மௌனம் இறைவனின் மொழி!
அதை மொழிபெயர்க்க முயன்றால்
வார்த்தைகள் ஏழையாகிவிடும்!
- ஜலாலுதீன் ரூமி
ஞானத்தின் ஒளியைக்கொண்டு மெய்ஞான உலகில் சஞ்சரித்து, அதன் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுத் தேர்ந்த மாபெரும் ஞானி சுப்யான் அத்தௌரீ. இவர் சூபி உலகின் முன்னோடி. சொல்வதைச் செயலில் மட்டுமல்லாமல் எண்ணத்திலும் காட்டிய இவர், கூஃபா நகரில் கி.பி. 714 ஆண்டில் பிறந்தார். இறைவனின் மீதான இவரது நேசம் அளப்பரியது. இவரது பக்தி கேள்விக்கு அப்பாற்பட்டது.
அளவற்ற ஞானமும் தெளிவான அறிவும் தீர்க்கமான சிந்தனையும் இறைவனால் இவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள். சிறுவயது முதல், ஆன்மிக மார்க்கமே இவரது விருப்பமாக இருந்தது. தொழுகையும் நோன்பும் இவரது அன்றாடமாக இருந்தது. பசியைத் துறந்து தூக்கத்தைத் தொலைத்து இறைப் பக்தியில் முற்றிலுமாக ஐக்கியமாகி வாழ்ந்த இவரை, சூபி ஞான உலகில் ஒரு சுயம்பு என்று சொல்லலாம்.
வயது ஏற, ஏற இவரது ஆன்மிக நிலையும் உயர்ந்து கொண்டே இருந்தது. இவரது உரையில் மெய்ஞானம் ததும்பி ஓடியது. அவரது உரையைக் கேட்பவர்கள், எளிதில் பரவச நிலைக்குச் சென்றனர். பக்தியின் பல படிநிலைகளை இவரது உரை தெளிவாக விளக்கியது. ஆன்மிகத்தின் சிக்கலான நிலைகளை எளிதான மொழியில் சாமானியருக்கும் புரியும் வகையில் விளக்கும் வல்லமையை இயல்பிலேயே அவர் கொண்டிருந்தார்.
மனத்தை அடக்கும் சூத்திரம்
இவரது உரையைக் கேட்கப் பெரும் கூட்டம் கூடுவது அப்போதைய வாடிக்கையாக இருந்தது. மனத்தில் பட்டதை எந்த விதத் தயக்கமும் இன்றி கூறும் தன்மைகொண்டவர். மன்னராக இருந்தாலும், அவரிடம் உள்ள குறையை முகத்துக்கு நேராகக் கூறினார். நேர்மையின் உருவமாக இருந்த இவரிடம் எதிர்த்துப் பேச மன்னர்களே அஞ்சும் நிலை அன்று நிலவியது.
இன்பங்களையும் வளங்களையும் வெறுத்து ஒதுக்கும் மனம் வாய்க்கப் பெற்றிருந்த காரணத்தால். செல்வத்தை அவர் தீண்டியதே இல்லை. பசிக்கான உணவை, ருசிக்காக அல்லாமல், உடலின் வலுவுக்காக மட்டுமே எடுத்துக் கொண்டார். மனத்தின் இச்சைகளை அடக்கும் சூத்திரம் தெரிந்திருந்த காரணத்தால், மனமும் அதன் எண்ணங்களும் அவரது விருப்பப்படி இருந்தன.
பகட்டைப் பார்க்காதே
ஒருமுறை தன்னுடைய நண்பருடன் நடந்து செல்லும்போது, அங்கிருந்த செல்வந்தரின் பகட்டான வீட்டை அவருடைய நண்பர் ஏக்கத்துடன் பார்த்தது இவரது கண்ணில் பட்டது. “செல்வந்தரின் ஆடம்பர பகட்டைவிட உனது இந்த ஏக்கப் பார்வையே மோசமானது.
ஏக்கமாகவும் வியப்பாகவும் பார்ப்பதற்கு யாரும் இல்லையென்றால், உலகில் எந்த செல்வந்தரும் தனது செல்வத்தை வெளிக்காட்டும் விதமாக இத்தகைய பகட்டான வீடுகளைக் கட்ட மாட்டார்” என தன்னுடைய நண்பரிடம் கூறினார். இவர் உரையாற்றும் சபைகளில் எப்போதும் செல்வந்தர்களுக்குக் கடைசி வரிசையே ஒதுக்கப்பட்டது.
தாங்களும் ஏழையாக இருந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை இவரது இந்தச் செயல் செல்வந்தர்களின் மனத்தில் விதைத்தது. செல்வத்தின் பகட்டைத் தொலைத்து, ஏழைகளுக்கு வாரி வழங்கும் ஈகைக் குணத்தை அந்த செல்வந்தர்களுக்குள் இவர் தன்னுடைய உரையின் மூலமும் செயலின் மூலமும் ஏற்படுத்தினார்.
துறவே வாழ்வு
“துறவு என்பது வெறும் சொல் அல்ல, அது முழு ஈடுபாட்டுடன் நிகழ்த்த வேண்டிய செயல். ஆசைகளை மட்டும் துறக்காமல், தன்னையே முழுமனத்துடன் இறைவனுள் கரைக்கும் ஒரு வாழ்வு.” என்று எப்போதும் தன்னுடைய சீடர்களிடம் அவர் கூறுவார்.
அந்தச் சொற்களின் படித்தான் அவரது துறவும் வாழ்வும் அமைந்திருந்தன. அவரது துறவை துறவின் உச்சநிலை எனலாம். சுற்றம் துறந்து, குடும்பம் துறந்து, வீட்டைத் துறந்து, ஊரைத் துறந்து அவர் எங்கும் செல்லவில்லை. மக்களுடன் மக்களாக, சுற்றம் சூழ வாழ்ந்தே தனது துறவை அவர் மேற்கொண்டார். செல்வத்தை மட்டுமல்லாமல்; செல்வந்தர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ஒருங்கே ஒதுக்கி வைத்தார்.
“செல்வந்தர்களுடன் நட்புறவை விரும்பும் துறவி, ஒரு நயவஞ்சகனாக மட்டுமே இருக்க முடியும். அதே போல் அதிகாரத்தில் இருப்போரிடம் நட்புறவை விரும்பும் துறவி ஒரு திருடனாக மட்டுமே இருக்க முடியும்” என்று பின்னொரு நாளில் இதுகுறித்து அவர் விளக்கமளித்தார்.
தன்னைப் புகழ்பவரிடம் காட்டும் அன்பைவிட அதிகமான அன்பைத் தன்னை இகழ்பவரிடம் அவர் வெளிப்படுத்தினார். “இகழ்பவரே நம்மை நல்வழிப்படுத்துபவர்” என்று எப்போதும் கூறுவார். “நன்மை செய்வது மனிதராகப் பிறந்த அனைவரின் கடமை. ஒரு நன்மையைச் செய்துவிட்டது அதற்காக மகிழ்வதைவிட கேடு கெட்ட செயல் எதுவுமில்லை. நன்மை புரிய வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி கூறுங்கள்” என்பதே சீடர்களுக்கு அவர் வழங்கிய முக்கியமான அறிவுரை.
மன்னரின் பகட்டு
ஒருமுறை மன்னர் அவரை அரண்மனைக்கு அழைத்தார். அவருடைய பகட்டும் அதிகார மிடுக்கும் முகம் சுளிக்கும் விதமாக இருந்தன. “சுப்யான் அவர்களே, எனக்குத் தங்களின் அறிவுரை என்ன?” என்று மன்னர் சற்றே திமிர் தொனிக்கக் கேட்டார். “இறைவனுக்கு அஞ்சுங்கள்.
இறைவன் படைத்த மண்ணில் அநீதியையும் அட்டூழியத்தையும் விதைக்க வேண்டாம். ‘மண்ணிலிருந்தே உங்களைப் படைத்தோம். அதிலேயே நாம் மீண்டும் உங்களைச் சேர்ப்போம். பின்னர் ஒரு தடவை அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்’ என்ற குர்ஆன் வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வெளிவந்துவிட்டார்.
மூடிய விழிகள்
அவர் நோயுற்று, மரணப் படுக்கையிலிருந்தபோது, அவரைக் காண வந்த மக்களின் கூட்டத்தால், பஸ்ரா நகரமே தள்ளாடியது. மன்னர்களும் அமைச்சர்களும் சான்றோர்களும் ஞானிகளும் அவருக்கு இறுதி விடை கொடுக்க அங்கே குழுமியிருந்தனர்.
முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்த சுப்யான், தன்னிடமிருந்த சொற்ப காசுகளைச் சீடர்களிடம் கொடுத்து ஏழைகளுக்குத் தானமாகக் கொடுக்கச் செய்தார். அதன் பின்பு கண்களை மூடி, இறைவணக்கத்தில் ஈடுபட்டவர், தனது கண்களை ஒருபோதும் திறக்கவில்லை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago