உயிர் வளர்க்கும் திருமந்திரம் 47: தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

By கரு.ஆறுமுகத்தமிழன்

நம்முடைய கடவுள் மரபில் ஒரு சிக்கல் இருக்கிறது. கடவுளை யார் அறியலாம்? யார் அணுகலாம்? யார் அணையலாம்? இதென்ன கேள்வி? யாரும் அறியலாம்; யாரும் அணுகலாம்; யாரும் அணையலாந்தானே?

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை;

ஈரம் உடையவர் காண்பார் இணைஅடி... (திருமந்திரம் 273)

-யார் ஆர்வம் உடையவர்களோ அவர்கள் காண்பார்கள்; யார் அன்பு உடையவர்களோ அவர்கள் பெறுவார்கள் என்றுதானே வாக்களிக்கப்பட்டிருக்கிறது? ஆனால் நடைமுறையில் அது நிகழ்கிறதா என்றால், இல்லை. ஏன் நிகழவில்லை என்றால், கடவுள் சமயங்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டார்; நிறுவனமயம்  ஆக்கப்பட்டுவிட்டார். நிறுவனங்களுக்குள்ளே நுழைவதற்கான தகுதிப்பாடுகளும், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும், நிகழ்த்தவேண்டிய சடங்குமுறைகளும், ஆற்றவேண்டிய கடமைகளும், அடையவேண்டிய இலக்குகளும் கற்பிக்கப்பட்டுவிட்டன.

இனி விதிமுறைகளுக்குப் பொருத்தப்பாடு உடையவர் காண்பர்; தகுதிப்பாடு உடையவர் அணுகுவர்; அணைவர். இந்த அமைப்புமுறையில், சிலர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்; சிலர் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். எல்லோரும் ஒரு தன்மையில் தழுவத் தக்கவராக இறைவனார் இல்லை.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்றால், கருத்துக்குள் இருந்த கடவுள் புறத்துக்கு வந்துவிட்டார். வழிபாட்டுக்கு வசதியாக அவரைக் கழுவ வேண்டியிருக்கிறது; வழிபடுவோரிடமிருந்து அவரைப் பாதுகாக்கவும் வேண்டியிருக்கிறது. கருத்துமேட்டில் இருந்தது வரையில் களவாட முடியாதவராக இருந்த கடவுள், களத்துமேட்டுக்கு வந்ததற்குப் பிறகு களவுக்குப் பொருளானார். ‘வேப்பமரம் நோயிலே; வைத்தியனும் பாயிலே; காவல் காக்கும் ஐயனாரும் களவு போனாரே’ என்றொரு திரைப்படப் பாட்டு.

அகப்பொருளாக, அறிவுப்பொருளாக இருக்கின்ற ஒன்று, புறப்பொருளாக ஆனாலே இப்படித்தான்—ஆட்டை போடப்படும் அல்லது அணுக இயலாதபடிக் கட்டை போடப்படும்—கடவுளாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி.

வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால்

வேகாது; வேந்த ராலும்

கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும்

நிறைவுஒழியக் குறைப டாது;

கள்ளத்தால் எவரும் களவாட

முடியாது; கல்வி என்னும்

உள்ளத்தே பொருள்இருக்க உலகுஎங்கும்

பொருள்தேடி உழல்வது என்னே?

-என்று கல்வியைப்பற்றி ஒரு பழம்பாட்டு. கல்வியை வெள்ளம் கொண்டு போய்விடாது; நெருப்பு எரித்துவிடாது; வேந்தர்கள் அதைப் பறிமுதல் செய்துவிட முடியாது; அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் நிறையுமே ஒழியக் குறையாது; யாரும் அதைக் களவாட முடியாது. ஏன்? அது உள்ளத்தில் இருக்கும் பொருள் என்பதால்.

உள்ளத்துப் பொருளாக இருந்தவரை களவாடப்பட முடியாத செல்வமாக இருந்த கல்வி, வெள்ளைக்காரர் காலத்தில் புறத்திறங்கிச் சான்றிதழ் வடிவாகிப் பின் அதுதான் கல்வி என்றான பிறகு, கல்வியைப் பலரும் களவாண்டுவிடவில்லையா?

புறநிலைப்படுத்தப்படும் பொருள் அனைவரும் அணுகிவிட முடியாதபடிக் காவல் செய்யப்படும்; காவல் செய்யப்படும் பொருள் களவாடப்படும். களவாடல் தவிர்க்கப்பட வேண்டுமானால் காவல் கைவிடப்பட வேண்டும். காவல் கைவிடப்பட வேண்டுமானால் களத்துமேட்டில் இருக்கும் பொருள் மீண்டும் கருத்துமேட்டுக்கு ஏற வேண்டும்.

களத்துமேட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளை விடுதலை செய்கிறார் திருமூலர். சிலர் மட்டுமே அணுகுமாறும் அணையுமாறும் வேலி கட்டி வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கடவுளை, அனைவரும் அணுகுமாறும் அணையுமாறும் வேலியை வெட்டி உள்ளுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

உள்ளம் பெருங்கோயில்; ஊன்உடம்பு ஆலயம்;

வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே (திருமந்திரம் 1823)

கோவில் என்பது இதுவரை நீங்கள் ஊற்றைச் சடலம் என்று எண்ணியிருந்த ஊன் உடம்பு. உள்ளந்தான் கருவறை. வாய்தான் கோபுர வாசல். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் சீவன்தான். கள்ளத்தனம் செய்வதாக நீங்கள் கருதியிருந்த ஐந்து புலன்கள்தாம் உங்கள் இறைவனார்க்கு நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகள்.

திருமூலர் புறக் கோவிலை ஆதரிக்காதவர் இல்லை. ஆனால் கோவில்கள் சிறைகள் ஆகுமென்றால் ஞானவாள் கொண்டு எறிந்து இறைவனைச் சிறை மீட்கத் துணிந்தவர். கொள்கைகள் மக்களுக்கானவை. மக்களால் கொள்ளமுடியாத கொள்கைகளைத் தள்ளத் தயங்காதவர் அவர்.

வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்

காட்டவும் யாம்இலம் காலையும் மாலையும்

ஊட்டுஅவி ஆவன; உள்ளம் குளிர்விக்கும்

பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே. (திருமந்திரம் 1824)

வேள்வித் தீயில் இறைவனை வழிபடுகிறவர்களோ, இறைவனுக்கு அளிக்கவேண்டிய உணவை அவிப் பொருளாகத் தீயில் இடுகிறார்கள். உருவத் திருமேனியில் இறைவனை வழிபடுகிறவர்களோ, காலையும் மாலையும் பூசனை நேரங்களில் உணவையும் இறைவன் திருவுருவத்துக்கு முன்பாகப் படைத்துக் காட்டுகிறார்கள். இறைவனை உள்ளுக்குள் வழிபடும் நாம் என்ன செய்ய என்றால், உள்ளம் குளிருமாறு உங்கள் மொழியில் ஒரு பாட்டைக் காட்டுங்கள். அது பால் ஊற்றிப் படைத்ததற்குச் சமானம் என்று எல்லோர்க்கும் எட்டுகிற எளிய பூசனைக்குப் பரிந்துரை செய்கிறார் திருமூலர்.

இறைவனைப் புறநிலைப்படுத்தி, அவனுக்கு ஒரு வடிவம் கொடுத்து வழிபடுவது எளியது. அகநிலைப்படுத்தி வழிபடுவது எளியதா? எளியதில்லைதான்.

கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்;

பண்டுஉகந்து எங்கும் பழமறை தேடியை

இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே. (திருமந்திரம் 578)

வெளியே காண்பதுபோல உள்ளே காண்பது கடினந்தான். கருத்தைச் செலுத்திப் பழகினால் கைவசப்பட்டுவிடும். இறைவன் எங்கே இருக்கிறான் என்று வேதங்கள் தேடித் தேடிக் களைக்கின்றன; வேதங்களால் கண்டுகொள்ள முடியாதவனை எங்கேயோ எப்போதோ அல்ல, இன்றே, இங்கேயே, இப்போதே கண்டு கொள்ளலாம். இது நல்லதில்லையா?

இறைவனை உடம்புக்குள் கொண்டு வந்து குடியிருத்துவது என்பது என்ன திரூமூலரின் விருப்பமா என்றால், அது வழிபடுகிறவரின் விருப்பம். வழிபடுகிறவர் இறைவனாரை எங்கே எழுந்தருள வேண்டுகிறாரோ அங்கே எழுந்தருள்வார் இறைவனார்—புறமாக இருந்தாலும் சரி, அகமாக இருந்தாலும் சரி.

தங்கச்சி மீனாளுக்குத் திருமணம் செய்விக்கத் திருமாலிருஞ்சோலையிலிருந்து கிளம்பித் தல்லாகுளம் வந்து வைகையில் இறங்கும் கள்ளழகரை ‘இன்னின்ன இடங்களில் எழுந்தருள்க’ என்று மண்டகப்படிக்காரர்கள் வேண்டினால் வேண்டியவண்ணம் எழுந்தருள்வதில்லையா கள்ளழகர்? சாணியையோ சந்தனத்தையோ கூம்பாகப் பிடித்து ‘இதிலே எழுந்தருள்க’ என்றால் அங்கே எழுந்தருள்வதில்லையா கடவுள்? எல்லா இடத்திலும் எழுந்தருளும் கடவுள் உடம்புக்குள் எழுந்தருள மாட்டானா?

‘மணிவண்ணா, நான் போகின்றேன், நீயும் கிளம்பு’ என்று திருமழிசை ஆழ்வார் அழைத்தபோது பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு கிளம்பியும், ‘போகவில்லை, படுத்துக் கொள்’ என்றபோது பாம்புப்பாயை விரித்துப் படுத்துக்கொண்டும், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் வாங்கிய கடவுள், ‘வா, வந்து எனக்குள் குடியிரு’ என்று அழைத்தால் வந்திருக்க மாட்டானா?

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்;

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்

கூவிக்கொண்டு ஈசன் குடிஇருந் தானே. (திருமந்திரம் 579)

மேலே இருந்து கண்காணிக்கிறவன் இறைவன் என்று கருதுகிறார்கள். ஆனால் அவன் அனைத்துக்கும் அடிநிலை ஆதாரமாகக் கீழே இருந்து தாங்குகிறவன். உந்திச்சுழிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கிறது உடம்பின் அடிநிலையாகிய மூலாதாரம். அங்கே அவனை எழுந்தருளச் செய்யும் வகை தெரியாமல் திகைக்கிறார்கள். வகை தெரிந்து எழுந்தருளச் சொன்னால் கூவிக்கொண்டு வந்து அங்கே குடியிருப்பான் கடவுள்.

(அழைப்போம் கடவுகளை…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்