அருணோதயத்திலேயே காற்றினில் வந்த கீ்தமாய் சுப்ரபாதம். எம்.எஸ். சுப்புலஷ்மியின் தேனினும் இனிய குரலில். அதுவோ புரட்டாசி மாதம். கிருஷ்ணா நதியில் ஸ்நானம், யக்ஞ வாடிகையில் பானம். பெரிய காத்திரமான டம்ப்ளர் டபரா. டம்ளரில் நுரை பொங்க சுடச் சுட காபி. அமிர்த சொட்டுக்களின் அவரோகணம். மட்டபல்லிநாதனைக் காண மனம் விழைந்தது. சுற்றி வர மா… என்ற பசுவின் குரல் சுருதி சுத்தமாகக் கேட்டது.
யக்ஞ வாடிகையில் இருந்து அர்ச்சக சுவாமிகளின் குரல் கணீரென்று ஒலித்தது. மட்டபல்லிநாதனின் திருமஞ்சனம். இப்போது நடக்கும் போய்விட்டு வந்துவிட்டால் இங்கு திருவாராதனம் நடக்கும். பின்னர் இங்கு இருக்கும் ஸ்ரீமுக்கூர் சுவாமிகள் பூஜித்த சிலாரூபங்களைக் காணலாம் என்றார் அர்ச்சகர்.
காலில் சிறு கற்கள் குத்த, இலவச அக்குபஞ்சரை அனுபவித்தபடியே, மட்டபல்லியில் உறையும் லஷ்மி நரசிம்ம மூலவரைக் காணச் சில படிகள் இறங்க வேண்டும். கிருஷ்ணாவில் நனைந்து எழுந்த ஈரக் காற்று பெற்ற தாயைப் போல் உடலைத் தழுவிச் சென்றது.
கோயிலுக்கு முன்னர் ஆஞ்சனேயர் சன்னதி. பக்தர்கள் இங்கே தேங்காய் உடைத்து நிவேதனம் செய்கிறார்கள். இச்சன்னதியைச் சுற்றிக்கொண்டு கோபுர வாசல் வழியே நுழைந்து, துவஜஸ்தம்பத்தை அடுத்து நேரே வந்தால் எம்பெருமான் மட்டபல்லி நாதனின் குகைச்சன்னதி எதிரே தெரிகிறது. சிறுத்த அழகிய இடை கொண்ட செஞ்சுலஷ்மி தாயாரைத் தன் மடியில் இருத்தி, அழகிய சிரித்த திருமுகத்துடன் பிரஹல்லாத வரதன் லஷ்மி நரசிம்மர் தோரண வாயிலின் மேலே காட்சி அளிக்கிறார். மெய்சிலிர்க்கிறது. அன்று பிரஹல்லாதனுக்காக தூணிலும், துரும்பிலும், மண்ணிலும், விண்ணிலும் வியாபித்து மறைந்து இருந்தாயே என்ற எண்ணவோட்டம் எழுந்தது.
இங்குதான் உலக நன்மையை முன்னிட்டு ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் ஸ்ரீசுவாதி நட்சத்திர மகா நரசிம்ம மகா மந்திர ஜப ஹோம மகா யக்ஞங்கள் நடந்தன. ஸ்ரீசுவாமியின் தலைமையில் ரித்விக்குகள் மந்திரங்களை உச்சரிக்க, யக்ஞத்தில் 32 விதமான பட்சணங்கள் உட்பட பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த பட்சணங்கள் கல்யாண சீர் பட்சணங்கள் போல் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பார் முக்கூர் சுவாமி என்றார் சீனிவாசன். இந்த யக்ஞ குண்டம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அதன் அருகில் தற்போது பவித்ர உற்சவம் நடந்து முடிந்து மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ந்தது கண் கொள்ளாக் காட்சி. இந்த ஷேத்திரப் பெருமையினை முக்கூர் சுவாமிகள் எழுதிய ‘மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்’ என்ற புத்தகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
“எண்ணிலா அருந்தவர்களான முனிவர்கள் பலர் மகிழ்ந்துறைந்தது இம்மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில்தான். மஹரிஷி வசிஷ்டர் மட்டபல்லி நரஹரியை வலம் வந்து வலமும், வளமும் பெற்று மகிழ்ந்தார். அத்திரி மஹரிஷியின் ஆழ்ந்த தபஸ் அவனை ஆட்கொண்டது. ப்ருகு மகரிஷியின் பெருமை மிகு பக்திக்கு க்ருஷ்ணவேணியைப் போல் பெருகி ஓடி வந்தான் நம் மட்டபல்லி நரஹரி. ஸ்ரீகெளதம மஹரிஷி இவனைப் போற்றி மகிழ்ந்தார். ஸ்ரீகாச்யப மஹரிஷி போற்றும் கனககசிபுஹரன் இவன். ஸ்ரீவத்ஸ மஹரிஷி மிகுந்த வாஸ்சல்யத்துடன் இவனது பெருமையைப் பலகாலும் பேசினார். ஸ்ரீவாதூல மஹரிஷி, ஸ்ரீஜமதக்னியின் வேள்விச் சுடரே இவன். ஸ்ரீவிஸ்வாமித்ரர் விரும்பிய விச்வநாதன் இவன். ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி மகிழ்ந்து பாடிய பரமன் இவன்” என்கிறார் முக்கூர்.
பல யுகங்களாய் மகரிஷிகள் கால் தடம் படிய உலவிய இந்த இடத்தின் காற்றுப்பட்டாலே, கண் காணாமல் ஓடிப் போகும் பாவக் கொடுமை. அப்பறம் முக்திக்குத் தடை இல்லையே.
‘அன்று இவ்வுலகம் அளந்தாய்’ என்று ஓங்கி உயர்ந்தவனாய் அவதாரம் எடுத்தவனைக் காண குகை சன்னதியில் குனிந்து செல்ல வேண்டும். குகைக்குள் நல்ல இருட்டு. குகைச் சுவர்களில் சில்லென்ற ஈரப்பதம். எதிரே வெள்ளி மீசையுடன் எம்பெருமான். அகன்ற கண்கள். ஆனந்த சிரிப்பைக் காட்டும் அதர பவளம். நெற்றியில் நீண்ட நெடிய நாமம். பக்தர்களைக் கண்ட ஆனந்தத்தில் பெருமாளின் திருமுகம் முழுவதும் விகசித்து ஒளிர்கிறது. கனிவும் காருண்யமும் சொட்டும் உளி படா ஒளி முகம். பிரஹல்லாத ஆழ்வாருடன் சுயம்புவாகத் தோற்றமளிக்கிறார் நரசிம்மர். அருகே ஸ்ரீராஜ்யலஷ்மி தாயார், அண்ணலின் அருந்தவ தேவி. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலாரூபம்.
“ஆச்சாரியர்களால் காட்டப்பட்ட இந்த தத்வத்ரயமானவன் ஸ்ரீந்ருஸிம்ஹனே. அப்படிப்பட்ட ஸ்ரீந்ருஸிம்ஹன் உறையும் திவ்ய தேசம் ஸ்ரீமட்டபல்லி மஹாஷேத்ரம்” என்று நாரதர் தெரிவித்ததாகக் கூறுகிறார் முக்கூர் சுவாமிகள். மேலும் “ஸ்ரீ க்ருஷ்ண வேணீநதியின் அம்ருதமயமான ஜலக் காற்று எந்தெந்தவிடமெல்லாம் வீசுமோ அவ்விடத்திலுள்ளோர் அனைவரும் முக்தியடைவர். இவ்விஷயத்தில் சந்தேஹம் கொள்ள வேண்டாம்” என்கிறார்.
இவ்வாறு யோகிகளும் முனிவர்களும் தாங்கள் பூஜிக்கும் அரிய தெய்வச் சிலைகளைப் புனிதம் கருதி வெளிப்படுத்தமாட்டார்கள். அங்கு உறையும் இறைவன் தானே விரும்பி வெளியுலகினருக்கும் காட்சி அளிக்க முடிவு செய்துவிட்டால் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுவிடுவான். அந்த அடிப்படையில் மாசிரெட்டி என்ற தீவிர நரசிம்ம பக்தரின் கனவில் தோன்றிய மட்டபல்லிநாதன், தான் மலைக் குகையில் இருப்பதாகத் தெரிவிக்கிறார். மறுநாள் காலை வேதம் படித்த பிராமணர்களுடன் சென்று காடு, மேடு மலை என்று சுற்றித் திரிந்தபோது, அங்கிருந்த `ஆரே` மரத்தின் மீது கருடன் அமர்ந்திருந்தது. அதற்கு நேர் எதிரே இருந்த குகையில் மட்டபல்லி நாதன் இருப்பதையும் காட்டிக் கொடுத்தது. உள்ளே சென்றால் மிகப் பெரிய படம் எடுத்தது போன்ற உருவில் ஆதிசேஷனின் கல் ரூபம் குடையாய் காட்சி அளிக்கிறது. இச்சன்னதியில் இன்றும் தலைக்கு மேல் இந்த ஆதிசேஷனின் படத்தினை தொட்டுப் பார்க்கலாம். சுயம்பு மட்டபல்லி நாதனோ அரையடி தூரத்தில் இன்றும் இங்கு சங்கு, சக்ர, கதா பாணியாக, சுயம்புவாகக் காட்சி அளிக்கிறார். கருடன் அமர்ந்து காட்சி அளித்ததால் ஆரே மரம் இங்கு விசேஷம். அம்மர இலைகளால் பூஜித்து, அதனை பிரசாதமாகத் தருகிறார்கள். இதனை உலர்த்தி பின்னர் பணப்பெட்டியில் வைத்தால் ஐஸ்வர்யம் கொழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்க.
(பயணம் தொடரும்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago