சூபி வழி 07: அஃபீஃப் என்றால் ‘எளிமையானவர்’

By முகமது ஹுசைன்

உன் எல்லைகளே

உனது தேடல்கள்

- ஜலாலுதீன் ரூமி

இறையன்பின் ருசியைப் பருகி, அதன் மகோன்னதத்தை உணர்ந்தவர்களுக்கு, இந்த வாழ்வின் அர்த்தம் முற்றிலும் வேறானது. உலகின் வளங்கள் அனைத்தும் அவர்களின் காலடியில் கிடந்தாலும், அவற்றை துச்சமெனக் கடந்து செல்வார்கள். உலகின் இன்பங்கள் அனைத்தும் அவர்களுக்காக வரிசையில் நின்றாலும், அவற்றை ஏறெடுத்தும் பார்க்காமல் விலகிச் செல்வார்கள்.

அத்தகைய உன்னத இறையன்பின் ருசியைப் பருகி, இந்த உலகையும் அதன் வளத்தையும் துறந்து இறையன்பில் மூழ்கி திளைத்த ஞானிகளில் ஒருவரே இப்னு அஃபீஃப்.

ஈரானில் ஓர் அரசக் குடும்பத்தில்  882-ம் ஆண்டு அஃபீஃப் பிறந்தார். செழிப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தில் செல்லப் பிள்ளையாகத் திகழ்ந்தார். இயற்கையிலேயே அறிவில் சிறந்து விளங்கிய அவருக்கு, உயர்வான கல்வி போதிக்கப்பட்டது. அவருடைய குழந்தைப்பருவ வாழ்வு, இறையன்பின் தேடலிலேயே கழிந்தது.

கேளிக்கை களைக் காட்டிலும் இறைவணக்கமே அவருக்கு மிகுந்த மகிழ்வை அளித்தது. கல்வியோடு சேர்த்து அரசு நிர்வாகத்திலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், மக்களை ஆள்பவராக இருப்பதைக் காட்டிலும், இறைவனுக்குச் சேவகனாக இருப்பதே அவரது விருப்பமாக இருந்தது.

ஆன்மிக தேடலில் திளைத்த அவருக்கு, தினமும் நோன்பு இருப்பது வாடிக்கையானது. நோன்பு திறக்கும்போது, ஏழு உலர் திராட்சைகளை  மட்டும் சாப்பிடுவதே அவரது வழக்கம்.  ஒருமுறை நோன்பு திறக்கும்போது, அவரது சேவகன், அவருக்கு எட்டு உலர் திராட்சைகளை அளித்துவிட்டார்.

மெய்மறந்த நிலையில், அஃபீஃபும் அவற்றைச் சாப்பிட்டுவிட்டார். சுயநினைவுக்குத் திரும்பிய அஃபீஃபுக்கு ஏதோ ஒன்று வித்தியாசமாகப்பட்டது. வயிறும் சற்று வலித்தது. வழக்கத்தைவிட அதிகமாக உணவு உண்டுவிட்டோமோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது.

அஃபீஃபுக்கு ஏற்பட்ட குமட்டல்

“எத்தனை திராட்சையை எனக்கு அளித்தாய்” என்று சேவகனிடம் கேட்டார். ”மன்னித்துவிடுங்கள் எஜமானே. உணவின்றி நீங்கள் வாடுவதையும் உங்கள் உடல் நலிவதையும், என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் உங்களுக்குக் கூடுதலாக ஒரு திராட்சையை அளித்துவிட்டேன்” என்று அழுதவாறு அந்தச் சேவகன் சொன்னார்.

”உண்மையான நண்பனாக நீ இருந்திருந்தால், நீ எனக்கு ஆறு திராட்சைகளை மட்டுமே கொடுத்திருப்பாய். ஆனால், எட்டு திராட்சைகளைக் கொடுத்ததன்மூலம், நீ உன்னை எதிரி ஆக்கிவிட்டாய். மன்னித்துவிடு என்னை” என்று கூறி அவரை வேலையிலிருந்து அஃபீஃப் நிறுத்திவிட்டார். அதன்பின் வாழ்நாள் முழுவதும், தனக்கு வேண்டியதை தானே தனக்கு எடுத்துக் கொண்டார்.

ஒரு பயணத்தின்போது. அவரது முகத்தில் தென்பட்ட பசியின் வாட்டத்தை அறிந்த ஒரு சூபி ஞானி, அஃபீப்பை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரது வீட்டில் அஃபீஃபுக்காக உணவு சமைக்கப்பட்டது. சமையல் முறையிலோ இறைச்சியின் தரத்திலோ, ஏற்பட்ட குறையால் அந்த வீட்டில் பரவிய நாற்றம், அஃபீஃபுக்கு குமட்டலை ஏற்படுத்தியது.

எதுவும் சொல்லாமல், அந்த வீட்டிலிருந்து தனது சகாக்களுடன் அஃபீஃப் வெளியேறி, தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவரது போதாத காலம், பாதை மாறிச் சென்றுவிட்டார். பசி தாங்க முடியாமல், வழியில் தென்பட்ட இறைச்சி கடைக்குத் தனது சகாக்களுடன் சென்றார். அங்கு நாய் இறைச்சி மட்டுமே விற்கப்பட்டது. அங்கு ஒரு நாயை அவரது சகாக்கள் வாங்கி சமைத்தனர்.

பசியின் உந்துதலில், நாய் இறைச்சியை உண்ணச் செல்லும் வேளையில், அந்த சூபி ஞானியின் நினைவு வந்தது. அந்த சூபி ஞானியின் வீட்டை நோக்கி அஃபீஃப் ஓடினார். வீட்டில் இருந்த சூபி ஞானியின்முன் அஃபீஃப் மூச்சிரைக்க நின்றார். கண்களில் நீர் மல்க, அவரிடம் மன்னிப்பு கோரினார். அந்த ஞானியோ புன்முறுவலை உதிர்த்துவிட்டுக் கதவைத் தாழிட்டுச் சென்றார்.

ஒருமுறை மக்காவுக்கு செல்லும் போது, ஆழ்ந்த தொழுகையிலிருந்த ஒரு இளைஞரைச் சந்தித்தார். அந்த இளைஞரின் கண்கள் மூடியிருந்தன. அவரது தலை மக்காவின் திசையை நோக்கி இருந்தது. உதடுகள் ஓதிக்கொண்டு இருந்தன. அவர் கண் திறப்பதற்காக, அஃபீஃப் காத்துக் கொண்டு நின்றார். கண் திறந்தவுடன், அவருக்கு அஃபீஃப் வணக்கம் சொன்னார்.

“இந்த உலகம் மிகவும் சிறியது. நமது என்று நாம் கருதுவது, அதில் ஒரு சிறிய புள்ளியே. அந்தச் சிறிய புள்ளியே நமது வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது. அஃபீஃப் அவர்களே, உங்களுக்கு மிகுந்த நேரம் உள்ளது. அதனால், காத்திருந்து வணக்கம் சொல்லி, நேரத்தை வீணடித்துக்கொண்டு நிற்கிறீர் கள்” என்று சொல்லியவாறு மீண்டும் அந்த இளைஞர் கண்களை மூடினார்.

திரண்டுவந்த மக்கள் கூட்டம்

அந்தப் பதில் அஃபீப்பை வெட்கத்தில் தலைகுனிய வைத்தது. நேரத்தின் அருமையை உணர்ந்த அஃபீஃப். அதன்பின் ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், மெய்ஞான தேடலில் ஈடுபட்டார். தனது வாழ்நாளில் ஆறுமுறை மக்காவுக்கு சென்றார். பல நாடுகளுக்கு பிரயாணம் செய்தார்.

இனிமையான குரலில் அவர் உரையைக் கேட்க, அவர் செல்லுமிடமெல்லாம் மக்கள் அலையெனத் திரண்டுவந்து நின்றனர். ’அஃபீஃப்’ என்றால் ‘எளிமையானவர்’ என்று அர்த்தம். தன்னுடைய வாழ்வு முழுவதும் எளிமையானவராகவே வாழ்ந்த அவர், 982-ல் தனது நூறாவது வயதில் இவ்வுலகைவிட்டு மறைந்தார்.

(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர்  தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்