உட்பொருள் அறிவோம் 20: உன்னதத்தின் அடையாளம் கல்கி

By சிந்துகுமாரன்

நரசிம்மாவதாரத்துக்கு அடுத்ததாக வருவது வாமனாவதாரம் - முதல் முழு மனிதன். ஆனால் சிறிய உருவம். அந்தச் சிறிய உருவத்துக்குள்ளே அடங்கியிருந்து வெளிப்படுவது உலகனைத்தையும் - காலம், வெளி இரண்டையும் - அளந்து வளைத்துவிடும் திரிவிக்கிரமாவதாரம். புதிதாகத் தோன்றியுள்ள மனிதனுக்குள்ளே அடங்கியிருந்து வெளிப்பட இருக்கும் அபாரமான திறன் அது.

அடுத்ததாகப் பரசுராமர். ராஜஸ குணத்தின் வெளிப்பாடான குரோதமும் பழிவாங்கும் உணர்ச்சியும் மேலிட, க்ஷத்திரியர்களையெல்லாம் பூண்டோடு அழிப்பேன் என்று சபதம் மேற்கொண்டு, கையில் கோடரியுடன் அலைந்துகொண்டிருந்த உக்கிரமான மனிதர் அவர்.

தனக்கு அடுத்த அவதாரமான, மனிதத் தன்மையின் சாரமான சாத்விகக் குணத்தின் உருவேயான, ராமாவதாரத்தை எதிர்கொண்டபோது, தன் உக்கிரத்தை ராமபாணத்துக்கு இரையாகக் கொடுத்துச் சென்றார் பரசுராமர். பிரக்ஞையின் வெளிப்பாடு தன் வரையறைகளைக் கடந்து, அடுத்த உன்னத நிலையை அடைந்ததற்கான குறியீடு இது.

சத்வ குணத்தின் மனித ரூபம்

ராமர் புறவயமான தர்மத்தின் குறியீடாகத் தோற்றமளிப்பவர். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் தர்மத்துக்கு இணங்க, சற்றும் தயக்கமோ எதிர்வினையோ இல்லாமல் மரவுரி தரித்துக் கானகம் ஏகிய மனிதன் அவர்.

மனிதப் பிரக்ஞையில் தாமஸ, ராஜஸ குணங்கள் ஒன்றையொன்று எதிர்கொண்டு ரத்து செய்துவிட, சத்வ குணம் வெளிப்பட்டு மேலோங்கும் உன்னதத்தை வெளிக்காட்டிய மனித ரூபம் ராமாவதாரம்.

அடுத்தது கிருஷ்ணாவதாரம். புறவயமான தர்மத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, பிரக்ஞை உள்வயப்பட்டு, அகவயமான தர்மத்தின் இயக்கப்பூர்வமான செயல்பாட்டின் உருவம்தான் கிருஷ்ணாவதாரம். அதனால்தான் கிருஷ்ணரின் பல செயல்கள் புறவயமான தர்மத்தின் பார்வையில் அத்துமீறலாகத் தோன்றுவது தவிர்க்க இயலாததாக இருக்கிறது.

ஜயத்ரத வதத்துக்காகப் பொய்யான சூர்யஸ்தமனத்தை உண்டாக்கியது, தூது போனபோது விதுரனின் வீட்டில் போய்த் தங்கிவிட்டு, விதுரனை மகாபாரதப் போரில் பங்கு கொள்ளாமல் செய்துவிட்டது, குந்தியின் மூலமாகக் கர்ணன் பிரம்மாஸ்திரத்தை ஒருமுறைக்கு மேலாகப் பயன்படுத்தாமல் விடச் செய்தது போன்ற செயல்களை ராமாவதாரத்தில் பார்க்கவே முடியாது.

முதிர்ச்சியற்ற தன்மை

தசாவதாரம் என்பது பரிணாமம் குறித்த கோட்பாடு என்பதைப் புரிந்துகொள்ளாமல், பார்ப்பதால் அபத்தங்கள்தாம் விளையும். கிருஷ்ணாவதாரத்தின் உட்பொருளைப் புறவயமான தர்மத்தின் அளவுகோல்களைக் கொண்டு பார்ப்பது தவறானது.

ஆனால், அதே வேளை புறவயமான தர்மத்தின் அளவுக்குக்கூட அக வளர்ச்சி இல்லாத மனிதர்கள் தாம் செய்யும் அக்கிரம அநியாயங்களுக்குக் கிருஷ்ணரை உதாரணம் காட்டுவது வெறும் முதிர்ச்சியற்ற தன்மையின் வெளிப்பாடேயாகும். சொல்லப் போனால் நம்மில் பலர் இன்னும் பரசுராம அவதாரத்தின் நிலையைக்கூட அடையாமல்தான் இருக்கிறார்கள். அதுதான் இன்று உலகத்தில் பரந்து கிடக்கும் வன்முறைக்குக் காரணம்.

இப்போது கிருஷ்ணாவதாரத்தின் உட்பொருளை ஓரளவுக்குப் பார்ப்போம். ராமர் ஒரு மகன், சகோதரன், கணவன், அரசன். அவ்வளவுதான். அந்தக் காலத்தில் நிலவிவந்த தர்ம நீதிக்கேற்ப ராமராஜ்யத்தை உருவாக்கி நடத்தியவர். தன் வாழ்க்கையையும் அவ்வாறே வாழ்ந்தவர்.

ஆனால், கிருஷ்ணர் தன் நாட்டுக்கு ஒரு அரசனாக இருந்தது மட்டுமின்றி, தம் காலத்தில் நடைபெற்று வந்த பல அரசாங்கங்களின் இயக்கங்களிலும் பங்கு கொண்டு அவற்றை வழிநடத்தியவர். சிறந்ததொரு ராஜதந்திரியாகப் பரிமளித்தவர். அற்புதமான கலைஞர். அவருடைய புல்லாங்குழலின் ஓசையில் மயங்கி, கோபியர்கள் மட்டுமன்றி ஆவினங்களும் தம்மை மறந்து நின்ற கதை நாமறிவோம். அசாத்தியமான காதலர்.

பலராம அவதாரம்

இதற்கெல்லாம் மேலாக, தான் ஆதியந்தமில்லாத, பிரபஞ்சத்தின் ஆதாரமான, முழுமுதற் பிரக்ஞையின் சுய வெளிப்பாடு என்ற முழு உணர்வோடு தோன்றிய முதல் அவதாரம் கிருஷ்ணாவதாரம்தான். அகிலம் போற்றும் ‘கீதை'யை அவர் முழுமுதற்பொருளின் நிலையில் நின்றுதான் குருக்ஷேத்திரத்தில் அர்ச்சுனனுக்கும் அவன் வாயிலாக உலகோருக்கும் உபதேசித்தார். கால ஓட்டத்தில் கடந்துபோகும் அனைத்து தர்மங்களுக்கும் உற்பத்தி ஸ்தானமாக விளங்கும் காலமற்ற பரிபூர்ண நிலையிலிருந்து வெளிப்பட்டு வந்தது 'கீதை'.

அடுத்தது பலராம அவதாரம். ஏர்பிடிக்கும் உழவனின் குறியீடாகக் கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டு விளங்குவது பலராமவதாரம். மனிதனின் சமூக வளர்ச்சியில் விவசாயத்தைக் கண்டுபிடித்தது முக்கியமானதொரு கட்டமாகும். அதன் பிறகுதான் மனித இனம் பூமியின் ஒரு இடத்தில் நிலைகொண்டு பல கலைகளையும் ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் உருவாக்கியது. அதன் குறியீடுதான் பலராமவதாரம்.

பலராமருக்குப் பதிலாக புத்தரை ஒரு அவதாரமாகக் கொள்ளும் வழக்கமும் இருக்கிறது. கிருஷ்ணர் ஓர் அரசர். அரச நீதி ஆட்சி செலுத்தும் உலகத்துக்குள்ளேயேதான் கிருஷ்ணரின் வாழ்நாள் முழுவதும் கழிந்திருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக, அரச குடும்பத்தில் அவதரித்த புத்தர், தன் அரியணையைத் துறந்து, ஞானம் தேடிப் போன கதை உலகப் பிரசித்தம்.

அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்திருந்தால் சித்தார்த்தர் நல்லதொரு மன்னனாக நிச்சயமாக இருந்திருப்பார். ஆனால், அவருடைய மனம் இந்தப் புலனுலகின் எல்லைக்குள் ஆழ்ந்து போகாமல்,  மனத்தின் ஆதாரத்தை அறிந்துகொள்வதையும், மனம் உண்டாக்கும் துன்பத்தின் முடிவைக் கண்டுபிடித்து அதை மனித உலகுக்கு அறிவிப்பதையும் தன் நோக்கமெனக் கொண்டவர்.

அதன்படி பல வருடங்கள் அலைந்து திரிந்து, உடலை வருத்திக் கொள்ளும் ஆன்மிகப் பாதையின் தவறைத் தானே உணர்ந்துகொண்டு, அப்படியும் செய்யாமல், போகத்திலும் மூழ்கிப் போகாமல், நடுநிலையான பாதை ஒன்றைக் கண்டுபிடித்து உலகம் உய்யத் தன் போதனைகளைத் தந்தவர். புறவுலக ஞானத்தை விடுத்து, அகத்தில் சுடர்கொண்டெரியும் ஞானப் பிழம்பை நோக்கிப் போகும் புதிய பாதையை மேற்கொள்ளும் புதிய மனிதனின் குறியீடாக புத்தர் தெரிகிறார்.

கடைசியாகக் கல்கி அவதாரம். இப்போது இருமை சார்ந்த மனம் வகுத்த வாழ்க்கை முறையில் சிக்குண்டு அவதிப்படும் பிரக்ஞை, இந்த ஸ்தூலமான நிலையிலிருந்து விடுபட்டு, அகவெளியில் மேலெழுந்து, பரநிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ளும் உன்னதத்தின் அடையாளம்தான் கல்கி அவதாரம்.

 குதிரை என்பது சக்தியின் குறியீடு. சக்தியின் எழுச்சியில், பரவெளியில் பறக்கும் மனித நிலைதான் கல்கி அவதாரத்தின் உட்பொருள். பிரக்ஞை அந்த உன்னத நிலையை அடையும் பாதையில்தான் பயணம் மேற்கொண்டிருக்கிறது.

(அகவெளி விரியும்…)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு:

sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்