துளி சமுத்திரம் சூபி 21: மறைப்பதில் பயன் உண்டா?

By முகமது ஹுசைன்

 

திப்பீடுகள் வழியாகப் பார்க்காத கண்களே இல்லை எனலாம். சரி தவறு என்றோ நல்லது கெட்டதோ என்றோ பார்க்காமல் அவற்றால் எதையும் கடந்து செல்ல முடியாது. ஆனால், இந்த நல்லவையும் கெட்டவையும் பார்ப்பவரின் பார்வையைச் சார்ந்துள்ளதால், குறையுள்ள பார்வையில் கெட்டவையும் குறையற்ற பார்வையில் நல்லவையும் தெரியும். அப்படியிருப்பின், இந்த நல்லவையும் கெட்டவையும் உண்மையில் எங்கே உள்ளன? அவை வெளியில் உள்ளனவா? நம்முள் உள்ளனவா?

ஆனால், அக மதிப்பீடு செய்யும் திறனைப் பெற்றவர்கள் புற மதிப்பீடுகளில் ஈடுபடுவதில்லை. இத்திறன் சாமானியர்களுக்குப் பெரும்பாலும் கைகூடுவதில்லை. இதனால், அவர்கள் புற மதிப்பீட்டின்மூலம் தன்னை உயர்த்தி, அது அளிக்கும் பெரும் உவகையில் தனது அகங்காரத்தைக் கொழுத்து வளரச்செய்து வாழ்வைத் தொலைத்து வீணாக்கி மறைவார்கள். ஆனால், ஞானிகளின் நிலை வேறு. அவர்கள் தம்முள் மூழ்கி, சுய மதிப்பீட்டின்மூலம் அகங்காரத்தைத் தொலைத்து உலகினில் என்றும் நிலைத்திருப்பர், அத்தகைய ஞானிகளில் ஒருவரே ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அல்துஸ்தரீ.

ஞானிகளுக்கெல்லாம் ஞானி என்றழைக்கப்படுபவர் ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் அல்துஸ்தரீ. பாரசீகத்தில் 815-ம் வருடம் ஸஹ்ல் பிறந்தார். அவருக்கு இணையாக இறை நம்பிக்கையிலோ பக்தியிலோ அறிவிலோ ஞானத்திலோ எவரும் இருந்ததில்லை என்று இன்றும் சொல்லப்படுகிறது. மூன்று வயதிலேயே இறை வழிபாட்டில் ஈடுபட்டவரிடம் அவருடைய மாமா கேட்டார்.

எங்கும் நிறைந்திருக்கும்

கடவுளின் ராஜ்ஜியத்துக்கு

எல்லைகள் எவையும் உண்டா?

அவர் விழிகளின் நிழல்

உன்மேல் விழாமல் இருக்க

நீ என்ன விதிவிலக்கா?

உன் அனைத்தையுமறிந்த

அவரிடம் எதையேனும்

மறைப்பதில் பயனுண்டா?

- என்று கேட்டுள்ளார். ஸஹ்லின் வாழ்வின் நோக்கத்தை அதன் பயணத்தை அதன் பாதையை அந்தக் கேள்விதான் கச்சிதமாக வடிவமைத்தது என்றே சொல்லலாம். அந்தக் கேள்வியின் விளைவாக அவர் எப்போதும் தனக்குத்தானே “எங்குமிருக்கும் கடவுள் என்னோடும் உள்ளார், அவர் என்னைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்” என்று சொல்லிக்கொள்ள ஆரம்பித்தார். அந்தச் சொற்கள் சுவாசத்தைப் போன்று அவர் வாழ்வின் அங்கமாகவே மாறியது. இதனால், அவர் இவ்வுலகை விட்டு மறையும்வரை அவரிடம் ரகசியம் என்ற ஒன்றே இல்லாமல் போனது.

அவருடைய விருப்பங்களும் ஆசைகளும் ஏக்கங்களும் செயல்களும் ஒரு குழந்தைக்கு உரியதாக இல்லை. அவர் வயதையொத்தக் குழந்தைகளைப் போன்று விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் எந்த ஈடுபாடுமின்றி தனிமையில் அமர்ந்து இறை வழிபாட்டில் மூழ்குவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார். இரவுபகல் பேதமின்றி தொடர்ந்த ஸஹ்லின் இந்தத் தனிமை வழிபாடு, அவர் பெற்றோருக்கு மட்டுமன்றி, அவருடைய மாமாவுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், குரானைக் கற்றுக்கொள்வதற்காகப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர் ஏழு வயதுக்குள்ளாகவே அதைக் கற்றுத் தேர்ந்து மீண்டும் தன் வழிபாட்டுக்குத் திரும்பினார்.

அவருடைய பன்னிரண்டு வயதில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு விடை தேடி அன்றைய காலத்தில் ஆன்மிகப் பூமியாக விளங்கிய பாஸ்ராவுக்குப் பயணப்பட்டார். அங்கும் அவருக்கு விடை கிடைக்காததால் அப்பாதான் என்னும் இடத்துக்குச் சென்று ஹபீப் இன்னு ஹம்ஸாவைச் சந்தித்தார். அவருடைய விளக்கத்தால் தெளிவடைந்த ஸஹ்ல், அவரிடம் சிறிது காலம் மார்க்க ஞானத்தைக் கற்று தெளிவடைந்து மீண்டும் துஸ்தர் திரும்பினார்.

அங்கு ஸஹ்லின் பகல்கள் நோன்பிலும் இரவுகள் இறை வழிபாட்டிலும் கழிந்தன. எப்போது தூங்குவார்?, எப்போது உண்ணுவார்? எதை உண்ணுவார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர் கடைப்பிடித்த நோன்பு, ஒரு நாளில் முடியும் நோன்பு அல்ல. அது நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் முடியும். நோன்பு திறந்தபின் ஒரே ஒரு பாதாம் பருப்பையோ உலர்ந்த ரொட்டியையோ மட்டுமே சாப்பிடுவார். அதன் பின் மீண்டும் நோன்பைத் தொடர்வார். இவ்வாறாகத் தொடர்ந்து இருபது ஆண்டுகள் நோன்பு இருந்தார்.

“பசி உடலுக்குப் பலவீனமளிக்கும் உணவு உடலுக்குப் பலத்தைத் தரும். ஆனால், பட்டினியும் ஒட்டிய வயிறும்தான் என் பசியைத் தணித்தது. உணவும் நிரம்பிய வயிறு எனக்குப் பசியைஅளித்து என் உடலைப் பலவீனப்படுத்தின. இந்த ஒட்டிய வயிற்றால் என் புறப்பார்வை மறைந்து அகப்பார்வை விரிந்தது. இதனால், என் பரந்த ஞானம் முழுவதும் பக்தியில் மூழ்கி என் அகங்காரம் தொலைந்து இல்லாமல்போனது” எனப் பின்னாட்களில் அவரது கடின நோன்புகள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு விளக்கமளித்துள்ளார்.

ஸஹ்லின் வாழ்க்கை இறைமையில் தோய்ந்து பெரும் உவகையுடன் கடந்து சென்றுகொண்டிருந்தது. அவ்வப்போது ஆன்மிகத்தில் மூழ்கித் தன்னிலையிழப்பார். அந்த நிலையில் அவர் உதிர்க்கும் வார்த்தைகளும் செயல்களும் சாமானியர்களின் செவிகளுக்கும் விழிகளுக்கும் புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கும். அந்தப் பரவச நிலையில் “கடவுளின் படைப்புத் திறனுக்கு மட்டுமல்ல, என் காலத்தில் வாழும் துறவிகளுக்கும் நானே சான்று” என்று சொன்னது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராகப் பெருங்கூட்டம் அவரின் வீட்டுக்கு முன் கூடியது. அதற்கு விளக்கமளிக்கும் நிலையில் அவர் இல்லை. ஏனென்றால், தன் பக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுவது அவருக்கு வேதனையை அளித்தது. தன்னிடமிருந்த உடைமைகள் அனைத்தின் பெயர்களையும் தனித்தனித் தாள்களில் எழுதி அவற்றை அந்தக் கூட்டத்தின்மீது வீசியெறிந்தார். பின் அந்தத் தாள்களை எடுத்தவர்களுக்கு அதில் எழுதியிருந்த உடைமைகளைக் கொடுத்தவர், அந்த ஊரிலிருந்து ஏதுவுமின்றி வெளியேறி பாஸ்ராவில் தஞ்சமடைந்தார்.

உணவே அவருக்குத் தேவையில்லை எனும்போது உடைமையும் பணமுமா அவருக்குத் தேவையாக இருக்கப்போகின்றன? சொல்லப்போனால், இவ்வுலகில் தேவை என்ற ஒன்றே இல்லாமல்தான் அவருக்கு இருந்தது. பள்ளிகளில் அவர் வழங்கும் குரான் விளக்க உரைகளைக் கேட்பதற்குக் கூட்டம் அலைமோதும். அந்தக் கூட்டத்தில் மன்னரும் அடக்கம். “காலை விழித்தவுடன் என்ன உண்ணலாம் என்று நினைப்பவர்கள் மட்டும் தயவுகூர்ந்து விலகிக்கொள்ளுங்கள்” என்று சொல்லியதைத் தவிர வேறு எந்தப் பாகுபாடும் அவர் காட்டியதில்லை. நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் சீடர்களாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

“ஒருவர் தமது பார்வையைக் கடவுளை விட்டு ஒரு நொடி விலக்கினால்கூட, அவரை வாழ்நாள் முழுவதும் சரியான பாதையில் எவராலும் வழிநடத்த முடியாது” என்பதுதான் அவர் சீடர்களுக்குச் சொல்லும் முக்கிய அறிவுரை. அந்த அறிவுரைக்குச் சான்றாக, கடவுளை விட்டுத் தன் பார்வையை ஒருநொடிகூட விலக்காமல் வாழ்ந்தும் காட்டியவர், 896-ம் வருடம் மறைந்து நிலைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்