இறைவனுக்காகப் பசியை மறந்து, தூக்கத்தைத் தொலைத்து நோன்பிருக்கும் புனித ரமலான் மாதம் முடிந்தபின் வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளைத்தான் ஈகைத் திருநாளாக (‘ஈதுல் பித்ர்’) உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை நாள், பிறைத் தோற்றத்தின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றும் நாள் மாறுபடுவதால், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நாட்களில் ‘ஈதுல் பித்ர்’ கொண்டாடப்படுகிறது.
கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய ஐந்தும் இஸ்லாமியர்களின் கடமைகள். இவற்றில் முக்கியமானது ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தில் வரும் ரமலான் நோன்பு. நோன்பு குறித்து திருக்குர்ஆனில், “ஈமான் கொண்டோரே, நீங்கள் உள்ளச்சமும் பயபக்தியும் உடையவர்களாக வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன் உள்ள சமூகத்தாருக்குக் கடமை ஆக்கப்பட்டதுபோல, உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” என்று இறைவன் (திருக்குர்ஆன் 2:183) குறிப்பிட்டுள்ளார்.
ரமலானின் சிறப்பு
ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் முகமது (ஸல்) நபிக்கு புனித குரான் அருளப்பட்டது. “ரமலான் பொறுமையின் மாதம். பொறுமையின் வெகுமதி சொர்க்கம். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழ வேண்டும் என மனிதர்களுக்கு அறிவுறுத்தும் மாதம் இது. இந்த மாதத்தின் முதல் 10 நாட்கள் அருள்பொழியும், அடுத்த 10 நாட்கள் பாவமன்னிப்பு கிடைக்கும் கடைசி 10 நாட்கள் நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும்” என்று நபிகளார் கூறியுள்ளார்.
புனித ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய வெகுமதி. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது உள்ளத்தின் அழுக்குகளையும் மனத்தின் இச்சைகளையும் நீக்கிவிடும். உள்ளேயும் வெளியேயும் தூய்மையடைவதற்காகவே இந்த நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பவர்கள் மட்டுமே, சொர்க்கத்திலிருக்கும் ரய்யான் எனும் சொர்க்க வாசல் வழியாக அழைக்கப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பைக் கடைப்பிடித்தவர்கள், அதன் பலனை அடுத்து வரும் பதினோரு மாதங்களில் பெறுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரமலான் மாதம் எத்தகைய சிறப்புடையது என்று மனிதர்கள் விளங்கிக்கொள்வார்களானால், ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள் என குரானில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், அல்லாவை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இந்த ரமலான் மாதம் இஸ்லாமியர்களால் கருதப்படுகிறது. கடவுளின் அருள் நிறைந்த இந்த மாதத்தில், குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த முதியோர்வரை விருப்பத்துடன் நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர்.
நேர்மையும் கண்ணியமும்
ரமலான் மாதத்தில் நோன்பை நேர்மையாகவும் கண்ணியமாகவும் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாலை முதல் மாலைவரை உண்ணாமல், நீர் அருந்தாமல், தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். நேர்மையும் கண்ணியமும் இல்லையென்றால், இஸ்லாமியர்களின் நோன்பானது வெறும் பட்டினி என்ற அளவில் மட்டுமே கருதப்படும். இந்த மாதத்தில் நன்மைகள் செய்யாதவர்கள், எல்லாவிதமான நன்மைகளையும் இழக்கின்றனர். பாவத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்காதவர்கள், கடவுளின் அருளைவிட்டு வெகு தொலைவு செல்கின்றனர். நோயாலும் முதுமையாலும் வேறு சில காரணங்களாலும் நோன்பை அனுசரிக்க முடியாத நிலை ஏற்பட்டால், நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு சம்பந்தப்பட்டவர்கள் உணவளிக்க வேண்டும்.
இறைவனுக்கு நன்றி
ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தெரிந்த மாலையிலிருந்து ஈகைத் திருநாள் தொடங்கிவிடும். பெருநாளில் குளித்து, புத்தாடை உடுத்தி, பெருநாள் தொழுகைக்கு முன்பே ‘ஸதகத்துல் ஃபித்ர்’ என்ற தானத்தைச் செலுத்திவிட்டுத்தான் ‘குத்பா’ தொழுகைக்குச் செல்ல வேண்டும்.
நோன்பு, ஜக்காத்து ஆகிய இரு கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றத் தங்களுக்கு அருள் புரிந்த இறைவனுக்கு இஸ்லாமியர்கள் தங்களது தொழுகையின் மூலம் நன்றி கூறி மகிழ்வார்கள். பேதங்களும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துகளை இஸ்லாமியர்கள் பரிமாறிக் கொள்ளும் காட்சி அலாதியானது.
அன்பால் நிறையும் மாதம்
நினைவு சரியாக இருக்கும் என்றால், முதல் நோன்பை கடைப்பிடித்தபோது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று, பள்ளியில் உடன் படித்த மாணவர்கள் மட்டுமல்லாமல்; ஆசிரியர்களும் என்னை வியப்புடன் நோக்கினார்கள். மதிய உணவு வேளையில், உணவுப்பையை என்னிடமிருந்து மறைத்தபடி, ஒருவிதக் குற்றவுணர்வுடன் சக மாணவர்கள் எடுத்துச்சென்றனர்.
“எதுவும் சாப்பிட மாட்டியா?, தண்ணீர் குடிக்க மாட்டியா?, எச்சில்கூட விழுங்க மாட்டியா?, காலையில் 4 மணிக்கா சாப்பிட்டே?, இனி இரவில்தான் சாப்பிடுவியா?, பசிக்காதா?, தாகமா இருக்காதா?, களைப்பா இருக்கா?, நான் வேண்டுமானால் உனக்கு எழுதித் தரட்டுமா? வீட்டுக்குப் போகும்போது உனது பையை நான் தூக்கிட்டு வரட்டுமா?” என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலம், என் மீதான அக்கறையையும் அன்பையும் வகுப்பு தோழர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இந்த அக்கறையும் அன்பும் இன்றும் தொடர்கின்றன என்பதை எனது மகளின் பள்ளி அனுபவங்கள் உறுதி செய்கின்றன. இந்த அன்பும் அக்கறையுமே நமது மண்ணை உலகின் மற்ற பகுதிகளிலிருந்து உயர்த்திப் பிடிக்கிறது. வேற்றுமை மறைந்து, ஒற்றுமை நிறைந்த உலகில் அன்பும் அமைதியும் செழித்து, சமதர்ம சமுதாயம் திளைக்க வழிவகை செய்கிறது ரமலான் பண்டிகை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago