எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்து தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொருத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வது சிறப்பு.
கேரளாவில் உள்ள எருமேலி என்ற இடத்திலிருந்து நடக்கத் தொடங்கி பேரூர்தோடு, காளைகட்டி, அழுதை மலை, கரிமலை வழியாக பம்பை சென்று நீலிமலையைக் கடந்து சபரிமலையை அடைவது பெரிய பாதை எனப்படுகிறது. இதில் பம்பை என்ற இடம் வரை பஸ் மற்றும் வாகனங்கள் செல்கின்றன. பெரிய பாதை நடக்க முடியாதவர்கள் பம்பை வரை வாகனத்தில் சென்று அங்கிருந்து நீலிமலை மட்டும் ஏறி சன்னிதானத்துக்குச் செல்லலாம். இது சிறிய பாதை எனப்படுகிறது.
எருமேலியில் இருந்து பயணத்தைத் தொடங்கும் முன்பு பக்தர்கள் உடலில் பலவண்ணப் பொடிகளை பூசி, சரங்கள் குத்தியபடி ஆடிக்கொண்டு வருவார்கள். இது ‘பேட்டைத்துள்ளல்'. இதை முடித்துக்கொண்டு பெரிய பாதையில் நடக்க ஆரம்பிப்பார்கள்.
வழக்கமாக பெரும்பாதையில் செல்பவர்கள் பெரிதாகச் சிரமப்படமாட்டார்கள். ஆனாலும், அழுகை ஏற்றம் நிஜமாகவே அழுகையை வரவழைத்துவிடும். அதற்குக் கொஞ்சமும் சளைக்காதது கரிமலை ஏற்றம். பத்துத் தப்படிகள் ஏறுவதற்குள் மூச்சிரைக்கும். நிற்க இடமிருக்காது. ஒரு பக்கம் கிடுகிடு சரிவு. இன்னொரு பக்கம் இடைவெளியின்றி சாமிகள் ஏறிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும், கிடைக்கிற ஏதோ ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஏற ஆரம்பித்தால் மீண்டும் பத்துத் தப்படிகள்தான் எடுத்துவைக்க முடியும். அப்படி ஒரு செங்குத்து. ‘‘என்ன ஐயப்பா.. இப்படிச் சோதிக்கிறியே” என்று மனதுக்குள் புலம்பாத சாமிகளே இருக்க முடியாது.
கரிமலையைக் கடந்து உச்சிக்கு வரும் சாமிகளின் முகங்களைப் பார்க்க வேண்டுமே. உடலின் மொத்த கலோரிகளும் தீர்ந்துபோய், வாடி வதங்கிய நிலையில் இருக்கும். ‘‘வாங்க சாமீ! உச்சி வந்திடிச்சு” என்றபடியே ஏற்கனவே உச்சிக்கு வந்தடைந்த சாமிகள் சிலர் அந்தப் பாதையின் இரு பக்கமும் நின்றுகொண்டு தங்களது துண்டால் விசிறுவார்கள் பாருங்கள். வியர்வையில் குளித்த உடலில் அந்தச் சாமிகளின் துண்டுக் காற்று படுவது. ஆஹா என்ன ஆனந்தம்!
அழுதை, கரிமலை ஏற்றங்கள் ஒரு வகையான கஷ்டம் என்றால், கரிமலை இறக்கம் அதைவிட ஒரு படி மேல். ஏற்றமாவது நாம் நினைத்தால் அங்கங்கே சிறிது நின்றுவிட்டுப் போகலாம். இறக்கத்தில் அது முடியாது. காலை எடுத்து வைத்தால் அடுத்தடுத்த அடி வைத்து இறங்கிக்கொண்டே இருக்க வேண்டும். கிடுகிடு சரிவில் எங்கு நிற்பது? காலை ஊன்றி ஊன்றி இறங்குவதில் கெண்டைக் கால்களில் வலி பின்னியெடுக்கும். நாம் எங்காவது சாய்ந்து நின்றால், ‘‘அட வாங்க சாமி. பம்பை பக்கத்துல வந்துடுச்சு” என்று சொல்லிக்கொண்டே யாராவது ஒரு சாமி நம் கையைப் பிடித்து பத்திரமாக இறக்கி சிறிது தூரம் விட்டுவிட்டுப் போவார். சோர்விழந்த நம் முகத்தைப் பார்த்தால் இன்னொரு சாமி நம் உள்ளங்கையில் குளுக்கோஸ் கொட்டுவார். முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு இன்னொருவர் உதவும் அனுபவங்கள் சபரிமலையில் மட்டுமே கிடைக்கும். அவை எழுத்துக்களில் அடங்கக்கூடியவை அல்ல. அனுபவித்தால் மட்டுமே புரியும்!
ஐஸ்கட்டியாகக் குளிரும் பம்பை ஆற்றில் ஒரு குளியல் போட்டால், கோயிலில் இருமுடி கட்டிக் கிளம்பியதில் இருந்து தொடர்கிற அலுப்பு, களைப்பு அத்தனையும் பறந்துவிடும்.
பம்பை முதல் சன்னிதானம் வரையிலான சிறிய பாதை அப்படி ஒன்றும் சிரமமாக இருக்காது. இதுவும் சற்று ஏற்றம்தான். ஆனால், பிடித்துக்கொள்ள கம்பிகள், வழிநெடுகிலும் விளக்குகள், கடைகள் என்று இருப்பதால் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஏறிவிடலாம். இதிலும் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிற ஏற்றங்கள் ஒன்றிரண்டு உண்டு. மெதுவாக நடந்தால்கூட 4 மணி நேரத்தில் சன்னிதானம் போய்விடலாம்.
சன்னிதானத்தை நெருங்க நெருங்க அந்தப் பனியோடு சேர்ந்து ஓமகுண்டப் புகையும் சுற்றிச் சுற்றி அடிக்கும். நெய்யை வழித்த பிறகு பக்தர்கள் வீசும் தேங்காய் அனைத்தும் மொத்தமாகப் பிரமாண்டமாக எரிந்துகொண்டே இருக்கும். அதன் வெப்பமும் நெய்த் தேங்காய் வாசமும் பல தொலைவு வரை வீசும்.
வீட்டில் புறப்பட்டதில் இருந்து சரியாக ஓய்வு, தூக்கம் இல்லாதது, தொடர்ச்சியான பஸ் பயணம், ஊர் ஊராக இறங்கி பல கோயில்களுக்கும் சென்று வந்தது, மலைகள் ஏறி இறங்கியது.. என அத்தனை பக்தர்களின் கால்களும் சன்னிதானப் பந்தலில் துவண்டபடிதான் நிற்கும். உழைப்பின் வியர்வை காய்வதற்குள் கூலி கிடைப்பதுதானே சந்தோஷம். அத்தனை களைப்பிலும், இருமுடியோடு ஐயப்பனைப் பார்த்துவிடும் மகிழ்ச்சிதானே நாம் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கூலி. நீண்ட வரிசையில் காத்திருந்து சன்னதியை நெருங்கிவந்து, தங்கத்தில் ஜொலிக்கும் சுற்றுச்சுவரையும் துவாரபாலகர்களையும் கடந்தால் சன்னதிக்குள் தேஜோமயமான நெய் விளக்குகளுக்கு மத்தியில் தகதகவென ஜொலிப்பார் ஐயப்பன். அவரைப் பார்த்த மாத்திரத்திலே பக்தர்கள் எழுப்புகின்ற ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற கோஷம். கண்ணில் நீர்வழிய நிற்கும் ஒவ்வொரு பக்தனின் ஒவ்வொரு மயிர்த்துளை வழியாகவும் உள்ளே ஊடுருவி ஏற்படுத்தும் சிலிர்ப்பு அந்தச் சன்னிதானத்துக்கே மட்டுமே உரியது. இதுதான் புதிது புதிதாக கன்னிசாமிகளை அந்த சன்னிதானம் நோக்கி லட்சக்கணக்கில் வரவைக்கிறது. போன வருஷம் வந்த பக்தரை இந்த வருஷமும் இழுக்கிறது. ஆண்டுதோறும் இழுக்கின்றது.
ஏகாதசி, பிரதோஷம், சோமவாரம் என்று விரத நாட்கள் இருந்தாலும் வாரக்கணக்கில் விரதம் இருக்கிற நடைமுறை எல்லா மதத்திலும் இருக்கிறது. அதுபோலத்தான் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதும். நெற்றியில் சந்தனத்தைப் பார்த்தாலே எல்லோரும் ‘சாமி! சாமி' என்று கூப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைக் கேட்கக் கேட்க.. ‘நான் ஒருவேளை சாமியோ' என்ற ஆன்மிக சந்தேகத்தைச் சாமானிய மனிதனிடம் ஏற்படுத்திவிடுகிறது. வேதத்தின் சாரமாகக் கருதப்படும் ‘அஹம் பிரம்மாஸ்மி' (நான் பிரம்மன். நான் கடவுள்) என்ற எண்ணம் ஒரு துளசி மாலையைக் கழுத்தில் போட்டுக்கொண்டதுமே வருகிறது என்றால் எவ்வளவு பெரிய விஷயம்! ஒரு சில நாட்கள் என்றாலும் ஆசாபாசமில்லாத நிலை.
வீட்டில் இருந்துகொண்டே தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்க்கை. சுக துக்க நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகியிருத்தல். ருசியில் தொடங்கி அனைத்து புலன்களையும் அடக்குதல். ராஜயோகம், கர்மயோகம், பக்தியோகங்களை படித்து உணர்ந்து பின்பற்றிப் பார்த்தாலும் அவ்வளவு எளிதில் கைகூடாத ‘இல்லறத்தில் துறவறம்' என்பதை வெகு சாதாரணமாக ஒரு கன்னிசாமி கடைபிடிக்கிறார் என்றால் அந்த விரத மகத்துவத்தை என்னவென்று சொல்வது!
பல சிரமங்களைக் கடந்து பக்தர்கள் சபரிமலை செல்கிறார்கள் என்று பார்த்தோம். ஒன்றரை மாதம் விரதமிருந்து பல நூறு கி.மீ. தூரம் பயணித்து கடுமையான மலைப் பாதையில் சென்று சன்னதிக்கு போனால், அங்கு என்ன எழுதிவைத்திருக்கிறார்கள் தெரியுமா? ‘ஐயப்பன் துணை' என்றா? ‘சுவாமியே சரணம் ஐயப்பா' என்றா? இல்லை. ‘தத்வமஸி' என்று! அதென்ன தத்வமஸி. தத் + த்வம் + அஸி.
‘கடவுளே காப்பாத்துப்பா' என்று அவரது சன்னிதானத்தில் போய் நின்றால், அவர் நம்மை நோக்கி சுட்டிக்காட்டுகிறார் ‘நீதாம்பா கடவுள்' என்று! நிஜமாகவே நாம்தான்
கடவுளா? அந்த உணர்வே நம்மை படிப்படியாகத் தெய்வீகமாக்கும்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago