இஸ்லாம்: காலத்தின் மீது சத்தியமாக

இறைவன் திருக்குர் ஆனில் தான் படைத்த சில படைப்புகளின் மீது சத்தியம் செய்து சில செய்திகளை மனிதகுலத்திற்குக் கூறுகிறான். சூரியன், சந்திரன், இரவு, பகல், வானம், பூமி என இறைவன் சத்தியம் செய்யும் படைப்புகளின் எண்ணிக்கை தொடரும். அதில், “ காலத்தின் மீது சத்தியமாக (அல்குர் ஆன் 103:1)” என்று இறைவன் நேரத்தின் மீது சத்தியம் செய்கிறான்.

இஸ்லாம் நேரத்தின் மதிப்பை மக்களுக்க நன்கு உணர்த்துகிறது. அதிகாலை தொழுகையில் தொடங்கி மதிய லுஹர் தொழுகை, மாலையில் செய்யும் அஸர் தொழுகை, சூரியன் மறையும்போது மஃரிப் தொழுகை, இரவில் இஷா தொழுகை என ஐந்து வேளைத் தொழுகையைக் கடமையாக்கி நேரந்தவறாமையின் அவசியத்தைக் கற்றுத்தருகிறது.

ஒருநாள் மஃரிப் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டு விட்டது. மக்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொழுகைக்காக அப்துர் ரஹ்மான் பின் அவ்ப்(ரலி) அவர்களும் வந்தார். அந்நேரத்தில் சிரியாவிற்குச் சென்றிருந்த வியாபாரிகளும் வந்தனர்.

அவர்களோடு சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இகாமத் சொல்லப்படுகின்றது. அப்துர் ரஹ்மான் அவர்கள் தொழுகைக்குப் போய் சேரும் முன்னர் நபிகள் அவர்கள் தொழுகைக்காக முதல் தக்பீரை முடித்துவிட்டார்கள். சிறிது நேரத் தாமதத்தால் முதல் தக்பீரில் சேரமுடியாமல் போனது.

தொழுகை முடித்தபின்னர் அன்றைய தினம் அப்துர் ரஹ்மான் அவர்கள், அன்றைய தினம் தனது வியாபாரத்தில் கிடைத்த லாபம் அனைத்தையும் பள்ளிவாசலுக்கு வெளியே நின்ற ஏழைகளுக்கு தர்மம் செய்தார்கள்.

இதனைக் கண்ட நபிகள்(ஸல்) அவர்கள் ஏன்? என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான், தான் தாமதமாக வந்த நிகழ்வைச் சொன்னார்.

“ அப்துர் ரஹ்மானே! உன் தர்மம் சிறந்ததே. ஆனால், இதன்மூலம் நீ தவறவிட்ட முதல் தக்பீரின் நன்மையை அடையமுடியாது” என்றார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE