இறைமை என்பதென்ன? அறிவு (omniscience), புரிவு (omnipotence), செறிவு (omnipresence) எனும் மும்மை. அதனை எண்மையாக்கிச் (எட்டாக்கிச்) சொல்கிறது குறள்.கோள்இல் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை (குறள் 9)என்கிறது குறள்.
எட்டு இயல்பு களை உடையவரின் திருவடிகளை வணங்காத தலையினால் என்ன பயன்? அந்தத் தலை தங்கியிருக்கும் உடல் தலையுள்ள உடலேயானாலும் முண்டந்தான்.
எட்டு இயல்புகள் எவை? சைவ ஆகமங்களின் அடிப்படையில் அவற் றைப் பட்டியலிடுகிறார் பரிமேழலகர்:
தன்வயத்தன் ஆதல்
நாம் நம் வசத்தில் இருக்கிறோமா? உலகியல் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காக யாரையாவது சார்ந்து பிறர் வசத்தில்தானே இருக்கிறோம்? எனில் யாரையும் சாராமல் தன் வசத்திலேயே இருப்பவராக யார் இருக்கக்கூடும்? உலகியலுக்கு அப்பாற்பட்ட இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
தூய உடம்பினன் ஆதல்
ஒன்பது துளைகள் வழியாகவும் அழுக்கு இழியும் உடலங்கள் நமது. எனில் அழுக்கற்ற உடல் உடையவராக யார் இருக்கக்கூடும்? துளைகளே இல்லாத அருள் உடம்புக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படும் இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
இயற்கை உணர்வினன் ஆதல்
ஒன்றைத் தெரிந்துகொள்ளும் போது அதனை நாமாகவே தெரிந்து கொள்வதில்லை; யாரேனும் சொல்லிக் கொடுக்கச் செயற்கையாகவே தெரிந்து கொள்கிறோம்; எனில் யாருமே சொல்லிக் கொடுக்காமல் தானாகவே இயற்கையாகவே தெரிந்துகொள்கிறவராக யார் இருக்கக்கூடும்? அறிவேமயமான இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
முற்றும் உணர்தல்
ஒன்றை அறியும்போது தொடக்கம் முதல் இறுதிவரை முற்றாக அறிவ தில்லை நாம். அறியும் பொருளின் ஒரு பகுதியையே அறிகிறோம். எனில் முற்றாக அறிகிறவராக யார் இருக்கக்கூடும்? அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
செப்புக் குடத்தைப் பற்றிக் கிடக்கும் பச்சைக் களிம்புபோல நம் உயிரைப் பற்றிக்கிடக்கின்றன ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று பாசங்கள்; இவற்றின் பற்று நீங்கி விடுபடுவதே வீடுபேறு.
பாசங்களால் பற்றவே படாதவராக, எப்போதும் விடுபட்டவராக யார் இருக்கக்கூடும்? பிறவா யாக்கைப் பெரியோனாகிய இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
பேரருள் உடைமை
தொடர்புடையவர்களிடம் காட்டுவது அன்பு; தொடர்பே இல்லாதவர் களிடமும் காட்டுவது அருள். நாம் அன்பும் அருளும் உடையவர்கள்தாம்.
ஆனால், எப்போதும் உடையவர்களா? அவ்வப்போது உடையவர்கள். எனில் எப்போதும் அருள் உடையவராக யார் இருக்கக்கூடும்? பெருங்கருணைப் பேராளராகிய இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
முடிவுஇல் ஆற்றல் உடைமை
மைக் பாவெல் வழியாக 8.95 மீட்டர் அளவு நீளம் தாண்டவும், சேவியர் சோட்டோமேயர் வழியாக 2.45 மீட்டர் உயரம் தாண்டவும், உசைன் போல்ட்டு வழியாக 100 மீட்டர் தூரத்தை 9.58 மணித்துளிகளில் ஓடிக் கடக்கவும் நம்மால் முடியும்.
இன்றளவில் நம் ஆற்றலின் எல்லை இவ்வளவுதான். எனில் எல்லையற்ற ஆற்றல் உடையராக யார் இருக்கக்கூடும்? கார்ஆர் கடல் நஞ்சை உண்டாராகிய இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
வரம்புஇல் இன்பம் உடைமை
நம்முடைய இன்பங்கள் எல்லாமே கால எல்லைக்கு உட்பட்டவை; ஆகவே, சிற்றின்பங்கள் எனப்பட்டன. பேரின்பம் என்பது இடையறவு படாது நீடித்த நிலையான இன்பம். பேரின்பத்தில் திளைப்பவராக யார் இருக்கக்கூடும்? நித்தல் இன்பராகிய இறையே அவ்வாறு இருக்கக்கூடும்.
சிவனுக்கு உரிய எட்டுக் குணங்கள் இவை என்று சைவ ஆகமங்களில் கூறப்பட்டிருப்பதாக உரை வகுக்கும் பரிமேலழகர், ‘கடையிலா அறிவு’ என்று தொடங்கும் எட்டுக் குணங்கள் என்றும் சிலர் உரை வகுப்பதாகத் தெரிவிக்கிறார். பரிதியார் என்னும் மற்றோர் உரையாசிரியர் அவ்வாறே உரை வகுக்கிறார். கடையிலா அறிவு என்று தொடங்கும் எட்டுக் குணங்கள் எவை?
கடையிலா ஞானத்தோடு,
காட்சி, வீரியமே, இன்பம்,
இடைஉறு நாமம்இன்மை,
விதித்த கோத்திரங்கள்இன்மை,
அடைவுஇலா ஆயுஇன்மை,
அந்தராயங்கள்இன்மை
உடையவன் யாவன் மற்றுஇவ்
உலகினுக்கு இறைவன்ஆமே.
(சூடாமணி நிகண்டு, 12:85)
கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா ஆற்றல், கடையிலா இன்பம், இடையில் வரும் பெயர்இன்மை, குலம் இன்மை, அடைபடாத வாழ்நாள், அழியா இயல்பு ஆகியவற்றை உடையவன் எவனோ அவன் இந்த உலகினுக்கு இறைவனாகக் கொள்ளத்தக்கவன் என்று சொல்லும் சூடாமணி நிகண்டு இவற்றை அருகருக்கு உரிய எட்டுக் குணங்களாக வகுக்கிறது.
முழுமையான அறிவு, ஒன்றை உள்ளும் புறமுமாக முற்றாகக் காணும் திறம், எல்லையில்லாத ஆற்றல், பற்று விட்டதால் வரும் இன்பம், பெயர் பாராட்டாமை, குலம் பாராட்டாமை, வாழ்நாள் குறைவுபடாமை, அழியாமை ஆகிய இயல்புகளைப் பெற்றவர் யார்யாரோ அவரெல்லாம் அருகர் என்கிறது சமணம்.
மனிதர் அடைய வேண்டிய இலக்கு
எல்லாவற்றையும் அடையாளமாக்கிப் படிமம் செய்து போற்றும் சைவமோ மேற்சொன்ன எட்டையும் சிவனின் இயல்புகளாக்கி மனிதர் அடைய வேண்டிய இலக்காக்கி விடுகிறது.
சிவன் முடிவிலா ஆற்றல் உடையவன் என்று காட்ட, அதன்வழி அவனது முதன்மை நாட்ட, சிவன் புரிந்த வீரச்செயல்களைப் புராணக் கதையாகப் புனைந்து வைத்திருக்கிறது சைவம். அந்தப் புனைவுகளில் எட்டைக் கொண்டாடுகின்றன தமிழ்ச் சைவப் பக்தி இலக்கியங்கள். அந்த எட்டு வீரச் செயல்களையும் அவை நிகழ்ந்த இடங்களையும் பட்டியலிடுகிறது கீழ்வரும் பழம்பாடல்:
பூமன் சிரம்கண்டி; அந்தகன் கோவல்;
புரம் அதிகை;
மாமன் பறியல்; சலந்தரன் விற்குடி;
மா வழுவூர்;
காமன் குறுக்கை; இயமன் கடவூர்;
இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடி
தன் சேவகமே.
(1) பிரமனின் தலையைத் துண்டித்தது திருக்கண்டியூர்; (2) அந்தகாசுரனை அழித்தது திருக் கோவலூர்; (3) முப்புரம் எரித்தது திருவதிகை; (4) மாமனராகிய தக்கனின் தலையைப் பறித்தது திருப்பறியலூர்; (5) சலந்தரனைக் கொன்றது திருவிற்குடி; (6) கயாசுரன் என்னும் யானையைக் கொன்றது திருவழுவூர்; (7) மன்மதனை எரித்தது திருக்குறுக்கை; (8) காலனைக் காலால் உதைத்தது திருக்கடவூர் என்னும் திருக்கடையூர்.
தலையில் கொன்றை மாலையும் நிலவும் சூடிய சிவன், தீங்கை ஒழித்து நலம் நிறுத்தி மக்களுக்குச் சேவகம் செய்தது இந்த எட்டுத் தமிழ் ஊர்களில்தான்.
இவற்றைப் புராண தந்திரமாகிய இரண்டாம் தந்திரத்தில் ‘பதி வலியில் வீரட்டம் எட்டு’ என்ற தலைப்பில் எட்டுப் பாடல்களாக வடித்து விசாரணை செய்கிறது திருமந்திரம்.
அவற்றில் முதலாவது அந்தகாசுரப் பழங்கதை விசாரணை. சிவனுடைய கண்கள் பார்வதியால் பொத்தப்பட்டபோது பார்வையில்லாமல் பிறந்தவன் அந்தகாசுரன்; பிரகலாதனுக்குப் பெரியப்பனாகிய இரணியாட்சனுக்கு வளர்ப்பு மகனாக வந்து ஆட்சியைப் பிடித்தவன்.
கண்ணில்லாத உனக்கெதற்கு ஆட்சி என்று சிறுவனாகிய பிரகலாதன் அவனைத் துரத்திவிட, அவன் பிரமனை எண்ணித் தவம் செய்து வரங்கள் பெற்றுக் கிடைத்த ஆட்சிக்காலத்தில் இல்லாத அட்டூழியங்கள் செய்தான். இருண்ட ஆட்சிக்காரனாகிய அவனைத் தமிழ்நாட்டில் வைத்துக் கதை முடித்தார் சிவனார். கதை புரட்டுகிறார் திருமூலர்:
கருத்துஉறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம்செய் தான்என்று வானவர் வேண்டக்
குருத்துஉயர் சூலம்கைக் கொண்டுகொன் றானே. (திருமந்திரம் 339)
அந்தகன் என்பவன் அசுரன் அல்லன்; அகத்தில் இருள் பரப்பிக் கருத்தைக் குருடாக்கும் ஆணவம். ஆணவம் என்பது அறியாமை. அறியாமையே உலகத்தின் உயிர்களை எல்லாம் வருந்தச் செய்கிறது. அறிவுச் சூலம் ஏந்தி அறியாமை அரக்கனைக் கொல்க.
அறியாமை குத்த அறிவுச் சூலம் கூவி விற்போர்க்கு: அவரவர் அறியாமைக்கு அவரவர் அறிவுச் சூலம். இந்தச் சூலம் விற்பனைக்கன்று.
(சுத்த அறிவு பெறுவோம்) கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago