குறையொன்றுமில்லாத கோவிந்தா

By செய்திப்பிரிவு

ராமாயணத்தில் ஸ்ரீராம பட்டாபிஷேகம் மாதிரி, பாகவதத்தில் பகவானுக்குப் பட்டாபிஷேகமான சந்தர்ப்பத்தில் சூட்டப்பட்ட பேர் “கோவிந்த” என்பதே. ராமர் மாதிரி கிருஷ்ணர் பெரிய ராஜ்யத்துக்கு ராஜாவாகப் பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்ளாவிட்டாலும், தேவ ராஜாவாலேயே பட்டாபிஷேகம் பெற்றதால் இதற்கு ரொம்ப முக்கியத்துவம் உண்டு. “கோவிந்தராஜா” என்று கிருஷ்ணனுடைய பல பெயர்களில் இதற்கு மட்டுந்தான் “ராஜா” சேர்க்கிறோம்.

எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு. ஆண்டாள் திருப்பாவையில் “குறையொன்றுமில்லாத கோவிந்தா!” என்று கூப்பிடுகிறார் அல்லவா? பகவானுக்குக் குறை இருந்தது என்று யாராவது நினைப்பதுண்டா? சாதாரண மநுஷ்யன் குறைப்பட்டுக்கொண்டேயிருக்கும் சுபாவமுள்ளவன். அதனால் அப்படியில்லாத ஒருவனைக் ‘குறையொன்றுமில்லாத மநுஷ்யர்' என்று விசேஷிப்பது பொருத்தம், பகவானை ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்? இப்படிச் சொல்வதாலேயே, ‘அப்பன் குதிருக்குள் இல்லை' என்கிற மாதிரி, பகவானுக்குக் குறையிருந்தது போலத்தானே தொனிக்கிறது.

யோசித்துப் பார்த்ததில், பகவானுக்கு வாஸ்தவமாகவே பூர்வத்தில் ஒரு குறை இருந்தது. அது கோவிந்தனாக அவன் ஆனபோதுதான் தீர்ந்தது என்று தெரிந்தது. பகவானுக்கு என்ன குறை இருந்தது? ‘ராம பட்டாபிஷேகம்' என்றேனே. அதிலேயே குறை. சக்ரவர்த்தியாக முடி சூடியதில் என்ன குறை என்றால், இதை வால்மீகி தம்முடைய ராமாயணத்தில் வர்ணித்திருக்கிற தினுசிலேதான் குறை ஏற்பட்டுவிட்டது.

‘வஸிஷ்ட வாம தேவாதி ரிஷிகள் எட்டுப் பேர் ராம சந்திரமூர்த்திக்குப் பட்டாபிஷேகம் பண்ணினார்கள், அது எப்படித் தெரியுமா இருந்தது? அஷ்ட வசுக்கள் தேவேந்திரனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணின மாதிரி இருந்தது' என்று வால்மீகி வர்ணித்திருக்கிறார், “வஸவோ வாஸவம்யதா” - “வாசவன் எனப்படும் இந்திரனுக்கு வசுக்கள் பண்ணியதுபோல” என்று அர்த்தம். இந்த Comparison (ஒப்புவமை) தான் ராமருக்குக் குறை உண்டாக்கிவிட்டது. ஏன்?

இந்திரன் சீரழிந்த கதையை இதே வால்மீகி பாலகாண்டத்தில் சொன்னார். கௌதம பத்னியாகிய, அதாவது தாய் போல் மதிக்க வேண்டிய, ரிஷி பத்னி அகல்யையிடம் தப்பாக நடந்துகொண்டு, மகாபாவம் பண்ணினவன் இந்திரன். அதற்காக சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு அவமானப்பட்டவன். பதிதையாகிவிட்ட அகல்யைக்கு ராமசந்திர மூர்த்தி புனருத்தாரணம் தந்த பெருமையால்தான் இன்றைக்கும் அவரை “பதித பாவன சீதாராம்” என்கிறோம்.

கதை இப்படியிருக்க, அந்த இந்திரனையே தனக்கு உவமையாக வால்மிகி மகரிஷி சொல்லிவிட்டதில் ராமருக்கு உள்ளூரக் குறை ஏற்பட்டு விட்டது. ஏகபத்னி விரதனான தம்மைத் தகாத பாபம் பண்ணினவனோடு ஒப்பிட்டுவிட்டாரே என்று ஒரு குறை.

ஆதியிலே ஒரு பட்டாபிஷேகம் நிச்சயமான சமயத்திலே அது நிறைவேறாமலே ராமர் வனவாசம் பண்ணும்படி ஆயிற்று. அப்புறம் பதிநாலு வருஷங்கள் ஜனங்கள் தவியாய்த் தவித்துக் காத்திருந்து மறுபடி பட்டாபிஷேகம் நடக்கிறது. அதனால் பட்டாபிராமன் என்றே பகவானுக்கு ஒரு பேர் ஏற்பட்டிருக் கிறது. ராமாயண பாரா யணம், ப்ரவசனம் எதுவானாலும் பூர்த்தி செய்யும் மங்களமான கட்டம் அதுதான்.

அங்கே போய், பால காண்டத்தில் தன் கால் தூசியினாலேயே பரிசுத்தி பெற்ற ஒருத்தியை ஆதியில் தூசுபடுத்தியவ னோடு தன்னை ஓப்பிட்டால் பகவானாகத்தானிருக்கட்டும், அவர் மநுஷ்யம் மாதிரிதானே நன்றாக ‘ஆக்ட்' பண்ணினார், அதனால், வருத்தம் ஏற்படத்தானே செய்யும்?

இன்னொரு குறை. இந்திராதி தேவர்கள் ராவணனின் ஹிம்சையைத் தாங்க மாட்டாமல் பிரார்த்தனை பண்ணிக் கொண்டதன் மேல்தான் மஹாவிஷ்ணு ராமாவதாரம் பண்ணினது. ராவணனின் புத்திரன் மேகநாதனே இந்திரனை ஜயித்து “இந்திரஜித்” என்று பேர் பெற்றிருந்தான்.

அப்படிப்பட்ட ராவணனைத் தாமே ஜெயித்தும், இந்திரஜித்தைத் தாம் ஜெயிக்க வேண்டுமென்று இல்லாமல் தம்பி லக்ஷ்மணனை விட்டே ஜெயித்தும் விஜயராகவனானவர் ராமர். இப்படி ராட்சசனை சம்காரம் பண்ணிவிட்டுப் பட்டாபிஷேகம் பண்ணிக் கொள்கிறபோது, தம்மிடம் தோற்றுப் போனவரிடம் தோற்றுப்போன இந்திரனுக்கே தம்மை ‘கம்பேர்' பண்ணினால் குறையாகத்தானே இருக்கும்?

வால்மீகி பாத்திரங்களின் குணத்தை Compare பண்ணி இப்படிச் சொல்லவில்லை. பட்டாபிஷேக வைபவத்திலிருந்து ஆனந்தக் கோலாகாலத்தைப் பார்த்ததும் வேதலோகத்தில் நடந்த இந்திர பட்டாபிஷேகத்தின் விமர்சைக்கு இதை ஓப்பிடலாம் என்று நினைத்தார். எட்டு வசுக்கள் மாதிரியே இங்கேயும் சரியாக எட்டு ரிஷிகள் அபிஷேகம் பண்ணின வுடன், “வஸவோ வாஸவம் யதா” என்று உற்சாகத்தில் எழுதிவிட்டார்.

இதனால் பகவானுக்கு உள்ளுக்குள்ளே ஏற்பட்ட குறை, அப்புறம் கிருஷ்ணாவதாரத்தில் சாட்சாத் அந்த இந்திரனே, தோற்றேன் என்று இவர் காலில் வந்து விழுந்து இவருக்கு ‘கோவிந்த' பட்டம் தந்து அபிஷேகம் பண்ணினபோதுதான் தீர்ந்தது. ராமபட்டாபிஷேகத்தில் உண்டான குறை கோவிந்த பட்டாபிஷேகத்தினால்தான் தீர்ந்தது. இதைத்தான் ஆண்டாள் suggestive -ஆக (குறிப்பால் உணர்த்தும் முகமாக) “குறையொன்றுமில்லாத கோவிந்தா” என்று சொன்னாள்.

‘குறைவேயில்லாத' என்றால் பரிபூர்ண வஸ்து என்று அர்த்தம். ‘பூர்ணம் ப்ரஹ்ம சநாதனம்', ‘பூர்ணாவதாரம்' என்று கிருஷ்ண பரமாத்மாவைச் சொல்வது இதனால்தான்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்