உயிர் வளர்க்கும் திருமந்திரம் 76: ஆமாம்! கபாலிகர் ஆகுக

By கரு.ஆறுமுகத்தமிழன்

நான்முகன் எனப்படும் பிரம்மன் இந்தியப் புராண மரபில் ஒரு பெரிய கை. முக்கடவுளரில் ஒருவன்; படைப்புத் தொழிலுக்குப் பொறுப்பாளன்; வேதநாதன்; அவனுடைய நான்கு முகங்களிலும் உள்ள நான்கு வாய்களின் வழியாக வந்தவைதாம் நான்கு வேதங்கள்.

நான்கு வருணங்களும்கூட வேத புருசனிடமிருந்தே தோன்றின; வாயிலிருந்து பிராமண வருணமும் தோளிலிருந்து சத்திரிய வருணமும் தொடையிலிருந்து வைசிய வருணமும் காலிலிருந்து சூத்திர வருணமும் உருவானதாக இருக்கு வேதத்தில் இடம்பெறும் புருச சூக்தத்தின் பன்னிரண்டாம் சூத்திரம் பதிக்கும்.

இப்பேர்ப்பட்ட பெருந்தலைக்கு இந்தியாவில் வழிபாடே இல்லையே, ஏன்? பிறவற்றோடு சேர்ந்து வருணத்தையும் படைத்த பிரம்மனைப் பிற சமய இயக்கங்கள் ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டன என்பதுதான் காரணம். அதற்குக் கதைகள் பல.

ஒன்று

தொடக்கத்தில் பிரம்மன் நான்முகன் அல்லன்; ஐம்முகன். ஐந்தலைகளில் ஒன்று பறிக்கப்பட்டுவிட்டதால் அவன் நான்முகன். எப்படி? படைப்புத் தொழிலுக்குப் பெண் வேண்டுமென்று பெண்ணைப் படைத்தான்.

அவள் பெயர் சதரூபை; நூறு வடிவுக்கு அரசி; அவள் வடிவழகு போகும் திசையெல்லாம் பிரம்மனின் பார்வையும் போனது; வலமும் இடமும் முன்னும் பின்னுமாக அவள் எந்தப் பக்கம் போனாலும் பார்க்க வசதியாக நான்கு தலைகளை வளர்த்துக்கொண்டான்; அவள் மேல் எழும்பினாள்; இவனும் மேல்நோக்கி ஒரு தலையை வளர்த்துக்கொண்டான்.

ஆகமொத்தம் ஐந்து தலைகள். சதரூபை சங்கடப்பட்டாள். சதரூபையோடு மல்லுக்கட்டும் பிரம்மனின் சல்லித்தனம் பொறுக்கமாட்டாமல் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எடுத்தான். ஐம்முகப் பிரம்மன் நான்முகன் ஆனான்.

இரண்டு

‘காப்பானாகிய விண்ணன் பெருமாளையும் அழிப்பானாகிய அண்ணல் சிவனையும்கூட நானே படைக்கிறேன்; எனவே வேதநாதனாகிய நானே முதற் கடவுள்’ என்று பிரம்மன் செருக்கோடு திரிந்தான். ‘நீ படைத்துப் பயன் என்ன? நான்தானே காக்கிறேன்’ என்று விண்ணன் செருக்கடித்தான். அவர்களுக்கு முன் அண்ணல் சிவன் சோதிவடிவாய்த் தோன்றினான்.

விண்ணன் பெருமாள் கும்பிட்டுப் பின்வாங்க, பிரம்மனோ, ‘வாடா, நான் பெற்ற மகனே’ என்றான். சிவன் கோபம் கொண்டு பிரம்மனது ஐந்தாவது தலையைப் பிடுங்கிவிட்டார். பிடுங்கிய தலையை கபாலமாக்கினார்; கபாலத்தைப் பிச்சைப் பாத்திரமாக்கினார்; கபாலி ஆனார்.

அக்கார் அணிவடம் ஆகத்தர்; நாகத்தர்;

நக்குஆர் இளமதிக் கண்ணியர்; நாள்தொறும்

உக்கார் தலைபிடித்து உண்பலிக்கு ஊர்தொறும்

புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.

-என்று பாடுகிறார் திருநாவுக்கரசர். உருத்திராக்கம், நாகம், இளமதி ஆகியவற்றை அணிந்த உடம்பினராகிய எங்கள் திருப்புகலூர்ச் சடையனார், கபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சைக்காக ஊர்ஊராய்ச் செல்பவர் ஆவார்.

கொழுப்பெடுத்தவன் மண்டை என்னாகும்? கொழுப்பு சுரண்டப்பட்டுக் கபாலம் ஆகும். மணிமேகலையின் பாத்திரம் அள்ளிக் குறைக்கமுடியாத அட்சய பாத்திரம் என்பதுபோலக் கபாலியாரின் பிரம்ம கபாலம் இட்டு நிரப்பமுடியாத பிச்சைப் பாத்திரம்.

நான் நிரப்பிக் காட்டுகிறேன் என்று வந்தார் விண்ணன் பெருமாள். தன் நெற்றியைக் கீறி அதிலிருந்து வழியும் குருதியைப் பிரம்ம கபாலத்தில் வடித்தார். நிரம்பவில்லை. விண்ணன் பெருமாள் ரத்தசோகையால் சோர்ந்தார். பிழைத்துப்போ என்று விட்டார் கபாலியார்.

மூன்று

பிரம்மன் தலையைப் பிடுங்கிவிட்டதால் சிவனுக்குப் பிரம்மக் கொலைக் குற்றம் வந்துவிட்டது. பிரம்ம கபாலமோ சிவனின் கையோடே ஒட்டிக்கொண்டு விட்டது. மண்டையோடு கையை விட்டு இறங்கும்போதுதான் சிவனுடைய பிரம்மக் கொலைக் குற்றம் தீரும் என்று சொல்லப்பட்டுவிட்டது.

சிவன் என்ன செய்வதென்று தெரியாமல் பித்துப் பிடித்தவனைப்போலப் பிச்சை வாங்கித் தின்றுகொண்டிருந்தான். எவ்வளவு பிச்சை வாங்கினாலும் பிரம்ம கபாலம் நிரம்பவில்லை; சிவப் பசி தீரவில்லை.

 சிவன் நிலை கண்டு இரங்கிய விண்ணன் பெருமாள் இலக்குமியைக் கொண்டு பிச்சையிடச் செய்தான்; பெருமாள் அருளால் பிரம்ம கபாலம் நிரம்ப, சிவப் பசி தீர, சிவனின் பிரம்மக் கொலைக் குற்றம் தொலைந்தது. பெருமாள் அரன் சாபம் தீர்த்த பெருமாள் ஆயினார்.

பிண்டியார் மண்டை ஏந்திப்

பிறர்மனை திரிதந்து உண்ணும்

உண்டியான் சாபம் தீர்த்த

ஒருவன்ஊர், உலகம் ஏத்தும்

கண்டியூர், அரங்கம், மெய்யம்,

கச்சிபேர் மல்லை என்று

மண்டினார் உய்யல் அல்லால்

மற்றையோர்க்கு உய்யல் ஆமே?

என்று திருக்குறுந் தாண்டகத்தில் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். பிண்டம் பிண்டமாகப் பிடித்துப்போட்டுப் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனின் மண்டையோட்டை ஏந்திப் பிறர் வீடுகளில் பிச்சை எடுத்துத் தின்றுகொண்டிருந்த சிவனின் சாபத்தைத் தீர்த்த விண்ணன் பெருமாள் குடிகொண்டிருக்கும் ஊர்களாகிய திருக்கண்டியூர், திருவரங்கம், திருமெய்யம், திருக்கச்சி, திருக்கடல்மல்லை போன்ற இடங்களில் சென்று கும்பிடுகிறவர்கள் பிழைப்பார்கள். கும்பிடாதவர்கள் பிழைப்பார்களோ?

நான்கு

பிரம்மக் கொலைக் குற்றம் தொலையவில்லை; பிரம்மக் கபாலம் கைவிட்டு இறங்கவில்லை; பிச்சைப் பாத்திரம் நிரம்பவில்லை; பசி அடங்கவில்லை. கிறுகிறுத்துத் திரிந்துகொண்டிருந்தார் ஈசனார்.

பசி தாளாமல் மயானம் கொள்ளையிட்டார்; மயானச் சொத்தான சாம்பலை அள்ளித் தின்றார்; எலும்பைக் கடித்தார். மேல்மலையனூருக்குப் போங்கள் என்று யாரோ சொன்னார்கள். போனார். அங்குள்ள மயானத்தையும் கொள்ளையிட்டார்.

சிவனின் பசிப்பிணி தீர்க்க மூன்று கவளச் சோற்றோடு அங்காள பரமேசுவரி வந்தாள். முதல் இரண்டு கவளங்களைக் கபாலத்தில் இட்டாள். இட்ட கவளங்களைக் கபாலம் தின்றது. மூன்றாவது கவளத்தைக் காற்றில் இறைத்தாள்.

இறைந்து கிடந்த உணவைப் பொறுக்கித் தின்பதற்காகப் பிரம்ம கபாலம் சிவன் கையைவிட்டு இறங்கியது. சிவனின் பிரம்மக் கொலைக் குற்றம் தீர்ந்தது. இப்போது பிரம்ம கபாலம் அங்காளியைப் பிடிக்கத் தாவியது.

‘யாரிடம் வேலை காட்டுகிறாய்?’ என்று சினங்கொண்ட அங்காளி ஆட்டமாக ஆடிப் பிரம்மக் கபாலத்தை உடைத்தெறிந்தாள். சுடுகாட்டுத் திருவிழாவான மயானக் கொள்ளை இவ்வாறு தொடங்கியது.

காலாவதி ஆன பிரம்மன்

நால்வேதமும், நால்வருணமும், பதினான்கு உலகங்களும் படைத்த பிரம்மனின் தலையைப் பறித்து வைதிகத்தைச் சைவத்துக்குக் கீழ்ப்படுத்தினான் சிவன் என்பது சைவர்கள் சொல்லும் பழங்கதை.

பிரம்மன் தலைபறித்து வைதிகத்தை அடிப்படுத்தியது சிவன்தான்; ஆனால் சிவனுக்கே சாபம் தீர்த்துக்கொடுத்தது விண்ணன் பெருமாள் என்பது வைணவர்கள் சொல்லும் பழங்கதை. ஆட்டமாய் ஆடிப் பிரம்ம கபாலத்தை உடைத்தெறிந்தவள் அங்காள பரமேசுவரிதானே என்பது சாக்தர்/நாட்டார் சொல்லும் பழங்கதை.

ஆகமொத்தம் எல்லோருமாகக் கூட்டணி சேர்ந்து பிரம்மனை, பிரம்ம வழிபாட்டை ஏறக் கட்டிவிட்டார்கள். உலகத்தையே படைத்த பிரமன் தான் பறிகொடுத்த ஒற்றைத் தலையை மீண்டும் படைத்துக்கொள்ளத் திறன் அற்றுக் காலாவதி ஆனான்.

எங்கும் பரந்தும் இருநிலம் தாங்கியும்

தங்கும் படித்துஅவன் தாள்உணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன்தலை முன்அற

அங்குஅச் சுதனை உதிரம்கொண் டானே

-என்பது திருமந்திரம். எல்லாவற்றுக்கும் இடம்கொடுத்தும் எல்லாவற்றிலும் பரவியும் நிற்கிறவன் இறைவன். தேவர்கள் அவனது திருவடிப் புகழை மதித்தால் குற்றமில்லை; மதிக்காவிட்டால் என்ன ஆகும்? அயனாகிய பிரம்மனின் தலையை அறுத்து அந்தக் கபாலத்தில் அச்சுதனாகிய விண்ணன் பெருமாளின் குருதியைப் பிச்சை வாங்கியதுபோல் ஆகும்.

திருமூலம் சொல்கிறது

படைக்கும் தொழில் காமத்தோடு தொடர்புடையது; காம எழுச்சி பெறக் குருதி கருவாய் எனப்படும் குறிகளுக்குப் பாய வேண்டும்; கீழே இருக்கும் கருவாய்க் குறிகளுக்கே குருதி பாய்ந்தால் மேலே இருக்கும் கபாலத்து அறிவுச் செயலகமான மூளைக்குப் போதுமான குருதி பாயாது; காமச் செயல்பாடு மிகுந்தால் மூளைச் செயல்பாடு குறையும். எனவே குருதியைக் குறிகளுக்கே இறக்கிக்கொண்டிருக்காமல் கபாலத்துக்கும் ஏற்றுக. காமுகர் ஆகாமல் கபாலிகர் ஆகுக.

(அறிவைப் பாய்ச்சுவோம்) கட்டுரையாளர்,

தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்