மிதுன ராசி வாசகர்களே!
வாக்குறுதி என்பது சத்தியத்துக்கும் மேலானது, என்பதை உணர்ந்தவர்களே! உங்களுக்கு 2-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அனுபவப் பூர்வ மாகவும், யதார்த்தமாகவும் பேசுவீர்கள்.
எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைபட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் சாதகமான வீடுகளில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களையெல்லாம் அடுத்தடுத்து முடிப்பீர்கள். மனோதைரியம் பிறக்கும். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள் இருந்த தல்லவா, இனி சமாதானக் கொடி பறக்கும். கோபம் குறையும். பணப்பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள்.
இந்த ஆண்டு முழுக்கச் சனியும், கேதுவும் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே தொடர்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். சந்தேகத்தால் இருவரும் பிரிய வேண்டி வரும். புதிய நண்பர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வெளி நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யோகா, தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. முன்கோபத்தைக் குறையுங்கள். மின்சாரம், நெருப்பு இவற்றைக் கவனமாகக் கையாளுங்கள். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு அதிசார வக்கிரமாகி நிற்பதால் வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்களைப் பேசித் தீர்ப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வசதி வாய்ப்புகள் இருந்தும் வீட்டில் விளையாட ஒரு குழந்தை இல்லையே எனத் தவித்த தம்பதியினருக்கு அழகான வாரிசு உருவாகும். அக்காவுக்குத் திருமணம் நிச்சயமாகும். புது வேலை கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
குருபகவான் 19.05.2019 முதல் 27.10.2019 வரை 6-ம் வீட்டிலேயே மறைவதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனைவியுடன் மனம்விட்டுப் பேசித் தீர்க்கப் பாருங்கள். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்ய வேண்டாம். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைச் சரியாக பூட்டிச் செல்லவும். சமையல் வாயு கசியக் கூடும். கவனம் தேவை. தங்க நகைகளை இரவல் தர வேண்டாம், இரவல் வாங்கவும் வேண்டாம்.
யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட்டு பணம் வாங்கித் தர வேண்டாம். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை உங்கள் ராசிக்கு குருபகவான் 7-ம் வீட்டில் நுழைவதால் போட்டி, பொறாமைகள் நீங்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குப் கூடி வரும். குடும்பத்தில் இனி மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
வியாபாரிகளே! மற்றவர்கள் சொல்கிறார்கள் என நினைத்துப் பெரிய முதலீடுகளைப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பழைய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். உணவு, மின்சாரப் பொருட்கள், பயணம், காகிதப்பொருட்கள், பதிப்பகத் தொழில், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். சிலருக்குத் திடீர் இடமாற்றமும் உண்டு. சக ஊழியர்களின் தவறுகளை மேலிடத்துக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்களை உரசிப் பார்ப்பர்கள். பிற்பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பளப் பாக்கியை போராடிப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு : நவம்பர் மாதம் முதல் குரு சாதகமாக வருவதால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். மாமனார், மாமியார் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். ஆனால் கண்டகச்சனி தொடர்வதால் தங்க நகை இரவல் வாங்கவோ கொடுக்கவோ வேண்டாம். கணவரை அனுசரித்துப் போங்கள். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள்.
இந்தப் புத்தாண்டு சோர்ந்து கிடந்த உங்களை சுறுசுறுப்பாக்குவதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன், திராட்சைப் பழ சாற்றைத் தானமாகக் கொடுங்கள். செல்வாக்கு, கௌரவம் அதிகமாகும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago