உயிர் வளர்க்கும் திருமந்திரம் 83: நம்மை ஆளும் நல்லம் நகரான்

By கரு.ஆறுமுகத்தமிழன்

அம்மணத்தை அவமானமாகக் கருதும்போக்கு நமக்கு உண்டு. ஒருவரை அவமானப்படுத்தக் கருதுபவர் முதலில் செய்யக் கையெடுப்பது ஆடை அவிழ்ப்புக்குத்தான்.

‘மார்பிலே துணியைத் தாங்கும்

வழக்கம்கீழ் அடியார்க்கு இல்லை;

சீரிய மகளும் அல்லள்,

ஐவரைக் கலந்த தேவி;

யாரடா, பணியாள்! வாராய்!

பாண்டவர் மார்பில் ஏந்தும்

சீரையும் களைவாய்; தையல்

சேலையும் களைவாய்’ என்றான்.

(பாரதி, பாஞ்சாலி சபதம், 191)

‘மார்பைத் துணிகொண்டு மூடும் உரிமை கீழ்மக்களுக்குக் கிடையாது. ஒருவனையே எண்ணி, ஓரகத்தில் இருந்து, கற்பிலே சிறந்தவள் என்றால்கூடத் துணியிட்டு மார்பு மூடும் அந்தச் சலுகையைப் பாஞ்சாலிக்கு வழங்குவது குறித்துக் கொஞ்சம் கருதிப் பார்க்கலாம்; இவளோ அதற்கும் உரியவள் அல்லள்; ஐந்து பேரால் பெண்டாளப்பட்டவள்.

இவளுக் கென்ன மானம்? இவளுக்கென்ன சீலை? அடேய் பணியாள்! அந்தப் பாண்டவப் பயல்களின் தோளைத் தழுவி நிற்கும் துண்டை உருவு; அவர்கள் நெஞ்சிலே ஏந்தி நிற்கும் பெருமிதத்தை உருவு; அதற்கு அவர்கள் பெண்டாட்டியின் சீலையை உருவு’ என்றான். துரியோதனச் சபைக்குத் திரௌபதியைத் துச்சாதனன் இழுத்துவந்தபோது செஞ்சோற்றுக் கடனாளி கர்ணன் சொன்னது இது. அப்போது போலவே இப்போதும் இது வழக்கம்தான்.

பாஞ்சாலிகளுக்குத் துரியோதனாதிகள் செய்தனர்; பத்மினி களுக்குக் காவல் நிலையங்கள் செய்தன; சாதிப் பெருமை பாராட்டுவோர் அழுத்தப்பட்டு அடிமைப்பட்ட பலருக்கும் செய்கிறார்கள். எதிராளியை அம்மணப்படுத்துவது ஒன்றே அவரை அவமானப்படுத்தும் வழி என்று கருத வேண்டாம்; தன்னையே அம்மணப்படுத்திக்கொண்டு எதிராளியை அவமானப்படுத்து வாரும் உண்டு.

அம்மணம் என்ற சொல் எப்படி வந்தது? ‘நிர்வாணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக அம்மணம் என்பது வழங்கப்படுகின்றது. அம்மணம் என்ற சொல் அந்தப் பொருளில் தமிழிலக்கியத்தில் எங்கும் காணப்படவில்லை. அம்மணம் என வழங்கும் சொல் ஆடையில்லா அமணர்களைக் குறிக்கப் புதிதாகத் தோன்றுகிறது’ என்று சொல்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்

(பண்பாட்டுஅசைவுகள், பக்.93-94).

சமணர்களை அமணர்கள் என்றும் அழைப்பது வழக்கம். சமணர்களில் சுவேதாம்பரர், திகம்பரர் என்று இருபிரிவினர். சுவேதாம்பரம் – சுவேதம்+அம்பரம்; சுவேதம் = வெள்ளை; அம்பரம் = ஆடை; வெள்ளை ஆடை உடுத்தியவர் சுவேதாம்பரர். திகம்பரம் – திக்+அம்பரம்; திக் = திசை; அம்பரம் = ஆடை; திசைகளையே ஆடையாக உடுத்தியவர் திகம்பரர்; அதாவது ஒன்றுமே உடுத்தாதவர்.

சமணத்தை எதிர்கொண்ட சைவம்

இந்த ஒன்றும் உடுத்தாத அமணர்களே தமிழ்நாட்டில் பெருவாரியாக இருந்தனர் என்பதால், ஆடை உடுத்தாமல் பிறந்தமேனியாக இருக்கும் நிலை அவர்கள் பெயராலேயே அம்மணம் என்று வழங்கப்பட்டது என்கிறார் தொ.பரமசிவன். சமணத்தை எதிர்கொள்ளச் சைவம் குட்டிக்கரணம் போட்ட காலங்களிலேயே அம்மணம் என்ற சொல் ஆகிவந்திருக்கிறது.

குண்டாக்க னாய்உழன்று, கையில்உண்டு,

குவிமுலையார் தம்முன்னே நாணம்இன்றி

உண்டி உகந்துஅமணே நின்றார்சொல்கேட்டு

உடன்ஆகி உழிதந்தேன் உணர்வுஒன்றுஇன்றி; ...

(தேவாரம், 6:3:7)

ஒரு காலத்தில் இளம் பெண்களுக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் அம்மணமாய் நின்று கொண்டு வெறும் கை ஏந்திச்சோறு கேட்கும் குண்டர்களோடு சேர்ந்து கொண்டு உணர்வே இல்லாமல் திரிந்திருக்கிறேன் என்று சமணராக இருந்து சைவராக மதம் மாறிய அப்பர் பாடுகிறார்.

அற்றம்மறையா அமணர் ஆதம்இலிபுத்தர்

சொற்றம்அறி யாதவர்கள் சொன்னசொலைவிட்டுக்

குற்றம்அறி யாதபெரு மான்கொகுடிக்கோவில்

கற்றுஎன இருப்பது கருப்பறியல்ஊரே.

(தேவாரம், 2:31:10)

மறைக்க வேண்டியதை மறைக்காமல் திறந்துபோட்டுத் திரியும் அமணர்கள், அறிவில்லாத பவுத்தர்கள், இவர்கள் சொல்ல வேண்டிய பொருளை அறியாதவர்கள்; ஆகவே, இவர்கள் சொல்வதை மதிக்க வேண்டாம்; திருக்கருப்பறியலூரின் கொகுடிக் கோவிலில் குடிகொண்டிருக்கும் குற்றம் அறியாத பெருமானைக் கும்பிடுக என்று சமணர்களை நஞ்சாக வெறுத்த சம்பந்தர் பாடுகிறார்.

அம்மணம் இழிவு; அம்மணமாக வரும் அமணரும் இழிவு என்று சைவத்தை உயர்த்திச் சமணத்தை இழிக்க அம்மணத்தை அடையாளமாக்கியவர்கள் தேவார ஆசிரியர்களாகவே இருக்க வேண்டும். சமயங்களின் அரசியலால் அம்மணம் என்ற புதிய தமிழ்ச்சொல் அகரமுதலி ஏறியதும் அந்தக் காலத்திலாகவே இருக்க வேண்டும் என்றால், அதற்கு முன்பாக அம்மணம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறித்தார்கள்?

நக்கன், நக்கம் என்று குறித்தார்கள் என்று எடுத்துத் தருகிறார் இராம.கி என்னும் இராம.கிருட்டிணன் (‘வளவு’ http://valavu.blogspot.com/2006/05/1.html). நக்கர் என்பதிலிருந்தே ‘naked’ என்ற ஆங்கிலச் சொல்லும் ‘நக்கினம்’ என்ற வடமொழிச் சொல்லும் வந்தன என்றும் வேர்ச்சொல் காட்டுகிறார். அம்மணமாக இருக்கும் நக்கர்கள் வாழும் பகுதியே நக்கவரம் எனப்பட்ட நிக்கோபார் தீவு என்றும் குறிக்கிறார்.

நக்கன் எனும் பெயர் சிவனும் அருக்கனும் நின்மா ணியும் என நிகழ்த்துவர் புலவர்

(வடமலைநிகண்டு, 956)

தக்கன் வேள்வியைக் குலைத்தான் நக்கன் என்னும் பெயருக்குச் சிவன், அருகன், நிர்வாணி ஆகிய பொருள்கள். அருகன் என்பவர் சமணர். நிர்வாணி என்பவர்அம்மணர் என்றால் அம்மணமாய்த் திரிந்தவர்கள் சிவனும் அருகரும்.

அருகர் அம்மணமாய்த் திகம்பரராய்த் திரிந்தது வரலாறு. சிவன் அம்மணமாய்த் திரிந்தது பழங்கதை. வைதிக மேலாண்மையை அடக்க, வேள்வித் தலத்துக்குப் பிச்சாண்டிக் கோலத்தில் அம்மணமாய் வந்து, வேள்வி குலைத்துத் தன் மேலாண் மையை நிறுத்தினான். நல்லது. சமண அம்மணத்தை இழித்துரைத்த சைவர்கள், சைவ அம்மணத்தை என்னவென்று பேசினார்கள்?

தக்கன் பெருவேள்வி தன்னில்அமரரைத்

துக்கம் பலசெய்து சுடர்பொன்சடைதாழக்

கொக்கின் இறகோடு குளிர்வெண்பிறைசூடும்

நக்கன் நமைஆள்வான் நல்லம்நகரானே

(தேவாரம், 1:85:2)

- என்று சைவ அம்மணத்தைப் போற்றிப் பாடுகிறார் சம்பந்தர்.

தக்கன் வேள்வியைக் குலைத்தவன்; தன்னை மதிக்காத தக்கனைக் கும்பிட்டு நிற்கும் அறிவிலி அமரர்க்கு அறிவு வரச் செய்தவன்; தாழ விரித்த சடையை உடையவன்; கொக்கின் இறகையும் குளிர்வெண் பிறையையும் தலையில் அணிந்தவன்; ஆனால் உடை ஏதும் அணியாத அம்மணன். அவனே நம்மை ஆளும் திருநல்லம் நகரத்தான்.

பக்கம் பூதங்கள் பாடப்பலிகொள்வான்;

மிக்க வாள்அரக் கன்வலிவீட்டினான்;

அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை

நக்கன் என்னும்இந் நாண்இலிகாண்மினே.

(தேவாரம், 5:29:10)

பூதங்கள் புடைசூழப் பிச்சைஎடுக்கப் போகிறவன்; அரக்கனாகிய இராவணனின் வலிமையை அழித்தவன்; உத்திராக்க மாலை அணிந்தவன்; ஆனால், உடை ஏதும் அணியாத அம்மணன் திருவாவடுதுறையில் உள்ள நம்சிவன் என்று வெட்கங்கெட்டுப் பாடுகிறாள் சிவனிடத்தில் மனம் தொலைத்த இந்தப் பெண் என்கிறார்அப்பர்.

திருமூலர் என்ன சொல்கிறார்?

ஒக்கநின் றானை, உலப்புஇலிதேவர்கள்

நக்கன்என்று ஏத்திடும் நாதனை, நாள்தொறும்

பக்கநின் றார்அறி யாதபரமனைப்

புக்குநின்று உன்னியான் போற்றிசெய்வேனே.

(திருமந்திரம் 3)

எத்தனையோ தெய்வங்கள்; அவர்களுள் ஒருவன்போலக் கூட்டத்தோடு கூட்டமாய்ச் சேர்ந்து நிற்கிறான்; ஆனாலும் தன்னைப் பகட்டாய் மினுக்கிப் பொய்மை காட்டாமல் அம்மணமாய் மெய்ம்மை காட்டுகிறான்; அவ்வியல்பாலேயே தனித்து நிற்கிறான்;

அனைவராலும் வணங்கப் படுகிறான்; அம்மணமாய் இருப்பதால் பக்கத்தில் நிற்பவர்கள்கூட முகம் திருப்பிக்கொள்ள, தள்ளி நிற்கிற நான் அவனை அடையாளம் கண்டு போற்றுகிறேன் என்று அம்மணம் போற்றுகிறார். அம்மணம் சமணத்துக்கும் சைவத்துக்கும் பொது. சமய-சமூகவரலாறுகளில் அம்மணத்தை ஆய்ந்து கொள்ள வேண்டுவன கொள்க; செய்ய வேண்டுவன செய்க.

(வேண்டியதைக் கொள்வோம்) கட்டுரையாளர்,

தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

மேலும்