சூரியனைப் போற்றுவதென்பது
நீ உனது கண்களைப் போற்றிக் கொள்வதேயாகும்
-ஜலாலுதீன் ரூமி
வாழ்வு இன்னும் சற்று நீடிக்காதா என்பதே வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் அடிப்படை ஏக்கம். ஆனால், வாழ்வு இப்போதே முடியாதா என்ற எண்ணமே அபூபக்கர் அல் கத்தானியின் வாழ்வை முன்னெடுத்துச் சென்றது. 9-ம் நூற்றாண்டில் பிறந்து 10-ம் நூறாண்டில் மறைந்த அபூபக்கர் அல் கத்தானி சூபி ஞானிகளில் முக்கியமானவராக இன்றும் கருதப்படுகிறார்.
தனது வாழ்நாளில் ஒரு நொடியில் கூடத் தான் வாழ வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. இறையன்பில் கரைந்து, ஒன்றாகக் கலக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக, பேராசையாக இருந்தது. இறை வணக்கத்தை மட்டுமே தனது வாழ்வின் முழுநேரக் கடமையாக கொண்டிருந்த அபூபக்கர் அல் கத்தானி பாக்தாத்தில் பிறந்தார்.
அவரது குழந்தைப் பருவம் செல்வச் செழிப்பால் ஆசிர்வதிக்கப் படவில்லை. தந்தையின் அரவணைப்பும் அவருக்குக் கிடைக்கவில்லை. வறுமையை மீறி, அன்பையும் நற்குணங்களையும் ஊட்டி அபூபக்கரை அவருடைய அன்னை வளர்த்தெடுத்தார். நல்ல கல்வியும் அவருக்குக் கிடைத்தது. சிறுவயதிலேயே இறைவணக்கத்தில் அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்தது. அன்பும் அறிவும் தானென்ற அகந்தை கரைந்து பக்தி அதிகரித்தது.
தனியாக நிற்கும் துணிவு கிடைத்தவுடன், அவரது அன்னையிடம் சென்று, தான் மக்காவுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினார். தன்னைத் தனியே தவிக்கவிட்டுச் செல்லும் மகன் மீது வருத்தம் உள்ளுக்குள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், அபூபக்கரை மகிழ்ச்சியுடன் அவருடைய தாய் வழியனுப்பி வைத்தார். அபூபக்கரும் பயணத்தைத் தொடங்கினார்.
கனவில் வந்த அன்னை
பாலைவனத்தின் ஊடே எந்த பயமும் இன்றி அவர் பயணித்தார். முதல்நாள் இரவில் தூங்கும்போது, கவலையுற்ற அவருடைய அன்னையின் முகம், அவரது கனவில் வந்தது. திடுக்கிட்டு விழித்த அபூபக்கர் உடனடியாக அன்னையைக் காண ஓடினார். அவரை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த அவருடைய அன்னை, ‘என்ன ஆயிற்று?’ என்று கேட்டார்.
‘நான் மக்காவுக்குச் செல்லும்போது நீங்கள் வருந்தினீர்களா?’ என்று கேட்டார். “வயதான காலத்தில் என்னை விட்டுப் போகிறாயே” என்று வருந்தினேன் என்று அவர் கூறினார். அபூபக்கர் எதுவும் பதில் கூறாமல், அப்படியே அழுதபடி அமர்ந்துவிட்டார்.
அதன்பின், அவருடைய அன்னை உயிருடன் இருக்கும்வரை, அவரை விட்டு எங்கும் செல்லவில்லை. அன்னையை முறையாகக் கவனிப்பதையே தனது வாழ்வாக, ஆன்மிக நெறியாக அபூபக்கர் ஏற்றுக்கொண்டார். ‘கடமையைத் துறந்து ஓடுவது அல்ல ஆன்மிக வாழ்வு; கடமையை முடித்து வாழ்வைத் துறப்பதே உண்மையான ஆன்மிக வாழ்வு’ என்று இது குறித்து பின்னாளில் விளக்கம் அளித்தார்.
அன்னையின் மறைவுக்குப் பிறகு, உடனடியாக அபூபக்கர் மக்காவுக்கு சென்றார். மக்காவுக்குச் செல்லும்போது, மரணத்தின் வாயிலிலிருந்த ஒரு முதியவரைச் சந்தித்தார். நோயின் பிடியில் சிக்கி, நோய் தரும் களைப்பில் முதியவரின் உடல் வாடிக்கொண்டிருந்தது. ஆனால், அவரது முகமோ மகிழ்வின் பூரிப்பில் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது.
அபூபக்கருக்கு அது வியப்பாக இருந்தது. அவரது அருகில் எதுவும் பேசாமல், அபூபக்கர் அமர்ந்திருந்தார். பின்பு மெல்லிய குரலில் தயங்கியபடியே, ‘நோயின் வலியை மீறி எப்படி உங்கள் முகம் இவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது’ என்று கேட்டார். ‘ இறைவன் மீதான எனது காதல் அத்தகையது’ என்றபடி அந்த முதியவர் புன்னகைத்தார். அந்த வார்த்தைகள், அபூபக்கரின் வாழ்வை மாற்றியமைத்தன. மக்காவுக்குச் சென்றவர், அங்கேயே தங்கிவிட்டார்.
தண்ணீர் குழாயின் கீழே
தொழுகையும் குர்ஆனை ஓதுவதும் மட்டுமே அவரது வாழ்வாக மாறியது. 30 ஆண்டுக் காலம், கஃபாவில் இருந்து வரும் தண்ணீர் குழாயின் கீழ் அமர்ந்து தொழுதபடியே இருந்தார். ஒவ்வொரு நாளும், முழு குர்ஆனை ஓதி முடிப்பார். கஃபாவை சுற்றி வரும்போது மட்டும், 12,000 தடவை குர்ஆனை ஓதி முடித்துள்ளார். இறை பக்தியில் அவரது முகம் பிரகாசமாக ஒளிர்ந்ததன் விளைவாக, ‘சூபியின் ஒளிவிளக்கு’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
ஒருமுறை தொழுகை முடிந்தபின், மெய்மறந்த நிலையில் மக்காவில் உள்ள கஃபாவை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தார். அப்போது அங்கிருந்த ஒட்டகம் ஒன்று அவரது முகத்தில் வேகமாக முட்டி அவரைக் கீழே தள்ளியது. கண் இமையில் அது முட்டியதால், வலியில் துடித்துக் கதறினார். அப்போது ‘இறைவனை உன்னுள் பார்த்து, அவனிடம் இருந்து வரும் சேதிகளைக் கேட்பதற்குப் பதிலாக, அவனுடைய வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது முறையா?’ என்று ஒரு அசரீரி அவரது காதில் ஒலித்தது. அதன்பின் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் அபூபக்கர் வேடிக்கை பார்க்கவில்லை. அவரது மெய்மறந்த நிலையும் இறைவணக்கத்திலேயே கழிந்தது.
தனக்கென்று எதையும் சேர்க்காமல், தனக்கென்று எதையும் விரும்பாமல், எதுவுமற்று இருப்பதற்காக வருந்தாமல், எவர் இருக்கிறாரோ அவரே உண்மையான துறவி என்று தன் சீடர்களிடம் அபூபக்கர் அடிக்கடி கூறுவார். அந்தக் கூற்றுக்கு ஏற்றப்படியே வாழ்ந்த அவர் 934-ம் ஆண்டில் இவ்வுலகிலிருந்து மறைந்தார்.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago