மூன்று வரிகளில்
முடித்து விடலாம்
என் வாழ்வின் கதையை…
பச்சையாய் இருந்தேன்
சமைக்கப்பட்டேன்
சாப்பிடப்பட்டேன்
- ஜலாலுதீன் ரூமி
‘நான்’ எனும் அகங்காரத்தைத் துறப்பதைவிட பெருந்துறவு எதுவுமில்லை. ‘நான்’ தொலைந்தால்தான், ‘அவன்’ வருவான், தெரிவான், தன்னை நம்முள் நிரப்புவான். அகங்காரத்தைத் தொலைப்பதையே துறவிகள் தமது வாழ்நாளின் கடமையாய். ஆன்மிக வாழ்வின் லட்சியமாய் கொண்டிருப்பார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய சூபி ஞானியான அபூ பக்ர் ஷிப்லியும் இதற்கு விதிவிலக்கல்ல.
வளமும் அதிகாரமும் ஒருங்கே இழைந்தோடிய குடும்பத்தில் ஷிப்லி பிறந்தார். ஷிப்லியின் தந்தை கலீபாவின் அரண்மனையில் உயர் பதவியில் இருந்தார். சிறுவனாக இருக்கும்போதே குர்ஆனைப் படித்து முடித்தார். ஆன்மிக வாழ்வின் ஒளியைக் காட்டும் மார்க்கக் கல்வியைப் படித்தார். இந்த நிலையில், தமாவந்த் மாநிலத்தின் ஆளுநராக ஷிப்லி நியமிக்கப்பட்டார்.
அதிகாரத்தின் போதை
ஷிப்லியின் தன்னலமற்ற சேவை அவரது புகழை நாடெங்கும் பரப்பியது. மட்டற்ற புகழும் கட்டற்ற அதிகாரமும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவையும் ஷிப்லியின் ஆன்மிக ஈர்ப்பைச் சற்றே நீர்த்துப் போகச் செய்தன. இந்த நிலையில், பாக்தாத்தின் கலீபா, ஷிப்லியையும் நாட்டில் திறன்பட செயலாற்றிய பிற ஆளுநர்களையும் அழைத்துக் கௌரவித்தார். கலீபா அனைவருக்கும் பட்டாடைப் போர்த்தி உயரிய பரிசுகளை அளித்தார். ஷிப்லியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.
மன்னர் பட்டாடைப் போர்த்தும்போது, ஒரு ஆளுநருக்குத் தும்மல் வந்துவிட்டது. தன்னை மறந்து, தனது மூக்கை அந்த விலையுர்ந்த பட்டாடையால் அந்த ஆளுநர் துடைத்துவிட்டார். அது தன்னை அவமானப்படுத்தும் செயல் என்று மன்னர் கருதினார். தான் அளித்த பரிசுகளையும் ஆளுநர் பதவியையும் அவரிடமிருந்து பறித்து, சிறையில் தள்ள, மன்னர் உத்தரவிட்டார்.
‘வெறும் பட்டாடையை அளித்த மன்னருக்கே அதன் மீது ஏற்பட்ட அசுத்தம் இந்த அளவு சினத்தை ஏற்படுத்தும் என்றால், இந்த உடலையும் வாழ்வையும் நமக்கு அளித்தவருக்கு, அவற்றின் மீது நம்மால் ஏற்றப்படும் அசுத்தங்கள் எந்த அளவு சினத்தை ஏற்படுத்தும்’ என்ற ஷிப்லி எண்ணினார். இருக்கையிலிருந்து எழுந்தவர், நேராக கலீபாவிடம் சென்றார். அவர் அளித்த பரிசுகளைத் திருப்பி கொடுத்தார். ’என்ன ஆயிற்று உமக்கு?’ என்று கலீபா கேட்டு முடிக்கும் முன்னே, ஆளுநர் பதவியையும் துறப்பதாக அறிவித்து, கலீபாவின் கேள்வியை முடித்து வைத்தார்.
அந்தக் காலகட்டத்தில் சூபி ஞானத்தின் சிகரமாக விளங்கிய ஜூனைத்திடம் சென்று ஷிப்லி அடைக்கலமானார். தனக்கு ஆன்ம ஞானத்தைப் புகட்டுமாறு அவரிடம் கண்களில் நீர் மல்க ஷிப்லி வேண்டி நின்றார். ’எப்போது ஆன்மிக கடலில் மூழ்கி, உன்னுள் இருக்கும் அந்த ‘நானை’ அழிக்கிறாயோ, அப்போதுதான் உன்னுள் ஆன்ம ஞானம் சுரக்கும்’ என்று ஜுனைத் கூறினார். பின் ஷிப்லியை ஓர் ஆண்டு கற்பூரம் விற்றுவருமாறு ஜுனைத் பணித்தார்.
ஓராண்டு கற்பூரம் விற்றபின் மீண்டும் ஜூனைத்தை ஷிப்லி சந்தித்தார். ‘கற்பூரத்தை விற்றது உனது மனத்தில் பெருமையைப் பெருக்கெடுத்து ஓடச் செய்துள்ளது’ என்று கூறி, ஷிப்லியை ஓராண்டு யாசகம் எடுக்குமாறு ஜுனைத் பணித்தார். தெருத் தெருவாக அலைந்து ஷிப்லி பிச்சை எடுத்தார். யாரும் ஷிப்லிக்கு பிச்சையிடவில்லை. பசியில் வாடியபடி ஓராண்டுக் காலத்தைக் கழித்து முடித்தபின், ஜூனைத்தை மீண்டும் சந்தித்தார்.
‘உன்னால் பிச்சைகூட எடுக்க முடியவில்லை. இதுதான், உனது உண்மையான மதிப்பு. உண்மை இப்படி இருக்க, நீ அதிகாரத்தின் மீதும் அங்கீகாரத்தின் மீதும் புகழின் மீதும் மோகம் கொள்கிறாய். அதற்காகப் பெருமையும் படுகிறாய்’ என்று ஜுனைத் கூறினார். கண்களில் நிரம்பிய நீரால் பார்வை மறைந்து, தலை கவிழ்ந்து நின்ற ஷிப்லியைப் பார்த்து, மீண்டும் ஓர் ஆண்டு பிச்சை எடுத்துவருமாறு ஜூனைத் பணித்தார்.
அகங்காரத்தை முற்றிலும் இழந்திருந்த ஷிப்லிக்குப் பலர் தானம் வழங்கினர். தனக்குத் தானமாகக் கிடைத்த பொருட்களை, தினமும் ஜூனைத்திடமே வந்துகொடுத்தார். ஓராண்டின் முடிவில், ‘இப்போது உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று ஷிப்லியிடம் ஜூனைத் கேட்டார். “கடவுளின் படைப்புகளிலேயே மிகவும் தாழ்ந்தவனாக என்னை உணர்கிறேன்” என்று ஷிப்லி பதிலளித்தார்.
ஷிப்லியின் கண்களை உற்றுப்பார்த்து, ‘இனி உன் ஆன்மிக பயணத்தை நீ தனியாக மேற்கொள்ளலாம்’ என்று ஜூனைத் கூறினார். அதன்பின், இவ்வுலகில் வாழும்வரை, அகங்காரம் அற்றவராக, இறைமையில் மூழ்கி தன்னைத் தொலைத்தவராகவே ஷிப்லிவ வாழ்ந்தார். இன்றும் எழுத்து வடிவில் அவர் நம்மிடையே வாழ்கிறார்.
(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago