தோஷங்களை நீக்கும் பவானி சங்கமேஸ்வரர்!

By எஸ்.கோவிந்தராஜ்

புனித நகரமாம் காசியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில்’ மூழ்கி எழுந்தால், செய்த பாவங்கள் விலகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தென்னகத்தின் காசி என்று போற்றப்படும் பவானி கூடுதுறையில், காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுத நதிகள் கூடுமிடம் ‘தட்சிணப் பிரயாகை’ என்றழைக்கப்படுகிறது. கூடுதுறையில் மூழ்கி எழுந்து, சங்கமேஸ்வரரை வழிபட்டு,  தோஷங்களை நீக்குவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் நாடிவரும் இடமாக உள்ளது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகரம்.

காவிரி நதி ஒருபுறமும், பவானி நதி மறுபுறமும் சூழ்ந்திருக்க, எழில் சூழ்ந்த தீவுபோல காட்சியளிக்கிறது, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில்.

திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதரால் பாடல் பெற்றதுடன், புராண வரலாற்றை உடைய இக்கோயில், சைவ, வைணவ சமரசத்தை உலகுக்கு உணர்த்தி வருகிறது. இந்த தலத்துக்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்களகிரி, சங்ககிரி என நான்கு மலைகள் உள்ளன. தேவாரப்பாடல் பெற்ற 274 திருத்தலங்களில், பவானி 207-வது தலமாகப் பாடல் பெற்றுள்ளது.

இங்கு, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில், தேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ஆகியவை  உள்ளன. அம்மன் சன்னதிக்கும், ஈஸ்வரன் சன்னதிக்கும் இடையே முருகன் சன்னதி அமைந்துள்ளது. இது சோமஸ்கந்த அமைப்பு கோயிலாகும். அருணகிரிநாதரின் திருப்புகழில் இந்த சன்னதி குறித்து பாடப்பட்டுள்ளது.

இங்கு, சங்கமேஸ்வரருக்கு அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வாணிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார் என்றெல்லாம் திருநாமங்கள் உண்டு. அதேபோல, அம்பாள் வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என பல திருநாமங்களில் வணங்கப்படுகிறார்.

தல வரலாறு!

பூலோகத்தில் உள்ள புனித தலங்களை தரிசிக்க வந்த குபேரன், இந்த தலத்துக்கு வந்தபோது, யோகிகள், ஞானிகள், முனிவர்கள், கந்தர்வர்கள் தவம் செய்வதைக் கண்டார். அத்துடன், மான், புலி, சிங்கம், பசு, யானை, நாகம், எலி என பல்வேறு உயிரினங்களும் ஒன்றாக நீர் அருந்துவதுடன், தவத்தில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பதைக் கண்டு குபேரன் ஆச்சர்யம் அடைந்தார். அந்த இடத்தில் தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்த அவர், இறைவனின் தரிசனம் வேண்டி பவானியில் தவம் மேற்கொண்டார்.

குபேரனின் தவத்தால் மகிழ்ந்த சிவனும், திருமாலும்  காட்சியளித்து அருள்பாலித்தனர். அத்துடன் அங்குள்ள இலந்தை மரத்தின்கீழ் சுயம்பாகத் தோன்றி அருள்புரிந்தார் ஈசன். அப்போது, அளகேசன் என்ற பெயரால் இத்திருத்தலத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டுமென குபேரன் வரம் கேட்டுப் பெற்றார். அன்றிலிருந்து இத்தலம், ‘தட்சிண அளகை’ என்ற பெயர் பெற்றது. சிவனுக்கு இடப்பக்கம் ஆதிகேசவப் பெருமாளாக திருமால் எழுந்தருளினார்.

சங்கமேஸ்வரர் கோயிலில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ராஜகோபுரம், வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

இக்கோபுரத்தையொட்டி வைகுண்டவாசலும் உள்ளது. இக்கோயிலில் உள்ள கல் சிற்பங்கள்,  புராணக் கதைகள், தேவாரக் கதைகளை விளக்குவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தல விருட்சம் இலந்தை மரம். இறைவனை வேண்டி இக்கனியை உண்டால் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆண்டுதோறும் மாசி மகம் ரத சப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி, சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுவது சிறப்பம்சம்.

பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா, தேரோட்டத்துடன் விமரிசையாக ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதேபோல, சிவராத்திரியன்றும் ஏராளமான பக்தர்கள் பவானிக்கு வருகின்றனர். மறைந்த முன்னோருக்கு அமாவாசை நாட்களில் கூடுதுறையில் தர்பணம் செய்வதற்கும், பிண்டம் கொடுப்பதற்கும் ஆயிரக்கணக்கானோர் வந்து,  செல்கின்றனர்.

ஆடி மாதம் 18-ம் தேதி பக்தர்கள் கூட்டத்தால் பவானி நிரம்பி வழியும். கூடுதுறையில் கூடும் சுமங்கலிப் பெண்கள், தேங்காய், பழம், பூ, காதோலைக் கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து வழிபடுவர். காவிரி அம்மனுக்கு தீபாராதனை செய்து, மாங்கல்யம் நிலைக்கவும், திருமணமாகாதவர்கள் திருமணம் கைகூடவும் வேண்டி மஞ்சள் நூலை கையில் அணிந்து கொள்வர். பூஜை செய்த பொருட்களை ஆற்றில் விட்டு வழிபடுவர். புதுமணத் தம்பதியினர், காவிரித் தாய்க்கு பூஜை செய்து, தாங்கள் திருமணத்தன்று அணிந்திருந்த மணமாலைகளை எடுத்து வந்து ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பரிகாரத்தலம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள், பவானியில் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கூடுதுறையில் நீராடி, விநாயகரையும், சங்கமேஸ்வரரையும் வழிபட்டு, இங்குள்ள இலந்தைப் பழங்களை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் மாந்தி கிரகத்தின் ரூபத்தில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

காய்ச்சல், தோல் வியாதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இக்கோயிலில் உள்ள ஜுரஹரேஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, மிளகு ரச சாதத்துடன், அரைக்கீரை கூட்டு நைவேத்தியம் செய்தால் உரிய நிவாரணத்தை பெறலாம். வாயு சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கு வில்வத்தால் அர்ச்சித்து அதனை உணவில் சேர்த்தால் நலம் பெறுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

அகால மரணம் அடைந்தவர்களுக்கு பவானியில் ‘ நாராயண பலி’ பூஜை செய்யப்படுகிறது.  நாகதோஷம் உள்ளவர்கள் கல்லில் செய்த நாகரைக் கொண்டு வந்து, ஆற்றின் கரையில் உள்ள விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்தால் தோஷம் நீங்கும் என்றும், செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்துக்கு தாலி கட்டி,  அதை ஆற்றில் விடுவதும், பெண்கள் அரசங்கொத்துக்கு பூஜை செய்து ஆற்றில் விடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சங்கமேஸ்வரர் கோயில் காலை  6 மணி  முதல் பகல் 1 வரையிலும்  மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். பக்தர்கள் தங்கி தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் 16 அறைகள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்