உட்பொருள் அறிவோம் 09: ஆயிரம் தலை சர்ப்பத்தை அடக்குவது எப்படி?

By சிந்துகுமாரன்

மனிதர்களில் நான்கு வகைகள் இருப்பதாகக் கொள்ளலாம். அல்லது மனித வளர்ச்சியில் நான்கு நிலைகள் உள்ளன என்றும் இதைப் பார்க்கலாம்.

ஒன்று, ‘தனக்குத் தெரியாது; ஆனால் தனக்குத் தெரியாது என்பதே தனக்குத் தெரியாது.’ - இது முழு அறியாமை நிலை. இது மூடத்தனமான நிலை. இந்த நிலையில் இருப்பவர் கற்கக் கூடத் தகுதியில்லாதவர். ‘எனக்கு எல்லாம் தெரியும்,’ என்ற மூடத்தனத்தில் இருப்பவர். இவ்வாறான நபர்களை ஒதுக்கிவிடுவதே நல்லது, இவர்களிடம் வாதம் செய்ய வேண்டியதில்லை.

இரண்டாவது, ‘தனக்குத் தெரியாது; ஆனால் தனக்குத் தெரியாது என்பது தனக்குத் தெரியும்’. - இது அறியாமை பற்றிய விழிப்பு வந்துவிட்ட நிலை. இது குழந்தையைப் போன்றது. கற்பதற்கான தகுதி வந்துவிட்ட நிலை.

மூன்றாவது, ‘தனக்குத் தெரியும்; ஆனால் தனக்குத் தெரியும் என்பது தனக்குத் தெரியாது.’ - இது தூக்கத்தில் இருப்பது போன்ற நிலை. இந்த நிலையில் இருப்பவரை எழுப்பவேண்டும்.

நான்காவது, ‘தனக்குத் தெரியும்; தனக்குத் தெரியும் என்பதும் தனக்குத் தெரியும்.’ - இதுதான் முழு விழிப்பு நிலை.

பெரும்பாலான மனிதர்கள் முதல் நிலையில்தான் இருக்கிறோம். முதலில், ‘எனக்கு ஒன்றும் தெரியவில்லை,’ என்பது தெரியும்போது இரண்டாவது நிலைக்கு வருகிறோம். மூன்றாவது, நான்கா வது நிலைகளில் இருப்பவர் வெகு சிலர் மட்டுமே. மூன்றாவது நிலையில் இருப்பவரை எழுப்புவதுகூட நான்காம் நிலையில் இருக்கும் ஒருவரால்தான் முடியும். எந்த ஒரு தலைமுறையிலும் நான்காம் நிலையில் இருக்கும் மனிதர்கள் மிகவும் சொற்பமாகாவே இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமலேயேதான் இருப்பார்கள்.

முதல் நிலையில் இருந்து இரண்டாம் நிலைக்கு வருவதே  பெரும்பாலோருக்கு இயலாத காரியமாக இருக்கிறது. நம் ஆழத்தில் அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவான தளம் ஒன்று இருக்கிறது.  மனித மனம் இதுவரை கடந்து சென்ற அனுபவங்கள், அடைந்த அறிவு, கிடைத்த புரிதல், இவற்றின் சாரம் அங்கு இருக்கிறது. மனித வரலாற்றின் முழுப் புத்தகமும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.

தன்னை, தன் உண்மை நிலையை, தன் தன்மை இன்னது என்று இன்னும் உணராத உயிர்ச்சக்திதான், தன்னுணர்வு இல்லாத நிலையில் ஆழ்மனக் கட்டமைப்புகளின் இருளில் சிக்கிக்கொண்டு ஒழுங்கு முறையற்று இயங்குகிறது. நம்முள்ளிருந்து எழும் கோபம், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் நம் அடித்தளங்களிலிருந்து எழுந்து வருகின்றன. அவை நம் கோபம் அல்ல. நம் பயம் அல்ல. நம்முடைய பொறாமை அல்ல. நம்முடைய மனங்களின் வழியாக அவை வெளிப்படுகின்றன.

அறியாமையின் காரணமாக நம்மை அவற்றுடன் இணைத்துக்கொண்டு நம் தனிமனத்தின் வெளிப்பாடாக அவற்றை கருதித் துன்பப்படுகிறோம். நமக்குத் தெரியவில்லை என்பதை அறிந்து ஏற்றுக்கொண்ட பின்புதான் இந்த உண்மை நமக்குப் புரியவே முடியும். அதுவரை ஆழ்மனத்தில் சுழன்றடிக்கும் உணர்ச்சி வீச்சுக்களில் சிக்கி நாம் தவித்துக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட வழியேதுமில்லை.

இவ்வாறு அடிமன இருளில் சுழன்று நம்மை அலைக்கழிக்கும் சக்திகள்தான் காளிங்கன். நம் பிரக்ஞையின் ஓட்டம்தான் நதியின் ஓட்டம். அந்தச் சக்திகளின் பல்வேறு வெளிப்பாடுகள்தான் காளிங்கனின் நூற்றுக்கணக்கான தலைகள். அந்த விஷச் சக்திகளால் நம் பிரக்ஞை நதி நச்சுப்பட்டுப் போயிருக்கிறது. அதன் சீரான ஓட்டம் தடைப்பட்டுச் சுழல்களும் மடுக்களும் நிறைந்ததாக நம் வாழ்க்கை ஆகிவிட்டிருக்கிறது.

சரி, எப்படி இந்த நிலையிலிருந்து விடுபடுவது? என்ன விமோசனம்? 'நான்' என்று இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மனத்தினால், நினைவுகள் சார்ந்த மனச்சுயத்தினால், ஒன்றும் செய்ய முடியாது. ஆழ்மனச் சக்திகளின் முன்னால் நாம் ‘நான்’ என்று நினைக்கும் மேல்மனம் மிகவும் பலவீனமானது. ஒரு நொடியில் அந்தச் சக்திகள் நம் மனத்தைப் புறம் தள்ளி விட்டுத் தன் வேலையைக் காட்டிவிடும்.

அப்போது என்னதான் செய்வது? நூற்றுக் கணக்கான தலைகளுடன் விஷம் கக்கிய காளிங்கனைக் கிருஷ்ணர் அடக்கியதுபோல் நம் பிரக்ஞையில் தன்னுணர்வற்றுக் கூத் தாட்டம் போடும் ஆயிரம் தலைச் சர்ப்பமான அடிமனச் சக்திகளை அடக்க என்ன வழி?

சுத்தப்பிரக்ஞை தான் கிருஷ்ணன்

கிருஷ்ணன் என்பது என்ன? கிருஷ்ணன் என்பது முழுவிழிப்படைந்த அறிவுணர்வு அல்லது பிரக்ஞையின் குறியீடு. ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்றால் ‘சுத்தப் பிரக்ஞையின் முழுமை தன்னில் ஸ்திரமாக நிலைத்தவன்’ என்று பொருள். கிருஷ்ணன் என்று வெளியிலிருந்து யாரும் வரவேண்டிய அவசியமில்லை.

ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு, உடலுணர்வில் கவனத்தை நிறுத்தி, உடலைத் தளரவிட்டு, மூச்சின் கதியில் கவனத்தை இழையவிட்டு, நம் நினைவுகள் அனைத்தையும், அறிந்ததனைத்தையும் சில கணங்களுக்கு மனத்தின் பிடியிலிருந்து விட்டு அடங்கிவிட்டால், வெறும் ‘நான்’ என்ற உணர்வு மட்டும் மிஞ்சும். நினைவுச் சேகரத்தின் விவரங்கள் இல்லாமல் நம் பெயரோ, நாம் பிறந்த இடமோ, வருடமோ, அல்லது வேறெந்தத் தகவலோ நம் பிரக்ஞை யில் இருக்காது.

காரணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட அடிப்படைச் சுயவுணர்வு மட்டுமே மிஞ்சும். நினைவுகள் இல்லாத மனத்தில் கால உணர்வும் இருக்காது. அந்த ‘நான்’ உணர்வு, பிரபஞ்சப் பிரக்ஞையின் அம்சம். அந்த ‘நான்’ ஒரு ஆள் இல்லை.

நமக்குள்ளே நம் பிரக்ஞையின் அடித்தள மாக இருக்கும் ‘நான்’ என்னும் அந்த சுத்தப்பிரக்ஞைதான் கிருஷ்ணன். ‘எல்லாம் என்னிலிருந்து எழுகின்றன. அனைத்தும் மறுபடி என்னிலேயே வந்து விழுகின்றன,’ என்று அவன் கீதையில் சொன்னதற்குப் பொருள் இதுதான்: நமக்குள்ளே இருக்கும் 'நான்' என்ற உணர்வின் அடிப்படையில்தான் மனம் இயங்குகிறது.

அங்கிருந்துதான் எண்ணங்களும் உணர்ச்சிகளும் எழுகின்றன. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு எண்ணமும் தன்னை 'நான்' என்று நினைத்துக் கொள்கிறது. அப்படியான எண்ண 'நான்'கள், உலகப் பிரக்ஞைக்கே அடிப்படையான 'நான்' உணர்விலிருந்து எழுந்து மறுபடியும் அதிலேயே போய் விழுகின்றன.

எண்ணங்கள் ஒவ்வொரு கணமும் ‘நானிலிருந்து’ எழுந்து, இருந்து, விழு கின்றன. ஆனால் அடிப்படை 'நான்' உணர்வு எழுவதில்லை. விழுவதில்லை. எங்கும் போவதும் இல்லை. வருவதும் இல்லை. இந்தத் தத்துவத்தைத்தான் ‘போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே,’ என்று திருவாசகத்தில் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.

நமது அகச்சாரம்

மனம் அமைத்த வாழ்க்கைச் சித்திரத்தில் ஏணிகளில் ஏறிப் பாம்புகளில் இறங்கி நாம் ஊசலாடிக்கொண்டிருக்கிறோம். அந்தச் சித்திரத்தின் பின்னணியாக இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் காலமற்ற உணர்வுவெளிதான் நம் அகச்சாரம். அந்தச் சாரத்தின் தளத்தில் நாம் பிறப்பு-இறப்புக்கு அப்பாற்பட்டவர்கள்.

காலத்துக்கு அப்பாற்பட்டவர்கள். அம்மாதிரியான சுத்தப்பிரக்ஞையை நமக்குள் உணர்ந்து கொண்டால், அதன் விழிப்பில் சூரியனைக் கண்ட இரவென அடிமன இருள் காணாமல் போகும். பிறகு ஆயிரம் தலை நாகமான காளிங்கர்கள் ஆயிரம் பேர் வந்தாலும் காலை வெய்யிலில் பனித்துளிகள் போல் இல்லாமல் போவார்கள்.

உலகம் விழித்துக் கொள்ளும்

இன்று நம் வாழ்வில் நிறைந்திருக்கும் துன்பங்களின் முடிவு, நமக்குள்ளே அந்த சுத்தப் பிரக்ஞையை விழிக்கச் செய்வதில்தான் இருக்கிறது. அவ்வாறு விழித்துகொண்ட சுத்தப் பிரக்ஞை அடிமன இருளுக்குள் நுழையவேண்டும். கிருஷ்ணன் நதியின் ஆழத்துக்குள் நுழைந்ததுபோல் நுழைய வேண்டும்.

நம் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமில்லாமல், உலகம் தழுவிய அளவில் இன்று நடக்கும் வன்முறைகளும், கலகங்களும், போர்களும், உயிர்ப்பலிகளும் முடிவுக்கு வரவேண்டுமென்றால் அதற்கும் வழி இதுதான். மேலும் மேலும் பலரின் பிரக்ஞையில் இந்த விழிப்பு ஏற்பட ஏற்பட, உலகம் விழித்துக்கொள்ளும். மனித இனத்தின் அனைத்துவிதமான துயரத்துக்கும் இறுதியான முடிவு இதுதான். புதிய உலகத்தின் பிறப்பு வாசல் இதுதான்.

ஆழ்மன இருளில் புகுந்து அதை நீக்கி, உள்ளிருந்து வெளிப்பட்டு, மனத்தில் சுய விழிப்புடன் நிலைகொண்ட தன்னுணர்வுதான் காளிங்கனின்தலைமேல் நடனமாடும் கிருஷ்ணன்.

(சுய விழிப்பில் நிலை கொள்வோம்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்