இறைவேதம் என்பதும், நபிகள் நாயகம் இறைத்தூதர் என்பதும் அன்றைய நாட்களிலேயே நிரூபணமாயின.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE