சூபி வழி 19: அனைத்தும் இறைவனின் கொடைகள்

By முகமது ஹுசைன்

உலகின் ஒரு பகுதி

இந்த உலகைவிட்டு

எப்படிப் பிரியும்

நீரிலிருந்து ஈரம்

பிரியுமா என்ன          

                     -ஜலாலுதீன் ரூமி

வறுமையை உணர மனத்தில் இடமோ வாழ்வின் துன்பங்களை எண்ணி வருந்த நேரமோ இன்றி, மெய்ஞ்ஞான உலகில் சஞ்சரித்த மாபெரும் ஞானியே ராபியாபஸரீ. சூபி உலகில் பதிவு செய்யப்பட்ட முதல் பெண்ணும் அவரே. வாழ்வை அதன் போக்கில் எவ்விதப் புகாருமற்று எதிர்கொள்ளும் இயல்பை வரமாகப் பெற்றவர் அவர்.

தணிக்க முடியாத ஆன்மிகத் தாகத்துக்குச் சொந்தக்காரரான, அவரது இறைநேசத்தின் வீரியம் அளப்பரியது. அவரது ஞானத்தின் ஆழம் அளவிடமுடியாதது. இறைவன் ஒருவனுக்காக வாழ்ந்து மடிந்த ராபியா பஸரீ, பாஸ்ரா நகரத்தில்  ஒரு எளிய குடும்பத்தில் நான்காவது குழந்தையாக 712-ம் ஆண்டு பிறந்தார்.

ராபியா பிறந்தபோது அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி, பட்டினியால் வாடிக்கொண்டிருந்தது. ராபியா பிறந்த அன்றிரவு, விளக்கேற்றக்கூட எண்ணெய் இல்லாததால், அவரது வீடே இருளில் மூழ்கியிருந்தது. அந்த இருள்நிறைந்த வீட்டுக்கு ஒளியாய் ராபியா பிறந்தாலும், அவரது குடும்பத்தின் வறுமை முடிவற்ற ஒன்றாகவே தொடர்ந்தது.

ராபியா பிறந்த சில ஆண்டுகளில்அவருடைய தந்தை இறந்துவிட்டார். அந்த இழப்பிலிருந்து மீள்வதற்குள், நாட்டைச் சுழன்றடித்த பஞ்சம், அவரது குடும்பத்திலிருந்து அவரைப் பிரித்து ஆதரவற்றவராக்கியது. ஆதரவற்ற ராபியா ஒரு திருடர் கூட்டத்தில் சிக்குண்டார். பின் அந்தத் திருடர்கள் அவரை ஒரு செல்வந்தரிடம் அடிமையாக நல்ல விலைக்கு விற்றனர்.

இறைநேசத்தின் உருவம்

சிறுவயதிலேயே வாழ்வின் அத்தனை துன்பங்களையும் அவர் அனுபவித்துவிட்டார். அவரது இடத்தில் வேறு யாராவது ஒருவர் இருந்திருந்தால், துன்பத்தைத் தாங்க முடியாமல், சோகத்திலும் ஆற்றாமையிலும் தனது வாழ்வை முடித்திருப்பார். ஆனால், ராபியா தனது வாழ்நாள் முழுவதும் இன்பத்தின் ஊற்றாக, நம்பிக்கையின் பேரொளியாக, இறை நேசத்தின் உருவமாகத் திகழ்ந்தார்.

இன்பம் என்றால் என்னவென்றே தெரியாத ராபியா, துன்பத்தையே இன்பம் என எடுத்துக்கொண்டார். அடிமை வாழ்வு என்பது நம்மால் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்தது. ராபியாவின் அடிமை வாழ்வில் நிறைந்திருந்த இன்னல்கள் சொல்லிலடங்காதவை. 

குழந்தை என்ற சிறுகரிசனம் கூட அவரிடம் காட்டப்படவில்லை. அன்போ பரிவோ காட்ட அவருக்கு யாருமில்லை. ஆனால், ராபியா தனக்குத் தேவையான அன்பையும் பரிவையும் இறைவனிடமிருந்து பெறும் விதமாகத் தனது வாழ்வைத் தகவமைத்துக்கொண்டார்.

அவரது பகல்கள் கடினமான வேலைப் பளுவில் கழிந்தன. அவரது இரவுகள் நெக்குருகும் பிரார்த்தனையில் கரைந்தன. நோன்பும் தொழுகையும் அவரது அன்றாடமாக இருந்தது. வாழ்வின் துயரையும் வேலையின் கடினத்தையும் இறைவன் மீதான நம்பிக்கையை மட்டும் கொண்டு எதிர்கொண்டார்.

ஓர் இரவு மெய்மறந்த நிலையில் “என்னைக் காக்கும் ஆண்டவரே! நான் சுதந்திரமாக இருந்திருந்தால், நாள் முழுவதும் இரவும் பகலும் உமது பிரார்த்தனையில் என் வாழ்வைச் செலவிடுவேன். நீ என்னை ஒரு மனிதனுக்கு அடிமைப்படுத்தியபோது, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அதைத் தற்செயலாக் கேட்ட அந்தச் செல்வந்தன் மனம் இளகி ராபியாவை அடிமைத் தளையிலி ருந்து அக்கணமே விடுவித்தார்.

பாலைவனத்தில் துறவு

சுதந்திரம் பெற்ற ராபியாவுக்கு. செல்வதற்கு ஊரில்லை, வீடில்லை. இறை நேசமே அவரது எல்லாமுமாக இருந்தது. இறைவனைத்தவிர வேறுயாரும் துணையில்லை. அச்சமோ தயக்கமோ இன்றி தனியொரு பெண்ணாகப் பாலைவனத்துக்குள் சென்று தனது துறவை அவர் மேற்கொண்டார்.

கடுமையான துறவு அவருடையது. உணவை மறந்து, தூக்கத்தைத் தொலைத்து, அல்லும் பகலும் இறை வணக்கத்திலேயே ஆழ்ந்திருந்தார். வறுமை அவரது கவசமாக இருந்தது. தன்னல மறுப்பு அவரது சுவாசமாக இருந்தது. கடவுள்மீதான அன்பும் பற்றும் அவரது உற்ற தோழர்களாக அந்தத் துறவு வாழ்வில் இருந்தன.

பாலைவனத்தில் இவரைச் சந்தித்த ஹசன் பஸரீ, ராபியாவின் ஆன்மிக குருவானார். ஆன்மிகத்தின் அனைத்து நிலைகளையும் மெய்ஞ்ஞானத்தின் அத்தனை ரகசியங் களையும் ஹஸன் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். ஹஸனின் வழிகாட்டுதலால், விரைவிலேயே ஆன்மிகத்தின் உச்சத்தைத் தொட்டு, ஞான பிழம்பாக ராபியா ஒளிரத் தொடங்கினார்.

ராபியாவின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைக் காணவும் தங்களது வாழ்வில் தெளிவைப் பெறவும் அறிவுரைகளை வேண்டியும், பாலைவனத்தின் நடுவிலிருந்த ராபியாவின் குடில் முன் மக்கள் குவியத் தொடங்கினர்.

ராபியாவின் அன்பு ததும்பிய முகத்தால் கவரப்பட்டு, பல மன்னர்கள் அவரை மணக்க முன்வந்தனர். “இறைவனிடம் அன்பு செலுத்தவே எனக்கும் நேரம் போதவில்லை” என்று கூறி அந்த மன்னர்களின் மனத்தை ஆன்மிகப் பாதைக்கு மடைமாற்றிவிட்டார்.

அவர் வசித்த குடிலில் ஒரு கிழிந்த பாயில் தலைக்குக் கல்லை வைத்து உறங்குவது அவரது வழக்கம். ஒருமுறை அவரைப் பார்க்க மாலிக் வந்திருந்தார். ராபியாவின் குடிலில் நிலவிய ஏழ்மையையும் வசதி குறைவையும் கண்டு மனம் வருந்திய அவர், தனது நண்பர்களிடம் சொல்லி, வசதியை மேம்படுத்தித் தருவதாகக் கூறினார். மாலிக்கைச் சற்று வியப்புடன் நோக்கிய ராபியா, சில நொடிகளில் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினார்.

பின் மாலிக்கைப் பார்த்து “கொடுப்பவர் ஒருவர்தான் என்பது உமக்குத் தெரியாதா? வறியவரின் வறுமையும் செல்வந்தரின் செல்வமும் அவருக்குத் தெரியாதா? எனது இந்த நிலையே கொடுப்பவரின் விருப்பம் எனும்போது, இந்த நிலையைவிட எனக்கு மகிழ்வு அளிக்கும் நிலை வேறு இருக்குமோ? இன்பங்கள் மட்டுமல்ல; துன்பங்களும் இறைவனின் கொடைகளே என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா?” ராபியா கேட் டார். மாலிக் வாயடைத்துப் போனார்.

ராபியாவின் மரணத் தறுவாயில், அரசர் உட்பட நாடே திரண்டிருந்தது. இறுதித் தறுவாயில் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேறும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, அனைவரும் வெளிச் சென்று வீட்டின் கதவைப் பூட்டிவிட்டனர். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றவர்களை அவரது நிரந்தர ஓய்வே வரவேற்றது.

(மெய்ஞ்ஞானம் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்