உட்பொருள் அறிவோம் 04: ப்ரணவத்தின் பொருள் ஏன் தெரியவில்லை?

By சிந்துகுமாரன்

பரமனின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் போய்ச் சேர்ந்து, கார்த்திகைப் பெண்டிரின் கையில் கார்த்திகேயனாக வளர்ந்தது. ஒரு நாள் பிரும்மாவிடம் சென்று நின்றான் சிறுவன். ‘பிரும்மதேவரே, உங்களுக்குப் ப்ரணவத்தின் பொருள் தெரியுமா?' என்று கேட்டான்.

பிரும்மா விழித்தார். அவருக்குப் ப்ரணவத்தின் பொருள் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அதுவரையில் அவருக்குத் தோன்றியதில்லை. அவருடைய படைக்கும் தொழிலுக்குப் ப்ரணவத்தின் பொருளை அறிந்துகொள்வது அவசியப்படவில்லை.

முருகன் பிரும்மாவைச் சிறையில் அடைத்தான். படைப்பு நின்றுபோயிற்று. அனைவரும் பரமனிடம் சென்று முறையிட்டனர். அவர் முருகனை அழைத்து விசாரித்து உண்மையை அறிந்துகொண்டு, ‘உனக்கு அதன் பொருள் தெரியுமா?' என்று கேட்கிறார். பாலகன் தெரியும் என்கிறான். ‘எங்கே சொல் பார்க்கலாம்,' என்று கேட்கிறார் பரமன்.

அதுவரையில் அவர் முருகனுக்குப் ப்ரணவத்தின் பொருளைக் கற்பித்ததில்லை. ‘சொல்கிறேன். ஆனால் எனக்குக் கீழே சீடனாக அமர்ந்து பணிவுடன் நீங்கள் கேட்கவேண்டும்,' என்று நிபந்தனை விதிக்கிறான் சிறுவன். பரமனும் புன்சிரிப்புடன் கைகட்டிக் கீழே அமர்ந்து கேட்கிறார். சிறுவன் ஸ்வாமிநாதனாக இருந்து பரமனுக்குப் ப்ரணவத்தின் பொருளை உபதேசிக்கிறான். இதுதான் கதை.

பேரறிவான பரமனின் பணிவு

கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அது சரி, பிரும்மாவுக்கு ஏன் ப்ரணவத்தின் பொருள் தெரிய வில்லை? சிறுவனான முருகனுக்கு அது எப்படி யாரும் கற்பிக்காமலேயே தெரிந்தது? அனைத்தையும் அறியும் பேரறிவான பரமன் ஏன் பணிவுடன் அதைக் கேட்டுக்கொள்கிறார்? என்ன அர்த்தம் இதற்கு?

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது சிவன், முருகன், பிரும்மா, விஷ்ணு என்பதெல்லாம் நாம் இன்னதென்று இன்னும் அறிந்து கொள்ளாத இந்த அகிலத்தின் - பிரபஞ்சத்தின் - அம்சங்கள். தேவர்கள், மனிதர்கள், பூதகணங்கள், என்பவையும் அவ்வாறே. இவையெல்லாம் குறியீடுகள்.  இந்த அகிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதன் அடிப்படை யான ‘பிரக்ஞை’ என்னும் விஷயத்தைக் கணக்கில் கொண்டாக வேண்டும்.

சிருஷ்டி, பிரக்ஞையில் நடக்கிறது. யார் பிரக்ஞையில்? பரமனின் பிரக்ஞையில் என்று சொல்லலாம். ஆனால் அதே நேரம் நம் ஒவ்வொருவருடைய பிரக்ஞையிலும்தான். உலகம் எங்கே இருக்கிறது? நம் உடலுக்கு வெளியில் இருந்தாலும், நம் பிரக்ஞைக்கு வெளியில் இல்லை. உலகம் யாரோ ஒருவரின் பிரக்ஞையில்தான் இருக்க முடியும். யாருமே பார்க்காத உலகம் என்று எதுவுமில்லை.

சிருஷ்டி பல நிலைகளில் நடக்கிறது. எல்லோரும் காணக்கூடிய இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டியின் கடைசி நிலை. அதைத்தான் பிரும்மா உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இதில் உள்ள அண்டங்களையும், மரம், செடிகொடிகளையும், உயிர்களையும், ஜீவித்து இருக்கும் அனைத்தையும், அவற்றின் உள் இயக்கங்களையும்தான் அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.

அது அவருக்கு முன்பே

ஆனால், அதற்கு முன்னாலேயே அவர் இருக்கிறார், இல்லையா? அவருக்கும் முன்பே பரமன் காலமற்று இருந்துகொண்டிருக்கிறார். பிரும்மாவுக்குப் ப்ரணவத்தின் பொருள் தெரியவில்லை என்றால் ‘அது' அவருக்கு முன்பே இருந்திருக்க வேண்டும். பிரபஞ்சத்தின் படைப்புக்கு ‘அது' தேவைப்படவில்லை என்றால் ‘அது' பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

அது சரி, ஆனால் முருகனுக்கு ‘அது' எப்படித் தெரிந்திருக்கிறது? பரமனின் நெற்றிக் கண்ணிலிருந்து நேரடியாகத் தோன்றியவர் அவர். பிரும்மாவினால் படைக்கப்பட்டவர் அல்ல.  படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஜீவன் அல்ல முருகன்.

தோற்றம் கொண்டு மறையக்கூடிய பிரபஞ்சம் தோன்றியபோதுதான் காலம் தோன்றியது. அந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு அநாதியான ப்ரணவத்தின் பொருள் தெரியவேண்டியதில்லை. ஆனால் முருகன் காலத்தின் எல்லைக்கு வெளியே உருவாகி அங்கேயே நிலைகொண்டவர்.

அப்படியானால் ‘பிரும்மா' என்பது யார்? அதன் உட்பொருள் என்ன? ஈசன் தனக்குள் தியானத்தில் உள்முகமாக ஆழ்ந்துபோகும்போது அவருக்கு ‘வெளியே’ என்று ஏதும் இல்லாமல் போகிறது. நமக்கு புறம்-அகம் என்று இருப்பதைப்போல் ஈசனுக்குக் கிடை யாது. எல்லை ஏதுமற்ற ஈசனுக்குப் புறம் என்று ஒன்று எவ்வாறு இருக்க முடியும்? பிறகு ஈசனுக்கு உள்முகம், வெளிமுகம் என்பது என்ன?

தலையணை உறையைத் திருப்புவதுபோல் அகமே புறமாகிறது. பிரும்மா தோன்றுகிறார். பிரபஞ்சம் தோன்றுகிறது. பன்னெடுங் காலத்துக்கு நிலைக்கிறது. பிறகு புறம் மீண்டும் அகமாகிறது. அனைத்தும் உள்வயமாகிப் போகிறது. பிரபஞ்சமே இல்லாதிருக்கும் நிலை ஏற்படுகிறது. அதைத்தான் நாம் பிரளயம் என்கி றோம். அந்த நிலையில் பிரும்மாவே கிடையாது என்பதுதான் உண்மை.

ஓங்காரம் மட்டுமே நிலவுகிறது

பிரளயத்தின்போது பிரபஞ்சம் முழுமையாக ஈசனின் அகத்தில் அடங்கிப்போகிறது. பிரும்மாவும் அழிவற்ற பரம்பொருளில் முற்றிலும் அடங்கிப் போகிறார். ஈசனின் தியானத்தில் மிஞ்சியிருக்கும் ஒரே விஷயம் ‘ப்ரணவம்’ ஒன்றுதான். ‘ஓம்' என்னும் ஓங்காரம் மட்டும் அங்கே காலவெளியற்று, முதலும் முடிவுமற்று, தோற்றமும் மறைதலும் அற்று, உள்வெளியற்று ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.

வேறெதுவும் இல்லை. பிரபஞ்சம் இல்லை. உலகம் இல்லை. மனிதர், விலங்குகள், செடிகொடிகள், மலைகள், மேகங்கள், வானம், மனம், தான், நான், நீ, அவன், அவள், அது என்று எதுவும் இல்லை. எதுவும் இல்லை. ஓங்காரம் மட்டும் நிலவுகிறது.

யார் கேட்டுக்கொண்டிருக் கிறார்கள் அந்த ஓங்காரத்தை? ஈசன் மட்டும் தன் உள்ளே நிலவும் எல்லையற்ற பரமாகாசத்தில் அந்த ஓங்காரத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். உருவமற்று, அந்த ஓங்கார ஸ்வரூபனாகவே இருந்து, தன்னையே கேட்டுக் கொண்டிருக்கிறான் ஈசன்.

ப்ரணவம் ‘காலம்-வெளி’ என்னும் எல்லைக்குட்பட்ட ‘உலகம்’ தோன்றுவதற்கு முன்னாலேயே இருந்துகொண்டிருக்கிறது. எப்போதும் பிரபஞ்சத்தின் அடிநாதமாக, வெளித்தெரியாமல் அது ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான்  பிரபஞ்சத்தைப் படைப்பதற்கு பிரும்மாவுக்கு அதுபற்றிய அறிதல் அவசியப்பட வில்லை.

பரமன் தியானத்திலிருந்து விழித்துக்கொள்கையில் உள்முகமாக இருந்த அவரது பிரக்ஞை வெளி முகமாகத் திரும்புகிறது. நிர்க்குணப் பிரும்மமாக இருந்தது, சற்குணமாக மலர்ச்சி கொள்கிறது. அந்த சற்குணப் பிரும்மம்தான் நாராயணன். அவருடைய மையத்திலிருந்து, நாபியிலிருந்து, தோன்றிய முதல் 'நான்'தான் பிரும்மா! அதிலிருந்துதான் மற்ற ‘நான்'கள் எல்லாம் தோற்றம் கொள்கின்றன. பிரபஞ்சம் உருக்கொள்கிறது.

சிவனின் ஆனந்தம்

ஆனால் சிறுவன் முருகனுக்கு அது எப்படித் தெரிந்திருக்கிறது? அவன் ஈசனின் தியானத்தில் எழுந்த ஜ்வாலையிலிருந்து தோன்றியவன். ப்ரணவத்தின் சாரம் அவன். அவனுக்குத் தெரியாமல் போகுமா ப்ரணவத்தின் பொருள்?

அது சரி, ஈசனுக்கு ஏன் ப்ரணவத்தின் உட்பொருளை அவன் போதிக்கிறான்? அவருக்குத் தெரியாதா அது? அவரும் ஏன் அதைக் கைகூப்பிப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்?

ஈசனுக்குத் தெரியும். ஈசன் ப்ரணவத்துக்கும் அப்பாற்பட்டவர். அவரிடமிருந்துதான் ‘அது' தோன்றுகிறது. ஆனால் ஈசனுக்கு அது தெரியும் என்று முருகனுக்குத் தெரியாது! ஏனெனில் அவன் தோன்றுவதற்கு முன்னாலேயே ‘அது' இருந்துகொண்டிருக்கிறது. சரி, ஈசன் ஏன் அதை முருகனிடமிருந்து கேட்டுக் கொள்கிறார்? அங்குதான் அற்புதமான அழகு இருக்கிறது! ஈசன் அதுவரையில் யாரிடமிருந்தும் ப்ரணவத்தின் பொருளைக் கேட்டு அறிந்ததில்லை.

தனக்கு வெளியில் ஒருவரிடமிருந்து அப்போதுதான் முதன்முறையாக அவர் அதைக் கேட்கிறார். அந்த ஆனந்தம்தான் அவரை முருகனிடம் வணங்கி நின்று, பணிவுடன் அதைக் கேட்க வைக்கிறது!

உண்மையில் இது நம் கதை! ஆமாம். நம் ஒவ்வொருவரின் கதை இதுதான். ஈசன் நமக்கு வெளியில், படைக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சத்தில், எங்கோ வெகுதூரத்தில் எங்கும் இல்லை. நமக்கு உள்ளே முடிவற்று விரியும் நம் அகவெளியில் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருடைய அகவெளியில்தான் நாமும் இந்தப் பிரபஞ்சமும் நிலைகொண்டிருக்கிறோம்.

அந்த அகவெளியில் மனம் அடங்கி, மனத்தைக் கடந்த 'நான்'(பிரும்மா) அடங்கி, குணங்கள் எல்லாம் அடங்கி, நம் உண்மை ஸ்வரூபமான தூய பிரக்ஞை மட்டுமே துல்லியமாக நிலைத்திருக்கும்போது உள்ளே ஓங்காரம் மட்டும் நிலைகொண்டு கேட்டுக்கொண்டிருக்கும். அப்போது ப்ரணவத்தின் பொருள் புரியும்.

(பொருள் புரியும்…விரியும்)
கட்டுரையாசிரியர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

42 mins ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்