நபிகள் வாழ்வில்: குழந்தைகள் திருநாள்

By இக்வான் அமீர்

நபிகளார் மீது பெரியோர் அன்பு கொள்வது என்பது யதார்த்தமானது.  ஆனால், சிறார்களும் நபிகளார் மீது பேரன்போடு திகழ்ந்தனர். அதற்கு உதாரணமான சம்பவம் இது.

அன்று மதீனா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

முஸ்லிம்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருந்தார்கள். அதிமுக்கியமானவரின் வருகையை எதிர்நோக்கி, பெரும் விழா எடுத்து அவர்கள் காத்திருந்தார்கள்.

குழந்தைகளுக்கோ உற்சாகம் தாளவில்லை. வரவேற்பதற்கான பாடல்களை திரும்பத் திரும்பப் பாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்நாளில் அணிய வேண்டிய ஆடைகளை  தேர்வு செய்து தயாராக வைத்திருந்தார்கள்.

அப்படி அவர்கள் யாரைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்?

ஒரு பத்தாண்டுகளுக்கும் அதிகமான காலம் தமது தாய் மண்ணான மக்காவில், தம் கொள்கையை எடுத்துரைக்க முயன்று அது எடுபடவில்லை. கொள்கையை ஒப்புக்கொண்ட சொற்ப எண்ணிக்கையிலான தோழர், தோழியர் உயிர் பலிக்கும், பேரிழப்புக்கும் ஆளாகிக் கொண்டிருந்தனர். சிலர் அபிசீனியா போன்ற நாடுகளுக்கு புகலிடம் தேடி ரகசிய பயணம் மேற்கொண்டனர். களப்பணியை தாயிப் போன்ற அயலக மலைவாசஸ்தலப் பகுதிகளுக்கு இடம் மாற்றியும் கல்லடி, சொல்லடி தவிர பெரிதாய் பலன் ஒன்றும் தருவதாயில்லை.

இந்நிலையில், கொடுமையின் உச்சக்கட்டமாக ஒவ்வொரு கோத்திரப் பிரதிநிதியின் தலைமையில் ஒன்று திரண்டு பின்னிரவொன்றில், உறங்கும்போது உயிர் பறித்திட எதிரிகள் திட்டமிடும் நிகழ்வொன்றும் ஏற்பாடானது. இறை சமிக்ஞையால் இதை அறிந்து, தாய் நாடாம் மக்காவைத் துறந்து, தமது கொள்கைகளை ஏற்றுக்கொண்ட மதீனாவை நோக்கி நபிகளார் மேற்கொண்ட பாலைவனப் பயணம் அது.

இஸ்லாமிய ஆண்டின் தொடக்கம்

ஹிரா மலைக் குகையில் ஆரம்பித்த இறைத் தூதுத்துவ பெருஞ்சுமைப் பயணம் மக்காவின் ஊர் துறத்தலின்போது, இடையில் ‘தவ்ர்’ மலைக்குகையில் ஓய்வெடுக்க வைத்தது. தேடி வந்த எதிரிகளுக்கு அந்த மலைக்குகை வழியே ரகசியம் கசிந்திடாமலிருக்க அற்ப சிலந்தி வலையால் குகை வாய் பின்னப்பட்டது. பிறகு அங்கிருந்து தப்பி, மதீனாவை நோக்கி நெடிதான நபிகளாரின் ஹிஜ்ரத் பயணம் அது. இஸ்லாமிய ஆண்டுத் தொடக்கமான பயணம் அது.  இதுதான் 'ஹிஜ்ரத்' நாள் என்றழைக்கப்படுகிறது.

மக்கள் மதீனாவின் எல்லையில் வந்து காத்திருந்தார்கள். நேரம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.

"அதோ..! அதோ..!!இறைத்தூதர்! அதோ வருகிறார்கள்!"

மக்களின் உற்சாகக் குரல் பாலைவனம் எங்கும் எதிரொலித்தது. அந்தச் சத்தத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பேரீச்ச மரக்கீற்றுகள் அசைந்தாடின.

குழந்தைகளின் முகமோ பிரகாசத்தால் மின்னியது. எல்லோரும் முன்வரிசைக்கு ஓடிவந்தார்கள். முன்னரே கவனமாகத் தயாரித்து வைத்திருந்த வரவேற்புப் பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

குழந்தைகளைக் கண்டதும் அன்பு நபியின் முகம் மலர்ந்தது. நபிகளார் குழந்தைகளின் வரவேற்பை அதிகம் ரசித்தார். அதிலும் சுவனத்துச் சிட்டுக்களான பெண் குழந்தைகளின் இனிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்தார்.

குழந்தைகள் தம்மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தது நபிகளாருக்குத் தெரியும். இருந்தும் குழந்தைகளிடம் புன்முறுவலுடன் கேட்டார்:

"உங்களுக்கு என் மீது இவ்வளவு பிரியமா பிள்ளைகளே!"

"ஆமாம்... ஆமாம்... இறைவனின் தூதரே, தங்கள் மீது எங்களுக்குக் கொள்ளை விருப்பம்"

சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள்.

"நாங்கள் எல்லோரும் தங்களை அதிகம் நேசிக்கிறோம் இறைவனின் தூதரே!" என்றார்கள் தொடர்ந்து ஒரே குரலில்.

இதைக் கேட்டதும் நபிகளாரின் முகம் ரோஜாப்பூ போலப் பூத்தது.

"குழந்தைகளே, நானும் உங்களை அதிகம் அதிகமாக நேசிக்கின்றேன் தெரியுமா?" என்றார் அன்பொழுக.

நபிகளாரின் இந்தப் பதிலைக் கேட்டதும் குழந்தைகளுக்குத் தலை, கால் புரியவில்லை. உற்சாக மிகுதியால் "ஓ..! ஓ...!!" என்று சத்தமிட்டனர். நபிகளாரைக் கட்டியணைத்துக் கொண்டார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்