இதோ எனக்கு முன்னால் வாழைப்பழச் சீப்பு வைத்திருக்கிறது. “இதைப் பார், இது மஞ்சளாக இருக்கிறது” என்று நான் சொன்னால், இது மஞ்சளாகத்தான் இருக்கிறது என்று காண்கிறீர்கள். அதற்குமேல் மனசு அதைப் பற்றி எந்தப் பிரதி சிந்தனையும் (reaction) எழுவதில்லை. மாறாக, இதே வாழைப்பழத்தைக் காட்டி, “இதோ பார், இது சிவப்பாக இருக்கிறது” என்று நான் சொல்லியிருந்தால், உடனே உங்கள் மனசில் ஓர் ஆட்சேப உணர்ச்சி எழுந்திருக்கும்.
இது மஞ்சள் என்றோ, சிவப்பு என்றோ நான் சொல்லாமல், “இந்த வாழைப்பழம் சிவப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னால் அப்போது உங்கள் மனசில் ஒருவிதமான பிரதி உணர்ச்சி உண்டாகிறது. மஞ்சள் பழத்தையே சிவப்பாக இருப்பதுபோல் உங்கள் மனசில் கற்பனை செய்து பார்க்கிறீர்கள். மனசை ஒருமுகப்படுத்தினால் அப்படிப் பாவிக்கவும் முடிகிறது.
பரமாத்மாவின் குணம்
உபாஸனை என்பது இப்படிப்பட்டதுதான். பரம்பொருள் இப்படி இப்படி இருப்பதாகப் பாவியுங்கள் என்று பலவிதமான குணங்களைக் கொண்ட பல மூர்த்திகளைக் காட்டிக் கொடுக்கிறது உபாஸனா மார்க்கம். வாழைப்பழம் உண்மையில் மஞ்சள் நிறம் என்பதுபோல் பரமாத்மாவின் உண்மையான குணம் என்ன? அது குணம் கடந்தது என்பதே. பரமாத்மா எல்லா குணமும் கடந்த வஸ்து என்று சொல்லிவிட்டால், அப்புறம் ஜனங்களின் மனசு அதில் மேற்கொண்டு நிற்பதற்கு இடமே இல்லை.
இது நமக்குப் புரிபடாத வஸ்து என்று விட்டு விடுவார்கள். வாழைப்பழத்தைச் சிவப்பு என்று சொன்னதை மனசு ஆட்சேபித்ததுபோல் ஒரு சிலையைக் காட்டி இதுதான் பரமாத்மா என்றாலும், அதை எவராலும் ஏற்க முடியாது.
‘இது ஒரு கல் பொம்மை அல்லவா? இது எப்படி உலகத்தை நடத்துகிற பரமாத்ம சக்தி ஆகும்?’ என்று தோன்றும். ஆனால், ஒரு சிலையைக் காட்டி, “இதைப் பரமாத்மா என்று பாவியுங்கள்” என்றால் அப்படிப் பாவிக்க முடிவதாகத் தோன்றும் - வாழைப்பழத்தைச் சிவப்பாகக் கற்பனை செய்வதுபோல். ஆனால், சிவப்பு என்றால் என்னவென்று மனசுக்குத் தெரிவதுபோல் பரமாத்ம லக்ஷணம் தெரியாதே! அதனால் விக்கிரகத்தை ‘ஏதோ பெரிய வஸ்து என்று சிறிது எண்ணிப் பார்க்கலாமே தவிர, அதிலேயே ஆழ ஊன்றி நிற்க முடியாது.
தெரிந்த விஷயங்களில்தான் மனசு பிடிமானத்தோடு நிற்கும். எனவே, ஒரே காருண்யமும் சௌந்தரியமும் வழிகிற மாதிரி ஸ்திரீ ரூபத்தில் விக்கிரகம் செய்து, “இதில் பரமாத்மா தாயாராக வந்திருக்கிறார் என்று பாவனை பண்ணு” என்றால், மனசு அதை நன்றாகக் கிரகித்துக்கொண்டு அப்படியே ஆழ்ந்து ஈடுபட முடிகிறது.
குணமற்ற பரமாத்ம வஸ்துவிலிருந்துதான் அனந்த கல்யாண குணங்களும் வந்திருக்கின்றன. ரூபமற்ற பரமாத்மாவிடமிருந்துதான் சகல உருவங்களும் தோன்றியிருக்கின்றன. அந்தந்தக் குணத்துக்கு அனுகூலமான ரூபம், முத்திரை, ஆயுதம் முதலியவற்றோடு திவ்விய மூர்த்திகளைக் காட்டினால் அவற்றில் மனசு ஈடுபடுகிறது. புரியாத பரமாத்மத் தத்துவத்தை நமக்குப் புரிகிற விதத்தில் உபாஸிக்க முடிகிறது.
மனம் கடந்த நிலை
சகலமும் ஆன பரமாத்மா, நாம் அவரை எந்த ரூபத்தில் உபாஸித்தாலும் அந்த ரூபத்தின் மூலம் அருள்புரிகிறார். படிப்படியாக நம் மனநிலையை உயர்த்துகிறார். கடைசியில் மனசே இல்லாத, மனசைக் கடந்த நிலை உண்டாகிறது. மனசு கடந்த அந்த நிலையிலேயே குணமும் ரூபமும் கடந்த பரமாத்மாவை உள்ளபடி அனுபவிக்க முடிகிறது. ஆரம்பத்தில் நமக்குப் பலவித மனோ விகாரங்கள் இருக்கும்போது, “பரமாத்மா எல்லாம் கடந்தவர்” என்றால் அதில் பிடிப்புக்கொள்ள முடியவில்லை. ரூபத்தில், குணத்தில் அவரை உபாஸித்தால், அது முற்றிய நிலையில், எல்லாவற்றுக்கும் அதீதமான பரமாத்மாவை உள்ளபடியே அனுபவிக்க முடிகிறது.
மஞ்சள் பழத்தை மஞ்சளாகவே பார்க்கிறபோது மனசுக்கு வேலை இல்லாமல் போகிறது. “உபாஸனையின்போது, பரமாத்மாவாகவே இப்படி இப்படி பாவனை செய்தால் அதற்கு இன்னின்ன மந்திரம் ஜபிக்க வேண்டும். இன்னின்ன ஆசாரம் வேண்டும். இன்னின்ன பூஜா பத்ததி வேண்டும்” என்று விதிகள் இருக்கின்றன. பாவனை போய், அவரை உள்ளவாறு அறிகிறபோது எந்த விதியும் இல்லை, செயலும் இல்லை. சரீரம் மனசு- இவற்றின் காரியமாகிற உபாஸனை இப்போதுதான் அனுபவமாகிற ஞானம் என்பதாகப் பழுத்துவிடுகிறது.
இந்த ஞானம் நமக்கு ஆரம்பத்திலேயே வந்துவிட்டதாக பாவனை செய்துவிடக் கூடாது. உபாஸனையே பெரும்பாலான ஜனங்களுக்கு ஞானம் பெற உபாயமாகும், திவ்விய மூர்த்திகள் நாமாகச் செய்கிற கல்பிதமான பாவனை மட்டுமல்ல. பரமாத்மாவே மகான்களுக்கும் ரிஷிகளுக்கும் இந்த ரூபங்கள், மந்திரங்கள், விதிகள் எல்லாவற்றையும் அனுக்கிரகித்திருக்கிறார். பரமாத்மா வாஸ்தவமாகவே இப்படிப்பட்ட மூர்த்திகளாகி, அவற்றை அடைகிற மந்திர, யந்திர, தந்திரங்களாகவும் ஆகியிருக்கிறார். எனவே, உபாஸனை முறையை நம்பிக்கையுடன் சிரத்தையுடன் பின்பற்றினால் நிச்சயம் ஞானத்துக்கு வழி உண்டாகும்.
ஞானம் வருவதும் வராததும் இருக்கட்டும். இப்போது உபாஸிக்கிறபோது அன்போடு அதைச் செய்ய வேண்டும். இந்த அன்பே, பக்தியே நமக்குப் பெரிய நிறைவைத் தரும். அதனால் பகவானின் எல்லையில்லாத அன்பையும் அனுபவிப்போம். அதுவே பெரிய ஆனந்தம். இதற்கப்புறம் அவர் இஷ்டப்பட்டு அத்வைத ஞானம் தரட்டும்; தராமல்தான் இருக்கட்டும். அதைப் பற்றி இப்போது கவலைப்பட வேண்டாம். நாம் செய்யக்கூடியது பக்திதான். இதற்குப் பிரதியாகப் பெறக்கூடிய பகவதனுக்கிரக ஆனந்தமே நமக்குப் போதும்.
(தெய்வத்தின் குரல், முதல் பாகம்)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago