சலசலத்து ஓடுவதால் நீருக்குப் பெயர் சலம்; சலசலக்காமல் நிலைகுத்தி நிற்பதால் மலைக்குப் பெயர் அசலம். அவ்வாறே, சரசரத்து அசைகின்றவற்றுக்குப் பெயர் சரம் (சருகு என்பதும் அமையும்); அசைய முடியாதவற்றுக்குப் பெயர் அசரம். அசைகின்றவை, அசையாதவை இரண்டையும் இணைத்துச் சராசரம் என்பது வழக்கம்.
சரம் என்பது இடைவிடாது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்டதும் ஆகும்—நாம் தொடுத்த முல்லைச் சரமும், தொடையாகவே தோன்றுகின்ற சரக் கொன்றையும்போல; வில்லிலிருந்து தொடுக்கின்ற அம்புகள்போல; ஒன்றோடு ஒன்றாகக் கோக்கப்பட்டிருக்கிற சர விளக்குப்போல;
தங்கத்தில் வைரங்கள் தொடுத்துக் கழுத்துக்கு அணிகிற கண்ட சரம்போல; பாடுகையில் ஏழிசைச் சரம் தொடுத்துப் பாடும் சரளி வரிசைபோல; பேசுகையில் தங்குதடையில்லாமல் தொடுத்துப் பேசுவது சரளமான பேச்சு ஆவதைப்போல; தொடுத்துக் கிடக்கும் சரசரப்புச் சிறுகற்கள் சரளைக் கற்கள் ஆவதைப்போல.
மூச்சு சரசரத்து இயங்குவதாலும், இடையறவுபடாமல் அடுத்தடுத்துத் தொடுக்கப்படுவதாலும், அது சரம். அதை ஒருங்குவிப்பது சர ஓகம்.
கடவுளைத் தேடித் திரிகிற உலகம், எப்போதும் கடவுளைப் பிறர் திறத்தால் கண்டுகொள்ள முயல்கிறது; ஆகவே போதனைகளையும் போதகர் களையும் நாடுகிறது. கடவுளைப் பிறர் திறத்தால் கண்டுகொள்வதைக் காட்டிலும் தன் திறத்தால் கண்டுகொள்க என்பது தன்-திற மரபாகிய தந்திர மரபு. புறத்தில் தேடுகிற ஒருவனை அகத்தில் தேடச் சொல்லி அவனை அவனுக்குள் இறக்கிவிடத் தந்திர மரபு கண்டுகொண்ட தந்திரந்தான் சர ஓகம்.
என்னைத் தேடுகிறாயோ?
பக்கத்திலேயே இருக்கிறேன்,
உன் தோள் உரசிக்கொண்டு.
கோவில்களில் தேடாதே!
அருள் வேண்டும் பொழிவுகளில்,
போற்றி இசைக்கும் பாடல்களில்,
காலை மடக்கித்
தோளைச் சுற்றும் வேலைகளில்,
மரக்கறி உண்ணும்
பெருமிதப் பழக்கத்தில் —
எங்கும் காணமாட்டாய்!
உண்மையாகவே தேடுகிறாய் என்றால்,
உடனே காண்பாய் —
காலத்தின் கணச் சிறு வீட்டில்!
மாணவ! சொல் எனக்கு!
கடவுள் என்பதென்ன?
மூச்சின் மூச்சு.
-என்று கபீரின் பாடல் ஒன்று.
காலத்தின் கணச் சிறு வீடு! எது? உடம்பே அல்லவா?
முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்;
இட்டது தான்இலை ஏதேனும்; ஏழைகாள்!
பட்டது பார்மணம் பன்னிரண்டு ஆண்டினில்;
கெட்டது எழுபதில் கேடுஅறி யீரே! (திருமந்திரம் 163)
மாதா வயிற்றினில் முட்டையாகத் திரண்டு பிறக்க எடுத்துக்கொண்ட காலம் முந்நூறு நாட்கள். அறிவு தெளிந்து உலகத்தின் மணத்தை உணர்ந்துகொள்ள எடுத்துக்கொண்ட காலம் பன்னிரண்டு ஆண்டுகள். பிணமாய் இற்று விழ எடுத்துக்கொண்ட காலம் எழுபது ஆண்டுகள். சேமிப்பாக இட்டு வைத்துக்கொண்டது என்ன ஏழைகளே?
‘எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ என்று ராமன் முறித்த வில்லைப்போலக் கணப்பொழுதில் முறிந்து போகும் வாழ்வு. காலத்தின் கணச் சிறு வீடு உடம்பு. அதற்குள்ளிருக்கும் சேமிப்பு கடவுள். மூச்சின் மூச்சு; மூல பண்டாரம்.
நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்;
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்,
ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம்;
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே (திருமந்திரம், 85)
இது திருமூலர் செய்த திரு-உயிர்-ஆற்றுப்படை. ‘எனக்கு ஓர் இன்பம் கிடைத்தது; அது உங்களுக்கும் கிடைப்பதாகுக என்று வாழ்த்துகிறேன். அவ்வின்பத்தை நீ பெற்றது எங்கே? வழங்கியது யார்? என்று கேட்பீர்களாயின், வானும், அதைப் பற்றி நின்ற மறைப்பொருளும் என்று நான் உங்களுக்குச் சொல்வேன்.
வான்பற்றி நின்ற மறைப்பொருள் எது என்று வினவுவீர்களாயின், வான் என்பது வான் அல்ல, ஊன்; உடம்பென்னும் தசைப் பிண்டம் என்று நான் உங்களுக்கு உரைப்பேன்; வான் பற்றி நிற்கும் மறைப்பொருள் எதுவோ அதுதான் ஊன் பற்றியும் நிற்கிறது என்று அறிக.
வானையும் ஊனையும் பற்றியிருக்கும் அது, நாம் பற்றி உணரக் கூடியதுதானா என்று ஐயுறுவீர்களாயின், ஐயன்மீர்! கேள்வியை நிறுத்திவிட்டுப் பற்றத் தொடங்குங்கள்; பற்றப் பற்றத் தலைப்படும் அது என்று நானே சான்று பகர்வேன்’ என்று தன்னையே சான்றாக்கிச் சொல்கிறார் திருமூலர்.
வான் என்பது என்ன? வான் என்பது பூமிக்குக் கூரையாய் விரிந்து கிடக்கிற நீலத் தகடன்று; வான் என்பது வெளி. உள்ளேயும், வெளியேயும், கீழேயும், மேலயும், பக்கங்களிலேயும் விரிந்து நிரம்பிக் கிடக்கும் வெட்டவெளி. ஒன்றுமில்லாத வெட்டவெளியில் ஒன்று மறைந்திருக்க முடியுமா என்றால், மறைந்திருக்க இடம் கொடுப்பதும் அது; மறைந்திருப்பது எதுவோ அதற்குள் நிறைந்திருப்பதும் அது. இவ்வளவு பூடகமான ஒன்றைப் பற்ற முடியுமா என்றால், அது பற்றாதது ஒன்றுமில்லை; அதனைப் பற்றாததும் ஒன்றுமில்லை.
பிடி கிட்டாமலா போகும்
நாம் பற்றுவதெல்லாம், தானும் பிறிதொன்றைப் பற்றி நிற்பதைத்தான். பேருந்தில் கம்பியைப் பற்றுகிறோம்; கம்பியோ பேருந்தின் தளத்தைப் பற்றியிருக்கிறது; தளமோ சட்டகத்தைப் பற்றியிருக்கிறது; சட்டகமோ அடிதாங்கியைப் பற்றியிருக்கிறது; அடிதாங்கியோ உருளியைப் பற்றியிருக்கிறது; உருளியோ தரையைப் பற்றியிருக்கிறது;
தரையோ பூமியைப் பற்றியிருக்கிறது; பூமியோ பிற கோள்களுடனான இழுவிசையைப் பற்றியிருக்கிறது; இவை எல்லாவற்றையும் அடக்கிய அண்டமோ பற்ற ஏதுமில்லாமல் வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்கிறது. ஏதோ ஒரு பிடி கிட்டாப் புள்ளியைத்தான் எல்லாமே பற்றிக் கிடக்கின்றன. நாமும் பற்றத் தலைப்பட்டுச் சிக்கெனப் பிடித்தால், பற்றற்ற அந்தப் புள்ளியின் பிடி கிட்டாமலா போகும்?
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.(குறள் 350)
பற்றுவதே வாழ்வு என்று வாழ்வார்க்கு ஒன்று: ஒன்றையும் பற்றாது நிற்பவனைப் பற்றுக. அவனையே பற்றிப் பற்றிப் பற்றாமல் நிற்கப் பயில்க.
உருவும்அல்ல; வெளியும்அல்ல; ஒன்றைமேவி நின்றதுஅல்ல;
மருவும்அல்ல; காதம்அல்ல; மற்றதுஅல்ல; அற்றதுஅல்ல;
பெரியதுஅல்ல; சிறியதுஅல்ல; பேசும்ஆவி தானும்அல்ல;
அரியதுஆகி நின்றநேர்மை யாவர்காண வல்லரே?
(சித்தர் பாடல்கள், சிவவாக்கியர், 72)
அது உருவமா? இல்லை; வெளியா? இல்லை; ஒன்றைப் பற்றி நிற்பதா? இல்லை; நம்மைக் கலந்து தன்னைக் காட்டுமா? இல்லை; எட்டாத தொலைவில் உள்ளதா? இல்லை; வேறு ஏதாவதா? இல்லை; எனில் இல்லவே இல்லாததா? இல்லை; பெரியதா? இல்லை; சிறியதா? இல்லை; பேசும் உயிரா? இல்லை; எதையும் பற்றி நிற்காத அது, எதுவாகவும் சொல்லமுடியாத அது, அரியது என்று மட்டும் எல்லாருக்கும் தெரியும்; மற்றவை அதனைப் பற்ற முயன்றாருக்கே தெரியும்.
தற்சார்பைப் பரிந்துரைக்கும் திருமூலர்
உருவத்தைப் பற்றாமல், குரு வித்தை பற்றாமல், பிறவற்றைப் பற்றாமல், தற்சார்பு பெற்றுத் தன்னையே பற்றிக்கொள்ளப் பரிந்துரைக்கிறார் திருமூலர்.
நான்கண்ட வன்னியும் நாலு கலைஏழும்
தான்கண்ட வாயுச் சரீரம் முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக,
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.(திருமந்திரம் 738)
படைத்தவன் படைப்புக்குள் புகுந்துகொள்வானா? புகுந்துகொள்வான்—வெட்டவெளி எல்லாவற்றையும் தன்னில் வைத்திருந்தாலும் எல்லாவற்றுக்குள்ளும் தான் புகுந்துகொள்ளவில்லையா? அண்டப் படைப்பெல்லாம் சுருங்கிப் பிண்டப் படைப்புக்குள் நுழைந்துகொள்ளுமா? நுழைந்துகொள்ளும்—அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்.
புல் தின்று வளரும் மான்குட்டி, காற்றைக் குடித்து வளருமா? வளரும்—ஊன் உடம்புக்குள் உணர்வைக் கண்டுகொள்ளும்போது. காற்றாலான உடம்பு. காற்றுக்குள் காற்றாகக் கலந்து வரும் கடவுள். மூச்சின் மூச்சு. சரம்.
(சராசரம் அறிவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago