சமயமரபில் புராணம் என்று ஒரு நூல் வகை. புராணம் என்றால் பழைமை. தொன்மம் எனலாம். மாணிக்கவாசகர் பாடிய சிவபுராணத்தின் தலைப்புக் குறிப்பில், ‘சிவனது அநாதி முறைமையான பழைமை’ என்று வழங்கப்பட்டிருக்கிறது.
கடவுளரின் தோன்றாப் பழமையை, உலகத்தின் தோற்றத்தை, உயிர்களின் தோற்றத்தை, குலங்களின் தோற்றத்தைக் கதை வடிவாகச் சொல்பவை புராணங்கள். குப்தர்களின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டுச் செல்வாக்குப் பெற்றவை. குப்தர்களின் ஆட்சிக் காலம் பொது ஆண்டு 320-550.
சுருதிகளும் சுமிருதிகளும் மேல்குலத்தார்க்கு மட்டுமே உரியவையாகக் கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில், எல்லாக் குலத்தாரிடமிருந்தும் கதைப்பாடல்கள் பெற்று, எல்லாக் குலத்தார்க்குமாகப் புனையப்பட்டவை புராணங்கள். வேதங்கள் பெரிதாக்கிப் பேசாத தெய்வங்களையெல்லாம் மக்கள் மரபிலிருந்து பெற்றுப் புராணங்கள் விதந்து ஓதின. புராணங்கள் தலையெடுத்த காலங்களில்தான் தனிக் கடவுள் மரபும் தலையெடுத்தது; சிவனும் பெருமாளும் தேவியும் முதன்மைப்பட்டார்கள் என்பது ஒருபுறம்.
புலன்கள் புறவழி போகாது
சிவபுராணம், விஷ்ணு புராணம், பாகர்வதி புராணம், கந்த புராணம் என்று கிளம்பிய பதினெட்டுப் புராணங்களில் கருட புராணம் ஒன்று. பெருமாள் தன் வாகனமாகிய கருடனுக்குச் சொல்லிக் கருடன் மற்றவர்களுக்குச் சொல்லியது என்பதால், கருட புராணம் என்று பெயர். சிவனார் வகையிலும் இப்படித்தான். ஆகமங்களைச் சிவனார் தன் வாகனமாகிய நந்திக்குச் சொல்லி, நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாகத் திருமூலரே சொல்கிறார்:
செப்பும் சிவாகமம் என்னும்அப் பெயர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றும்
தப்புஇலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்புஇல் எழுகோடி யுகம்இருந் தேனே.
(திருமந்திரம் 74)
சிவாகமம் என்று வழங்கும் அருள்நூலின் அறிவினைப் பெற்றேன்; அதை எனக்கு வழங்கிய நந்தியின் அருளினைப் பெற்றேன். (ஆகமங்களை நந்திக்கு வழங்கியவர் சிவனார் என்று வேறுபாடலில் சொல்கிறார். பாடல் 62). தப்பு என்றால் அடித்தல், தட்டுதல்; தப்பட்டை என்பது கோல்கொண்டு அடிக்கும் பறை; தப்புதல் என்பது அதை அடித்து ஒலி எழுப்புதல். துணி துவைப்பதும்கூடத் தப்புதல்தான்.
தப்படி என்றால் அடிதாளத்துக்கேற்பக் கணக்காக எடுத்து வைக்கும் காலடி. தப்பிலா மன்றில் தனிக்கூத்து என்பது, அடித்துத் தப்பி இசைக்காத மன்றம்; இசைக்கு ஏற்பக் கணக்காகக் கால் வைத்து ஆடாத மன்றம். பொது மன்றம் இல்லை; எனக்குள் இருக்கும் தனி மன்றம். வெளிப்பட இசைக்காமல், சடை சுற்றக் குதிக்காமல், எனக்குள் இருக்கும் தனிமன்றத்தில், எனக்கென்று தனியாக ஆடாத ஆட்டத்தைக் கண்டபின் சாவச்சம் தவிர்த்து நெடிது நாள் இருந்தேன் என்று பாடுகிறார் திருமூலர்.
தேட்டுஅறும்; சிந்தை திகைப்புஉறும்; பிண்டத்துள்
வாட்டுஅறும்; கால்புந்தி ஆகி வரும்;
புலன் ஓட்டுஅறும்; ஆசை அறும்;
உளத்து ஆனந்த
நாட்டம் முறுக்குஉறும்; நாடகம் காணவே.
(திருமந்திரம் 2745)
தேடிக்கொண்டே திரிகிறவர்களே, இனி உங்கள் தேட்டம் அற்றுப் போகும். சிந்தித்துக்கொண்டே திரிகிறவர்களே, இனி உங்கள் சிந்தை திகைத்துப் போகும். வயதாகிறதே, உடல் வாடுகிறதே என்று கவலைப்படுகிறவர்களே, இனி உங்கள் உடல் வாடாமல், அன்றிருந்த மேனிக்கு அழிவில்லாமல் நிற்கும்.
புத்தியால் வேலை செய்து கட்டளைகள் இடுகிறவர்களே, இனிக் காற்றை முறையாக ஏற்றி இறக்குமாறு கட்டளை இடுவதைத் தவிர்த்துப் புத்திக்கு வேறு வேலை இல்லாது போகும். புறத்தில் மேய்கின்ற புலன்களைப் பிடித்துக் கட்ட முடியாமல் விழிபிதுங்கி இருக்கிறவர்களே, இனி அடித்து ஓட்டினாலும் புலன்கள் புறவழி போகாது.
காசைக் கொடுத்து, அத்தனைக்கும் ஆசைப்படக் கற்றுக்கொண்டவர்களே, இனி உங்கள் ஆசையின் வேர் அறுத்து எடுக்கப்படும். நன்ஞானக்கூத்தனின் நாடகத்தை உள்ளுக்குள்ளேயே பார்த்திருந்திருந்தார்க்கு ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே என்று தனி மன்றத்தில் நிகழும் தனி ஆட்டத்தை அழுத்திப் பேசுகிறார் திருமூலர்.
மதங்களின் முக்கியத்துவம் என்ன?
இருக்கட்டும். கருட புராணக் கதைக்கு வருவோம். மற்ற புராணங்களைப்போலவே கடவுளின் பழைமை, உலகத்தின் தோற்றம் போன்றவற்றைப் பேசினாலும், கருட புராணம் சிறப்பாகப் பேசுவது வேறொன்று: மரணத்துக்குப் பின் மனிதன் நிலை என்ன? மரணத்துக்குப்பின் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தக, மனிதன் துறக்க நிரயங்களில் (சொர்க்க நரகங்களில்) எவ்வாறு பரிசளிக்கப்படுகிறான் அல்லது தண்டிக்கப்படுகிறான் என்று கருட புராணம் போன்ற தொன்ம நூல்களின் வழியாகச் சமய மரபு கற்பிக்க முயல்கிறது.
பிறன் பொருளைக் கொள்ளையடித்தோர்க்கு என்ன தண்டனை, வாழ்க்கைத் துணையை வஞ்சித்து வாழ்வோர்க்கு என்ன தண்டனை, கொலைகாரர்களுக்கு என்ன தண்டனை என்று குற்றங்களையும் தண்டனைகளையும் வரிசைப்படுத்திச் சொல்கிறது கருட புராணம். ஆனால் மக்கள் இதைக் கேட்க அஞ்சுகிறார்கள். கருட புராணம் அமங்கலம், மரணத்தின்போது மட்டும் படிக்கத்தக்கது என்று கருதி அதனை ஒதுக்குகிறார்கள்.
மரணம்தான் மனிதர்களை அச்சுறுத்துகிறது. அந்த அச்சத்தில்தான் மதம் வேர் விட்டிருக்கிறது. மரணத்துக்குப் பின் மனிதனின் நிலை என்ன என்ற கேள்விதான் மனிதர்களை மதத்தில் ஏறச் செய்கிறது; மதச் சடங்குகளை ஆற்றச் செய்கிறது. கருட புராணம் சொல்லாத இந்தச் செய்தியைத் திருட புராணம் சொல்கிறது. மீண்டும் திருடர் மணியன் பிள்ளை:
“என்னுடைய மதமேது? எனக்கே தெரியாது. கேரளத்தின் மூன்று முக்கிய மதங்களையும் சேர்ந்தவன் நான். என்னுடைய பிறப்புக்குக் காரணமான தாயும் தந்தையும் இந்துக்கள் என்பதால் நானும் இந்து. மனைவி மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி என்னை இஸ்லாத்திற்கு மாறச் சொன்னார்கள். சரி, அப்பிடியே செய்வோம்.
கேடுகெட்ட வாழ்க்கையிலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றால் கிறிஸ்தவத்தில் சேர வேண்டும் என்றார்கள். பெந்தெகொஸ்தேவில் சேர்ந்தேன். பைபிள் படித்து சகோ. (சகோதரர்) ஆனேன். உண்மையில், வாழ்க்கையில் மதங்களுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? மதங்கள் அனைத்தும் மரணத்தை முன்னிறுத்தி நம்மை அவர்களுடன் (அதாவது, மதங்களாகிய தங்களுடன்) பிணைத்து நிறுத்துகின்றன.
எங்களை (அதாவது, மதங்களை) மறுத்தால் எதிர்காலத்தில் மய்யவாடியில் (இடுகாட்டில்) உனக்கு இடம் கிடைக்காது. உனக்கு மட்டுமல்ல, உன்னுடைய சந்ததியினருக்கும் கிடைக்காது. நீயோ உன்னுடைய தாய் தகப்பன்களோ செத்தால் கரயோகத்திலிருந்து (கரைக்கூட்டத்தின் / சாதிக் குழுமத்தின்) ஆட்கள் வரமாட்டார்கள். பொது மய்யவாடிக்குப் பிந்தைய இவர்களது வாதங்கள் பொருளற்றவையாகப் போய்விட்டன.”
மரணமற்ற பெருவாழ்வு
மரணம்தான் மனிதனை மதத்துடன் கோத்து வைக்கிறது. ஆகவே மதத்திலிருந்து மனிதனை விடுவிக்க நினைத்த திருமூலர், சித்தர்கள், வள்ளலார் போன்றவர்கள், மரணமிலாப் பெருவாழ்வு பேசினார்கள்:
சாகாத கல்வியே
கல்வி; ஒன்றேசிவம்
தான்என அறிந்த அறிவே
தகும்அறிவு; மலம்ஐந்தும்
வென்றவல் லபமே
தனித்த பூரண வல்லபம்;
வேகாத கால்ஆதி
கண்டுகொண்டு எப்பொருளும்
விளையவிளை வித்த தொழிலே
மெய்த்தொழில்அது ஆகும்;
இந்நான்கையும் ஒருங்கே
வியந்துஅடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உறவுஎலாம்
வல்லசித்து ஆகிநிறை
வானவர மேஇன்பம் ஆம்;
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபுஎன்று உரைத்த குருவே...
(திருவருட்பா, 6, நடராஜபதி மாலை, 28)
சாகாமல் இருக்கப் பயிலும் கல்வியே கல்வி. கடவுள் ஒன்றே என்று அறிந்த அறிவே அறிவு. நம் உயிரைப் பீடித்த ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் ஆகிய அழுக்குகள் ஐந்தையும் வெல்லும் வல்லமையே வல்லமை.
காற்றை, உயிரை, அமுதநீரை அழிய விட்டுவிடாமல் காக்கும் தொழிலே தொழில். இந்த நான்கையும் அடைந்து, உலகையெல்லாம் பெருங்காதலோடு நேசித்து வாழும் நிறைவாழ்வின் இன்பமே இன்பம். இதுதான் சுத்த சன்மார்க்க மரபு என்கிறார் வள்ளலார். ‘என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம்.’
(இறப்பொழிக…)கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago