‘கோளாறு’ என்று ஒரு தமிழ்ச்சொல். ‘என்னப்பா கோளாறாப் பேசுற?’ ‘பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு; காரியந்தான் ரொம்பக் கோளாறா இருக்கு!’ ‘கோளாறு புடிச்ச ஆளா இருப்பான் போலருக்கு!’ என்று கோளாற்றுக்குப் பயன்பாட்டுச் சான்றுகள் காட்டலாம். செரிமானக் கோளாறு, தொழில்நுட்பக் கோளாறு போன்ற பயன்பாடுகளும் உண்டு.
தீர்வில்லாமல் இழுத்துக்கொண்டே போகிற சிக்கலைத் தீர்ப்பதற்கு நுட்பமான யோசனை சொல்கிறவரை மதுரை வட்டாரத்தில் ‘கோளாறு சொல்கிறவர்’ என்பார்கள். ‘ஏப்பா, இதுக்கு நான் ஒரு கோளாறு சொல்றேன்; கேக்குறியா?’
கோளாறு ‘சீர்குலைவு’ என்றும், கோளாறு சொல்லுதல் ‘சீர்குலைவைச் சமன் செய்வதற்கான யோசனை’ என்றும் விளங்கிக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் கோளாறு என்கிற சொல் இன்னாளில் அடைந்திருக்கிற பொருள் வழக்குகள். முன்னாளில் கோளாறும் கோளாறு சொல்லுதலும் வேறு பொருள் வழக்குடையவை.
கோளாறு என்பது கோள்+ஆறு. கோள் என்பது ஒன்பது கோள்கள்; ஆறு என்பது வழி. கோள்களின் இயக்கமே கோளாறு. கோளாற்றை வடமொழியில் சொல்ல விரும்பினால் அது ‘கிரகச்சாரம்’. தமிழையும் வடமொழியையும் கலந்து மணிப்பிரவாளம் ஆக்கிக் ‘கோட்சாரம்’ செய்து அதைக் ‘கோச்சாரம்’ என்று வழங்குவர் சோசியர்.
இதைப் பற்றி இங்கென்ன விளக்கம் என்பார் நிற்க: உங்களுக்கு நிகழ்கின்றவற்றுக்கு, உங்களால் நிகழ்கின்றவற்றுக்கு யார் பொறுப்பு? நீங்கள் மட்டுந்தானா? நீங்களுமா? நீங்கள் இல்லவே இல்லையா என்னும் விசாரணையின் ஒரு பகுதி இது.
ஆசீவகம் என்னும் தமிழ்ச் சமயம்
நிகழ்கின்றவை எல்லாவற்றுக்கும் பொறுப்பு கோள்களின் ஆட்டம் என்கிறது ஆசீவகம் என்கிற, பரவி அறியப்படாத தமிழ்ச் சமயம். அதற்குச் சான்றாகப் பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் சங்க காலத் தமிழர் சமயம் என்னும் நூலில் கீழ்க்கண்ட குறள்கள் காட்டப்படுகின்றன:
நவக்கோள் கூடி நடத்தும் மாண்பு
உவப்பின் நிகழ்ச்சி அது.
ஆய கோள்கள் ஆட்டம் அதுவே
காய நிகழ்ச்சி எனல்.
நன்றும் தீதும் நவக்கோள் ஆட்டம்
என்று உணர்வது அது.
தோற்ற ஒடுக்கம் யாவும் கோள்கள்
ஆற்ற செயல்என்று உணர்.
- மனித வாழ்வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒன்பது கோள்கள் கூடி நடத்தும் நிகழ்ச்சிகளின் விளைவே ஆகும். உலக இயக்கம் என்பதே கோள்களின் இயக்கந்தான். மனித வாழ்வில் ஏற்படும் நன்மையும் தீமையும் எல்லாம் ஒன்பது கோள்களின் ஆட்டத்தால் வருவனவே ஆகும். உலகம் உள்ளிட்ட அனைத்தும் தோன்றுவதற்கும் ஒடுங்குவதற்கும் காரணம் கோள்களின் செயல்பாடே ஆகும்.
ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண
உரைசால் மதுரையோடு
அரைசு கேடுஉறும் எனும்
உரையும் உண்டே நிரைதொடி யோயே
(சிலம்பு. 23: 133-137)
-ஆடி மாதம், தேய்பிறை எட்டாம் நாள், கார்த்திகை மீன் சேர்ந்த வெள்ளிக் கிழமை மதுரையின் அரசு கெடும், மதுரை தீப்பற்றி எரியும் என்பதாக வானியல் குறிப்பு ஒன்று உண்டு என்று மதுராபதித் தெய்வம் மதுரையைக் கொளுத்திய கண்ணகிக்குச் சொல்கிறது. கோள்களின் இயக்கத்தைக் கணித்து நடக்கப்போவதை உரைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு இது சான்றாகக் காட்டப்படுகிறது. அதனால்தான்,
தாளாளன் என்பான்
கடன்படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து
இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்;
இம்மூவர் கேள்ஆக வாழ்தல் இனிது
(திரிகடுகம், 12)
-தாளாளன் என்பவன் முயற்சி உள்ளவன்; தானே தனக்கும் பிறர்க்கும் வேண்டியதைச் செய்துகொள்வானே ஒழிய, பிறர் தனக்குச் செய்து, தான் அவர்க்குக் கடன்பட்டு வாழ ஒப்பமாட்டான். வேளாளன் என்பவன் பிறர்க்கென வாழும் உதவியாளன்; விருந்தாக வந்தவர் இருக்கத் தான்மட்டும் தனித்து உண்ண மாட்டான். கோளாளன் என்பவன் கோள்களின் இயக்கவிதிகளைக் கற்று அறிந்தவன்; என்ன கேடு வந்தாலும் அவற்றை மறவாதவன். ஆகவே இவர்கள் மூன்று பேருடனும் நட்போடு வாழ்வது நல்லது என்று அறிவுரைக்கிறது திரிகடுகம்.
இது காரணம் என்றால், இதுவே காரியம்
கோள்களின் இயக்கவிதிகளை அறிந்த கோளாளன் என்பவன் முதிராத இயற்பியலாளன் (physicist). ‘இது காரணம் என்றால் இதுவே காரியம்’ என்று தர்க்கபூர்வமாய்ச் சொல்ல முயன்றவன். இயற்கையின் இயங்குவிதிகளுக்கு அப்பாற்பட்டு ஏதும் நடந்துவிட முடியாது என்று அறுதியிட்டவன். பரிகாரம் செய்தோ, காணிக்கை தந்தோ, நடக்கவேண்டிய எதையும் யாரும் தடம் புரட்டிவிட முடியாது என்று இறுகி நின்றவன்.
பரிகாரங்களும் காணிக்கைகளும், பிழை செய்தவன் தன்னைத் திருத்திக்கொள்ளவும், வருவதை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் பெறவும், ‘நான்’ என்னும் ஆணவம் குறைக்கவுமான, மனம் திரும்பும் நடவடிக்கைகளாக வேண்டுமானால் இருக்கலாமே ஒழிய, அதற்குக் கூடுதலாய் எதையும் பெற்றுத்தர முடியாது.
எழுதிச் செல்லும் விதியின்கை
எழுதி எழுதி மேற்செல்லும்.
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கிஒரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீர் ஆறுஎல்லாம்
அதில்ஓர் எழுத்தை அழித்திடுமோ?
-என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் உமர் கய்யாமின் பாடல் ஒன்று. அழுதாலும் தொழுதாலும், சூழ்ச்சியே செய்தாலும், இயங்குவிதி தன்போக்கில் இயங்கும். மாற்றவோ தடுக்கவோ முடியாது.
கோளாறு சொன்னவர்கள் கெடுபிடியாகச் சொல்கிறார்கள்; கருணை மனுப் போட்டாலும் கதைக்கு ஆகாது என அருளே இல்லாமல் பேசுகிறார்கள் என்று கருதியவர்கள், கோளாறு சொன்னவர்களைக் கண்டு கசந்தார்கள்; இழித்துரைத்தார்கள். கோளாறான ஆள், கோள் சொல்லி என்கிற சொற்கள் இழிந்தது இப்படித்தான்.
இந்தக் கோள் சொல்லிகள், கோளாறுக்கு ‘விதி’ என்றும் ‘ஊழ்’ என்றும் பெயர் வைத்தார்கள். ஒரு நூல்கண்டை உருட்டிவிட்டால் நூலின் நீளம் இடங்கொடுக்கும்வரை அது நீள்வதைப்போல, இயற்கைவிதிகள் இடங்கொடுக்கும் அளவிற்குள் மனிதர்கள் செயல்படலாம்.
கல்பொருது இரங்கும்
மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல்
ஆருயிர் முறைவழிப் படூஉம்...
(புறம். 192)
என்கிறார் கணியன் பூங்குன்றனார். பெருங்கற்களைக்கூட அடித்துப் புரட்டிக்கொண்டு போகிறது வெள்ளம்; அதில் அகப்பட்டுக்கொண்ட ஓர் எளிய தெப்பம், நீர் போகும் வழியில் தானும் போவதே அல்லாமல் வேறென்ன செய்யும்? உயிருக்கும் அதுதான். காகித ஓடம் கடலலைமீது போவதுபோலே, விதி போகும் வழியில் போகவேண்டியதுதான்.
விதி நம்மைக்கொண்டு செய்விப்பதைத்தான் நாம் செய்கிறோம் என்றால், நமக்கு எந்தச் செயலுரிமையும் கிடையாதா? கட்டற்று நம் போக்குக்கு ஏதும் செய்ய முடியாதா? ஊழ் நம்மைப் பிணிக்கும் என்றால், ஊழின் கைப்பிள்ளைகளா நாம் என்று மலைக்கும்போது, ‘ஊழின் கைப்பிள்ளைகள் அல்லர், நாம் கடவுளின் கைப்பிள்ளைகள்; கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று எழுகிறார் திருமூலர்:
வான்நின்று இடிக்கில்என்?
மாகடல் பொங்கில்என்?
கான்நின்ற செந்தீக் கலந்து
உடல் வேகில்என்?
தான்ஒன்றி மாருதம்
சண்டம் அடிக்கில்என்?
நான்ஒன்றி நாதனை
நாடுவன் நானே.
திருமந்திரம் 2850)
வானம் இடிந்து மண்டையில் விழுந்தாலும் என்ன? பெருங்கடல் பொங்கி என்னையே விழுங்கினாலும் என்ன? காட்டுச் செந்தீ என் தேக்குமரத் தேகத்தைத் தீயச் செய்தாலும் என்ன? மெல்லிதாகத் தவழ்ந்த தென்றல் சூறையாகிப் புரட்டி அடித்தாலுந்தான் என்ன? ஒன்றும் சிக்கலில்லை. என் அப்பன் எனக்குப் பாதுகாப்பு.
நூல் பிடித்தாற்போல நேராக வந்துகொண்டிருந்த வண்டியை இடக்குமுடக்கான கொண்டை ஊசி வளைவு ஒன்றில் ஒடித்துத் திருப்புகிறார் திருமூலர். எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்றவர் இப்போது கடவுளைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கிறாரே? முரண்படுகிறாரோ திருமூலர்?
(விசாரணை தொடரும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago