முகம் என்பது முழு மூஞ்சிக்கு மட்டுமில்லாமல் அதிலே உள்ள வாய்க்கும் பேர். சம்ஸ்கிருதத்தில் வாய்க்குத் தனியாகப் பேர் கிடையாது. அத்தனை பேர்களையும் சொல்கிறதாகவும், பேச்சுக்கே கருவியாகவும் இருக்கிற வாய்க்குத் தனிப்பேர் இல்லாமல் முகம் என்றேதான் அதையும் சொல்ல வேண்டியிருக்கிறது! வேடிக்கையாக, தமிழிலே வாய்க்கு வாய் என்று பேர் இருந்தாலும் முகத்துக்குப் பேரே இல்லை. முகம் என்பது சம்ஸ்கிருத வார்த்தை.
மூஞ்சி என்பது பேச்சு வழக்கிலே மட்டுமுள்ள கொச்சைதான். இலக்கண – இலக்கிய வார்த்தை இல்லை. அதனாலே, அந்தக் காலத்தில் சம்ஸ்க்ருத கடிகையில் படிக்கும் வித்யார்த்திகளும் தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பரஸ்பரம் பரிகாஸம் பண்ணிக் கொள்வார்களாம். இவன் அவனை ‘முகம் இல்லாதவன்’ என்பானாம்.
அவன் இவனை ‘வாய் இல்லாதவன்’ என்று திருப்புவானாம்! பரிகாஸமென்றாலும் இந்த நாள் மாதிரி ஒருத்தருக்கொருத்தர் பாஷா த்வேஷத்தில் ஏசிக்கொண்டார்களென்று அர்த்தமில்லை. ‘Good-humoured banter’ என்கிறார்களே, அப்படி நல்லெண்ணத்தோடு சேர்ந்த ஹாஸ்ய உணர்ச்சியில் ஸ்வாதீனமாகக் கேலி பண்ணிக்கொள்வார்கள்.
முகம் என்றாலே வாய்தான் என்று சொல்ல வந்தேன். சுமுகம், நல்ல வாய் என்றால் எது நல்ல வாய்? நல்ல விஷயங்களை, ஸத் வித்யைகளைச் சொல்கிற வாய்தான் நல்ல வாய். அதனால் நல்ல வித்வானுக்கு சுமுகர் என்று பேர் உண்டு. சுமுகர் எனறால் கற்றறிந்தவர். இந்த அர்த்தத்திலேயும் பிள்ளையார் சுமூகர். அவர் நல்ல வாயை உடைய மஹா வித்வான். ப்ரஹ்மணஸ்பதி, ப்ருஹஸ்பதி என்று வேதங்களில் சொல்லப்படும் மகா மேதாவிக்கும் அவருக்கும் பேதம் கிடையாது.
அவருடைய அநேக ரூப பேதங்களில் ‘வித்யா கணபதி’ என்றே ஒருத்தருண்டு. 21 கணபதி பேதங்களைச் சொல்லி, ஒவ்வொருத்தருக்கும் ஒரு புஷ்பமாக 21 தினுசுப் புஷ்பங்களை அர்ச்சனை பண்ணும்படியாக சதுர்த்தி பூஜா கல்பத்தில் விதித்திருக்கிறது. அதிலே வித்யா கணபதி என்ற பேரைச் சொல்லி அவருக்கு ‘ரஸாள’ புஷ்பம் போடணும் என்று இருக்கிறது.
ரஸாளம் (ரஸாளு என்று பொதுவாகச் சொல்கிறது) தான் மாம்பழங்களுக்குள்ளேயே பரம மதுரமாக இருக்கப்பட்ட தினுஸு. வித்யை என்பது அப்படிப்பட்ட ஆத்ம மாம்பழம். “யார் லோகத்தை முதலில் சுற்றிக்கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு” என்று நாரதர் கொடுத்த பழத்தை வைத்துப் பரமசிவன் பந்தயம் நடத்தி அதிலே விக்நேச்வரர் ஜயித்துப் பெற்றுக்கொண்ட ஞானப்பழம் அந்த மாம்பழம்தான்!
சுமுகர் விநாயகர்
வித்வத், வித்யை, அதனால் அடையும் ஞானம் இவற்றை உடையவர் சுமூகர். யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த பிராணியாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்திற்குத்தான் அவசியமான சமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன.
ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்யாசமும் இருக்கிறது. கண்ணின் காரியமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற காரியத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக்கொள்வது அது. நாக்கு, பல், உதடு மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய்.
‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்கியமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.
கையின் ஸ்தானத்தில் தும்பிக்கை
யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்துக்கு அடையாளம். நாம் கையை மடித்துக்கொண்டுபோய் ஒரு காரியமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே [தன்னியற்கையாகவே] அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை சதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை.
அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆகாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்துவார்த்தம் இருக்கிறது.
எத்தனை வித்வத் இருந்தாலும் லொட லொடவென்று விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக்கொண்டிருக்காமல், அவசியமான சமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக்கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.
விக்நேச்வரர் நிஜமான சுமுகர்.
(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago