சொர்க்கம் - தாயின் காலடியில்

தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன பொன்மொழி. தாயின் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்பது இதன் பொருளாகாது. மாறாக, தாயை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, தாய்க்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

நபிகளாரிடம் நண்பரொருவர் வந்தார். “இறைத்தூதர் அவர்களே! அறப்போரில் கலந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து தங்களிடம் ஆலோசிக்கவே வந்தேன்” என்றார். அப்போது நபிகளார், “உமக்கு அன்னை இருக்கிறாரா?” என வினவ, அவர் ‘ஆம்’ என்றார். அப்போதுதான். “தாயை (முதலில்) கவனி! சொர்க்கம் அவரது காலுக்கு அடியில் உண்டு” என்றார்கள். நபியவர்கள். (நஸயீ)

மனிதன் பிறப்பதற்கு, இறைவனுக்கு அடுத்து தாய்தான் காரணம். அவனை வயிற்றில் சுமந்து, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்குவதற்குள் தாய் படும்பாடு சொல்லி மாளாது. உலகத்தில் சுயநலமே கலக்காத ஒரு தியாகி உண்டென்றால், அது தாயாகவே இருக்க முடியும். தியாகத்தின் மொத்த உருவம் தாய்தான். அந்தத் தியாகச் சுடரை நீருற்றி அணைக்கலாமா?

இதனாலேயே இறைவன் தன் திருமறையில் இப்படிக் கூறுகின்றான்: பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் அறிவுறுத்தினோம். அவனை, அவன் தாய் சிரமத்துடனேயே சுமந்தாள்; சிரமத்துடனேயே பெற்றெடுத்தாள். அவனை (வயிற்றில்) சுமப்பதற்கும் பால்குடி மறக்கவைப்பதற்கும் முப்பது மாதங்கள் பிடிக்கின்றன். (46:15)

தாய், தந்தையை எப்படி நடத்த வேண்டும்; எப்படி நடத்தக் கூடாது என்பதை இறைவன் ஒரு வசனத்தில் தெளிவாகக் குறிப்பிடுகின்றான்:

பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை நோக்கி, ‘ச்சீ’ என்றுகூடச் சொல்லிவிடாதீர்; அவர்களை விரட்டாதீர்; அவர்களிடம் கண்ணியமான சொல்லையே சொல்வீராக. பணிவு எனும் சிறகைக் கனிவுடன் அவர்களுக்காகத் தாழ்த்துவீராக! (17:23,24)

இந்தியாவில் 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 12 கோடிப் பேர் இருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். தமிழகத்தில் 1991இல் இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சம். இவர்களில் 60 விழுக்காட்டினர் உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றி தவித்தனர் என்றது ஒரு புள்ளி விவரம்.

பிள்ளைகள் வசதி வாய்ப்போடு வாழ்ந்தும், முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 50 கட்டண முதியோர் இல்லங்கள் உள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாய், தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்வதன் மூலம்) யார் சொர்க்கம் செல்லத் தவறிவிட்டானோ அவன் பேரிழப்புக்குரியவன். (ஸஹீஹ் முஸ்லிம்)

நாமும் ஒருநாள் முதுமை அடைவோம்; இன்றைக்கு நம் தாயை, தந்தையை எப்படி நாம் நடத்துகிறோம் என்பதை நம் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். நமது முதுமையில் நம்மை அவர்கள் அப்படித்தானே நடத்துவார்கள் என்பதை யோசித்து, தாய், தந்தையரைக் கண்போல் காப்போம். அவர்களின் மனம் நோகாமல் நடப்போம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

16 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

18 days ago

ஆன்மிகம்

19 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

23 days ago

ஆன்மிகம்

24 days ago

மேலும்