‘ஊ
ழ்’ என்பது நாம் அறியமுடியாமல், நம்மைமீறித் தன்போக்கில் நிகழ்ந்து, அதற்குள் நம்மையும் அமிழ்த்திவிடுகிற நிகழ்வுகளின் திரட்சி. ஊழை விளங்கிக்கொள்ள இதைக் கருதலாம்: ‘தமிழ்நாட்டு ஆற்றில், அதுவும் சென்னையில் ஓடுகிற ஒரு சிற்றாற்றில் தண்ணீரா வரப்போகிறது?’ என்று ஆற்றங்கரையோரம் குடிசை கட்டி வாழ்ந்திருந்தார்கள் எளியவர்கள். மழை பொய்த்த மாநிலத்தில் இதுவரை அறிந்திராத பெருமழைக் காலம் ஒன்று வந்தது. நகருக்கு நீர் வழங்கும் பேரேரிகள் சட்டுச்சட்டென்று நிரம்பித் ததும்பின. அகாலத்தில் தண்ணீரைத் திறந்தார்கள். சிற்றாறு சட்டென்று காட்டாறாயிற்று. கரைபுரண்ட வெள்ளம், கரையோரத்தில் குடியிருந்தவர்களின் வாழ்வாதாரத்தை ஓர் இரவில் அடித்துப் புரட்டியது. ஆட்கள் போயினர்; ஆடுமாடுகள் போயின; சான்றிதழ்த் தாள்கள் போயின; சம்பளம் போயிற்று; சாக்கடை ஓரத்திலும் பூத்துக்கிடந்த வாழ்க்கை ஒரே இரவில் தானும் சாக்கடை ஆயிற்று.
நிகழ்ந்தவற்றுக்கு யார் பொறுப்பு? எந்தத் தனியாளின் தனி வினை இது? யாரைச் சொல்லமுடியும்? கருதியிராத பெருமழை—எதிர்பாராத நீர்ப்பெருக்கு—ஏதேதோ காரணங்களால் அகற்ற முடியாத ஆக்கிரமிப்புகள்—அடைபட்ட நீர்வழிகள்—அதிகாரமில்லாப் பொறியாளர்—உயர்மட்டத்திலோ அவசரத்தை உணரத் தெரியாத அசட்டை—உணர்ந்தபோதோ தானே முடிவெடுக்க முடியா பலவீனம்—முடிவெடுக்கும் அதிகார மையத்தைத் தொடர்புகொள்ளவோ அச்சம்—காலம் தாழ்ந்துவந்த ஆணை—அளவிறந்த தண்ணீர்—அழிவோ அழிவு—எல்லாம் விதி—என்பதுதான் ஊழ்.
அழிவுக்கு மட்டுந்தான் ஊழ் காரணமாக இருக்கும் என்று கருதவேண்டாம். ஆக்கத்துக்கும் காரணமாக இருக்கும். ஓர் இடத்தைப் பெறுவதற்காகத் தகுதியுடையவர்கள் பல பேர் தவஞ்செய்து கிடக்கும்போது, யானை மாலையிட்டதுபோல, இடையில் வந்த யாரோ ஒருவர்க்கு அந்த இடம் கிடைப்பதும் ஊழ்தான். போவதற்குக் காரணமாக இருக்கிற ஊழ் போகூழ்; ஆவதற்குக் காரணமாக இருக்கிற ஊழ் ஆகூழ்.
திரள்வினைக்கு யார் பொறுப்பு?
ஒரு நிகழ்வுக்கு, ஏதேனும் ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் பொறுப்பாக்க முடியும் என்றால், அது அந்த ஒன்றின் அல்லது ஒருவரின் தனி வினை. எதைப் பொறுப்பாக்குவது, யாரைப் பொறுப்பாக்குவது என்றே தெரியாத வகையில் உலகத்து இயற்கை, பல பேரின் கூட்டுவினைகள், காலம், இடம், தற்செயல்போன்ற ஏராளமான காரணிகள் ஒன்றுதிரண்டு நிகழ்ந்தால், அது ஊழ். தனி வினைக்குத் தனி ஆள் பொறுப்பு; திரள்வினைக்கு யார் பொறுப்பு? தனியாட்கள் யாரும் பொறுப்பில்லை. ‘எல்லாம் கோளாறு; நேரம் சரி இல்லை; விதிப் பயன்’ என்று ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
ஆனால் அப்படி ஆற்றிக்கொள்ள முடியவில்லை. ஞானிகள் வேண்டுமானால் தன் நெஞ்சோடு தானே பேசிக்கொள்ளலாம்:
...பேயோ? எங்கும் திரிந்துஓடிப் பேணா என்பைப் பேணுகின்ற
நாயோ, மனமே நீ?
(திருவருட்பா, V:19:4)
‘ஏ நெஞ்சமே! நீ என்ன நிலைகெட்டு அலையும் பேயா? இல்லை, எங்கெங்கோ தேடித் திரிந்து, கடைசியில் சாரமும் சதையுமில்லாத வெறும் எலும்பைக் கௌவிக்கொண்டு வரும் நாயா? சீச்சீ! சற்றுச் சும்மா இருக்கமாட்டாயா நீ?’ என்று வள்ளலாரைப்போல நெஞ்சைக் கடிந்துகொள்ளலாம்.
...பொம்ம
லாட்டம் என்றே இரு உடலை! அடர்ந்த சந்தைக்
கூட்டம் என்றே இரு சுற்றத்தை! வாழ்வைக் குடம்கவிழ்நீர்
ஓட்டம் என்றே இரு! நெஞ்சே! உனக்கு உபதேசம் இதே!
(பட்டினத்தார், பொது, 21)
‘பொம்மலாட்டத்தில் கயிற்றை இழுக்கிறவன் இழுப்பதை நிறுத்தும்வரை பொம்மை ஆடும்; அதைப் போலத்தான் உடல். சந்தை நடக்கும்வரை கூடி நிற்கும் கூட்டம், சந்தை முடியும்போது கலைந்துவிடும்; அதைப்போலத்தான் சுற்றம். கவிழ்ந்த குடத்திலிருந்து வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நீர், இருப்புத் தீர்ந்து குடம் காலியாகும்வரைக்கும் ஓடும்; அதைப்போலத்தான் வாழ்வு. ஆட்டம் போட்டு அலைக்கழியும் நெஞ்சே! உனக்கு இதுதான் உபதேசம்! பொறுமிக்கொண்டே இருக்காமல் அமைதியாக இரு!’ என்று பட்டினத்தாரைப் போல நெஞ்சுக்கு உபதேசம் வழங்கலாம்.
ஊழுக்குப் பெயர் தெய்வம்
இவ்வாறு தன் நெஞ்சோடு தானே பேசித் தன்னைத் தானே அடக்கிக்கொள்ளுதல் அறிவர்களுக்குச் சாத்தியமாகலாம். நம்மைப் போன்ற எளியவர்களுக்கு அது சாத்தியமா? தன்னிடமே தான் புலம்புவதைவிட முன்னிலைப்பட்ட ஒன்றிடம் புலம்புவது எளிதில்லையா? சுமை உள்ளுக்குள்ளேயே இருந்து நெஞ்சடைக்காமல் வெளியில் இறங்குவது நிலைமையை எளிதாக்கும் இல்லையா? அதற்கு என்ன செய்யலாம்? ஊழ் என்கிற திரட்சியை வடிவநிலைப்படுத்தி, அதைத் தெய்வமாக்கி விட்டால்? ஊழுக்குத் தொல்காப்பியர் கொடுத்த பெயர்களில் தெய்வம் என்பதும் ஒன்று.
காலம், உலகம், உயிரே, உடம்பே,
பால்வரை தெய்வம், வினையே, பூதம்...
(தொல்காப்பியம்,
சொல்லதிகாரம், கிளவியாக்கம், 57)
இந்த நூற்பாவில் வரும் ‘பால்வரை தெய்வம்’ என்பது ஊழ். ஊழின் இடத்தில் சமய வழிப்பட்டவர்கள் அவரவர் தெய்வங்களை வைத்துக்கொண்டார்கள். நடக்கின்ற எல்லா வற்றுக்கும் தெய்வமே காரணம் என்று கருதத் தலைப்பட்டார்கள்.
...ஐயா! நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டில்,
உய்வார்கள் உய்யும் வகைஎல்லாம் உய்ந்தொழிந்தோம்;
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!
(திருவாசகம், திருவெம்பாவை. 11)
‘தெய்வமே! எங்களை உருட்டிப் புரட்டி நீ விளையாடுகிற விளையாட்டில் படவேண்டிய எல்லாப் பாடுகளையும் பட்டுவிட்டோம். இனிமேலும் படுத்தாமல் எங்களைக் காப்பாற்று’ என்று வேண்டி வழிபட்டார்கள்.
ஊழ் என்பது தானாகவே தன்போக்கில் நிகழக்கூடிய ஒரு அமைப்பு. இந்த அமைப்பின் பிடரியில் தலைவர்களை உட்கார வைத்தார்கள் மக்கள். பிறகு தலைவர்களே அதை நடத்துவதாகக் கருதிக்கொண்டு தலைவர்களை வழிபடத் தொடங்கினார்கள். கோளாறுகள் வந்தபோது, ‘அமைப்பு சரியில்லை; தலைமையை மாற்றினால் அமைப்பு சரியாகும்’ என்று தலைமைக்குத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு சிலர் வந்தார்கள். சிக்கலே system-த்தை முன்னிலைப்படுத்தாமல் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதுதான் என்று அவர்கள் அறிவார்களா? System கெட்டுப்போவதைப் பற்றித் திருமூலரும் பேசுகிறார்:
கூடு கெடின்மற்றுஓர் கூடுசெய் வான்உளன்;
நாடு கெடினும் நமர்கெடு வார்இல்லை;
வீடு கெடின்மற்றுஓர் வீடுபுக்கால் ஒக்கும்;
பாடுஅது நந்தி பரிசுஅறி வார்க்கே.
(திருமந்திரம் 2852)
உடம்பாகிய கூடு கெட்டுப்போனாலும் ஒன்றும் பிழையில்லை; வேறு ஓர் உடம்பு கிடைக்கும். பெரிய இனத்தவர் சிறிய இனத்தவரை வாழவிடாமல் அடித்து நாட்டைக் கெடுத்தாலும், நம்முடைய ஆட்கள் வாழ்வதற்கு வேறொரு நாடு கிடைக்கும். குடியிருக்கிற வீடு கெட்டுப்போனாலும் ஒன்றும் குடி முழுகிவிடாது; வேறொரு வீடு கிடைக்கும். யோசித்துப் பார்த்தால், சிவனைச் சரண் புகுந்தவர்களுக்கு எதுவும் பெரிய பாடில்லை; இருக்கிற அமைப்பு கெட்டுப்போனாலும் அவன் வேறு ஓர் அமைப்பை மாற்றி வழங்குவான் என்கிறார் திருமூலர்.
‘ஆறு உருவாக்கிய மண்ணுக்கு ஆறுதான் பொறுப்பு’ என்றும் ‘நான் செய்த செயலுக்கு நான்தான் பொறுப்பு’ என்றும் வீறார்ந்து பேசிய திருமூலர், ஊழ் என்கிற அதிகாரத்தின் கடைசிப் பாட்டில் கடவுளைச் சரண்புகுந்ததன் காரணம் என்ன என்று கேட்போருக்கு: தன் வினைக்குத் தான் பொறுப்பு; திரள்வினைக்குத் தெய்வம் பொறுப்பு.
(விடைகள் தொடரும்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago