மதங்களுக்கு இடையிலான முதன்மைச் சண்டையில் சைவமும் வைதிகமும் முட்டிக்கொண்ட இடங்கள் பல. முட்டிக்கொண்டே இருக்கும் கட்சிகள் பொது எதிரியைக் கண்டதும் முட்டுவதை விட்டுக் கூட்டணி வைத்துக்கொள்வதைப் போலத்தான் சைவம், வைதிகத்தின் கதையும். முட்டிக்கொண்டே இருந்தவை சமணத்தையும் பௌத்தத்தையும் பொது எதிரிகளாகக் கண்டதும் கூட்டணி வைத்துக்கொண்டுவிட்டன.
சைவத்துக்கும் வைதிகத்துக்கும் என்ன சண்டை? சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் வழிபாட்டு மதம்; வேதமத மாகிய வைதிகமோ வேள்விச் சடங்குகளுக்கு முதன்மை தரும் சடங்கு மதம்.
எனில் வேதமதம் தெய்வமறுப்பு மதமா? அன்று; பல்வேறு தெய்வங்களை உடன்படும் மதம். அது உடன்படும் தெய்வங்களில் சில: தேவர்களின் தலைமைத் தெய்வமாகிய இந்திரன், உலகை ஆளும் நீர்த் தெய்வமான வருணன், வருணனோடு சேர்ந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் தெய்வமான மித்திரன், வேள்வியின் மையமாக இருக்கும் நெருப்புத் தெய்வமான அக்கினி, காற்றுத் தெய்வமான வாயு, புயல் தெய்வமான மருத்து, புற ஒளித் தெய்வமான சூரியன், அக ஒளிக்கும் தெய்வமான சவித்ரு, நீதியின் தெய்வமான எமன், மேய்ப்புத் தெய்வமான புசன், அடிதடி செய்து அழிக்கத் துடிக்கிற சண்டைக்காரத் தெய்வமான உருத்திரன், காக்கும் தெய்வமான விஷ்ணு, போதையேற்றி மகிழ்ச்சியூட்டும் தெய்வமான சோமன், மருத்துவத் தெய்வங்களான அசுவினி தேவர்கள், தேவர்களின் குருவாக இருந்து கருத்தூட்டும் பிருகஸ்பதி, விடிகாலைத் தேவதையான உஷஸ், இரவுத் தேவதையான ராத்திரி, காதல் தேவதையான ரதி, நதித் தேவதையான சரசுவதி...
சைவம் கருதுகிற முழுமுதற் கடவுள் என்பதென்ன? ஒருவரே கடவுள்; சிவன்; அவரே முதலும் முழுமையும்; பிற எல்லாம் அவரின் ஆளுகைக்கு உட்பட்டவை; உலகம் அவருடைய ஆணையால் செல்லும்; அவரே ஆக்குவன ஆக்குவார்; காப்பன காப்பார்; அழிப்பன அழிப்பார்; மறைப்பன மறைப்பார்; அருள்வன அருள்வார்.
சடங்குதான் முதன்மை
என்றால் வைதிகத் தெய்வங்களின் நிலை? சைவத்துக்கு அவை பொருட்டில்லை. தனிச் சின்னத்தில் போட்டியிட வழியில்லாமல் பெருங்கட்சியின் பழஞ்சின்னத்தில் போட்டியிட்டுத் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் இருக்கிற சிறுகட்சி வேட்பாளர் களைப்போலத்தான் அவற்றின் நிலை; சிவச்சின்னத்தை ஏற்றுத் தனிமுதற் கடவுளின் ஆணையில் செயல்பட வேண்டியதுதான்.
இருக்கட்டும். வைதிகத்தில் வேள்விச் சடங்குதான் முதன்மை; கடவுள் இல்லை. தெய்வம் மாறலாம்; ஆனால், சடங்கு மாறாது. எந்தத் தெய் வத்தை வேண்டுமானாலும் வழிபட்டுக் கொள்ளுங்கள்; வழிபாட்டுச் சடங்காக வேள்விமுறையே இருக்கும் என்பது வைதிகம். உருத்திரனை வேண்டுகிறாயா, வேண்டு. விஷ்ணுவை அழைக்கிறாயா, அழை. இந்திரனைக் குளிர்விக்கிறாயா, குளிர்வி. சாமியில் என்ன இருக்கிறது? சடங்கில்தான் எல்லாம் இருக்கிறது.
சைவத்தின் நிலையோ இதற்கு நேர்மாறு: சடங்குகள் மாறலாம்; ஆனால், தனிமுதற் கடவுள் மாறமாட்டார். எந்தச் சடங்கைக்கொண்டும் வழிபட்டுக் கொள்ளுங்கள்; வழிபாட்டுக் கடவுளாகச் சிவனே இருப்பார். தீ மூட்டி வழிபடுகிறாயா, உன் விருப்பம். நீர் ஊற்றி வழிபடுகிறாயா, நல்லது. சாக்கிய நாயனாரைப்போலக் கல்லால் அடித்து வழிபடுகிறாயா, குற்றமில்லை. கண்ணப்ப நாயனாரைப்போலச் செருப்புக் காலைத் தூக்கித் தலைமேல் வைத்து வழிபடுகிறாயா, அருமை. சடங்கில் என்ன இருக்கிறது? சாரத்தில்தான் எல்லாம் இருக்கிறது.
எதுவும் சரியாகாது
சைவத்துக்கும் வைதிகத்துக்குமான சண்டையின் காரணம் இதுதான்: சடைக் கடவுளுக்கு முதன்மையா, சடங்குக்கு முதன்மையா என்பது. சைவம் தொடர்ந்து சடங்கு முதன்மையை எதிர்த்தே வந்திருக்கிறது—பௌத்த, சமணங்களுக்கு எதிராக வைதிகத்தோடு தொகுதி உடன்பாடு செய்துகொண்ட பிறகும்கூட.
காலை சென்று கலந்துநீர் மூழ்கில்என்?
வேலை தோறும் விதிவழி நிற்கில்என்?
ஆலை வேள்வி அடைந்துஅது வேட்கில்என்?
ஏல ஈசன்என் பார்க்குஅன்றி இல்லையே!
(தேவாரம், 5:99:5)
-என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். காலையில் எழுந்ததும் நீராடி விட்டால் சரியாகிவிடுமா? செய்ய வேண்டிய கருமங்கள் எல்லாவற்றையும் விதிப்படிச் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஒரு வேள்விச் சாலைக்கு உரிமை பெற்று வேள்விகள் செய்துவிட்டால் சரியாகிவிடுமா? ஈசனே இறைவன் என்று அறிந்து ஒழுகாமல் எதுவும் சரியாகாது.
வேதவேள்வியைத் திருநாவுக்கரசர் புறக்கணித்துப் பாட, திருஞான சம்பந்தர் தழுவிப் பாடுகிறார்:
வேத வேள்வியை நிந்தனை செய்துஉழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்றுஅழிக் கத்திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்
ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
(தேவாரம், 3:108:1)
தன்னில் பாதியை மாதுக்குக் கொடுத்த ஆதியே! முழுமுதற் கடவுளே! தென்மதுரைச் சிவனே! வேதவேள்வியைச் சமணர்களும் பௌத்தர்களும் திட்டிக்கொண்டு திரிகிறார்கள்; வாதத்தால் வென்று அவர்கள் கருத்தழித்துவிடலாம் என்று கருதுகிறேன்; அது உனக்குத் திருவுளந்தானா? உலகில் உன் புகழே மிக வேண்டும் என்பதால் கேட்கிறேன் என்று சம்மதம் கேட்கிறார் சம்பந்தர்.
இது பௌத்தத்துக்கும் சமணத்துக் கும் எதிராகச் சைவமும் வைதிகமும் செய்துகொண்டுவிட்ட தொகுதி உடன்பாட்டுக்குச் சான்று. எங்கள் இடத்தில் உங்களை ஆதரிப்போம்; உங்கள் இடத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும். நாங்கள் வேள்வியைக் கண்டிக்க மாட்டோம்; நீங்கள் சிவனைப் புறந்தள்ளக் கூடாது. இரு தரப்பும் அவரவர் அடைவு கருதி அடக்கமாக இருந்துகொள்வோம் என்பதுதான் சைவ-வைதிகத் தொகுதி உடன்பாட்டின் ஒப்பந்த சாரம்.
சினந்து அழித்த சிவன்
இனித் திருமந்திரத்துக்கு வருவோம். இறை வீரச்செயல்கள் எட்டில், திருமூலர் எடுக்கும் அடுத்த கதை, தக்கன் வேள்வியைச் சிவன் சீரழித்த பழங்கதை. தக்கன் சிவனின் மாமனார். தக்கனின் மகள் தாட்சாயணி. சடலத்தை எரித்த சாம்பலை உடலெங்கும் பூசிக்கொள்ளும் பித்தனும், பேய்கள் நடமாடும் சுடுகாட்டைக் கட்டிக்காக்கும் சடையனுமான சிவனைக் காதலித்துக் கைப்பிடித்தாள் தாட்சாயணி.
ஆத்திரம் கொண்ட தக்கன், தான் நடத்திய வேள்வியில் சிவனை வழிபடாது விஷ்ணுவை வழிபட்டான். தட்டிக் கேட்ட தாட்சாயணியைக் கொன்றான். சினங்கொண்ட சிவன் திமிர் பிடித்தாடும் தக்கனின் தலையை வெட்டி வேள்வித் தீயில் ஆகுதியாகப் போட்டான். பின் ஆட்டுத்தலை வைத்துத் தக்கனைச் சிறுமைப்படுத்தி எழுப்பினான் என்பது புராணம்.
தக்கன் தலையைச் சிவன் பறித்ததைப் பற்றி ஒரு பாட்டு எழுதும் திருமூலர் தக்கன் வேள்வியைச் சிவன் அழித்தது பற்றி ஒன்பது பாட்டு எழுதியிருக்கிறார்.
தந்தை பிரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினம்செய்த போதே.
(திருமந்திரம் 353)
பொருட்படுத்த வேண்டிய பொருளைப் பொருட்படுத்தாமல் குருட்டடியாய்த் தக்கன் செய்த வேள்வியைச் சினந்தான் தந்தைபிரானாகிய சிவன்; வேள்வித் தீயைவிடப் பெருந்தீயாகப் புறப்பட்டு வந்தான்; முறைகெட்டுச் செய்த பூசை நிறைவுறாதபடிச் சினந்து அழித்தான்.
கொலையில் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்துஇட்டுத் தான்அங்கி இட்டு
நிலைஉல குக்குஇவன் வேண்டும்என்று எண்ணித்
தலையை அரிந்துஇட்டுச் சந்திசெய் தானே.
(திருமந்திரம் 340)
கொலைபாதகம் செய்தான் தக்கன். அவன் தலையை வெட்டித் தீயில் போட்டான் சிவன். முதன்மை தெரியாமல் மயங்கும் உலகத்துக்குத் தக்கனை எடுத்துக்காட்டாக்க விரும்பி ஆட்டுத்தலையை வைத்துத் தக்கனை எழுப்பினான்.
இனி, திருமூலர் புராணம் புரட்டியது எங்கே? தக்கன் வேள்வி என்பது கருத்தழிந்து காமம் தறிகெடு தல்; தக்கன் அழிவு என்பது தறிகெட்ட காமுகனின் சீரழிவு; ஆட்டுத் தலை யோடு தக்கன் உயிர்த்தல் என்பது காமம் கட்டுப்பட்டுச் சீவன் தழைத்தல்.
தக்கன் வேள்வி அழிவை நேர்ப்பொருளில் எடுத்தால் சைவ வரலாறு; மறை பொருளில் எடுத்தால் சீவ வரலாறு. எவ்வரலாறு ஆயினும் வரலாறு முக்கியம் ஐயன்மீர்!
(சீவனைப் போற்றுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago