மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் திருப்பாண்டிக் கொடுமுடி

By எஸ்.கோவிந்தராஜ்

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற ஏழு திருத்தலங்களான கரூர், பவானி, அவிநாசி, திருமுருகன்பூண்டி, வெஞ்சமாங்கூடலூர், திருச்செங்கோடு வரிசையில் ஆறாவதாய் இடம்பெற்ற திருத்தலம் திருப்பாண்டிக் கொடுமுடி. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற, ஈரோடு மாவட்டத்தில் காவிரிக்கரையில் அமைந்துள்ள கொடுமுடிக்கு, பிரம்மபுரி, அரிகரபுரம், அமுதபுரி, கன்மாடபுரம், கறையூர், கறைசை, திருப்பாண்டிக் கொடுமுடி, அங்கவருத்தனபுரம், பாண்டு நகரம், பரத்துவாச ஷேத்திரம் எனப் பல பெயர்கள் உண்டு.

மேருமலையின் ஒரு துண்டு வைரமணியாக இவ்விடத்தில் விழுந்து பெருஞ்சிகரமாகவும், அதுவே மூல லிங்கமாகவும் அமைந்ததால் கொடுமுடி, தென் கைலாயம் என்ற பெயர்பெற்றுள்ளது. கல்வெட்டுகளில் அதிராஜராஜ மண்டலத்து காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திருத்தலத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என உலகத்தையே தன் இயக்கத்தில் வைத்துக் காக்கும் பிரம்மா, சிவன், பெருமாள் அருள்பாலிக்கும், மும்மூர்த்தி ஸ்தலமாக மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடிநாதர், மலைக்கொழுந்தர், மகுடலிங்கர் எனப் பல பெயர்களில் போற்றப்படும் மூலவர் மகுடேஸ்வரர், சவுந்திராம்பிகை, பண்மொழியம்மை என்று போற்றப்படும் வடிவுடைநாயகி அம்பாள், அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளித்ததால், மகுடேஸ்வரருக்கு வலதுபுறத்தில் அம்பாள் மணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் சுவாமி மீது அகத்தியரின் கை பட்ட வடு உள்ளது. ஆதி நாராயணர் எனப் போற்றப்படும் வீரநாராயணப் பெருமாள், தாயார் மகாலட்சுமியாகவும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு, தலவிருட்சமாக விளங்கும் வன்னிமரத்தின் அடியில் மூன்று முகம் கொண்டவராகப் பிரம்மா அருள்பாலிக்கிறார்.

நான்கு தீர்த்தங்கள்

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையுடைய, இத்திருக்கோயிலில் காவிரியுடன் சேர்த்து நான்கு தீர்த்தங்கள் உள்ளன. வன்னிமரத்தின் அருகில் உள்ள தேவ தீர்த்தம், மடப்பள்ளி அருகில் உள்ள பிரம்ம தீர்த்தம், நவக்கிரகம் அருகில் உள்ள பரத்துவாச தீர்த்தம் ஆகியவை கோயில் வளாகத்திலேயே உள்ளன.

காவிரி நதியின் மேல்கரையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத்திருத்தலத்தில், மகுடேஸ்வரர், அம்மன், வீரநாராயணப்பெருமாள் ஆகியோருக்கு மூன்று கோபுரங்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் வடக்கில் மகுடேஸ்வரர், தெற்கில் வடிவுடைநாயகி அம்மன், நடுவில் பள்ளி கொண்ட நிலையில் வீரநாராயணப் பெருமாள் சன்னதி ஆகியவை உள்ளது. தென்மேற்கு மூலையில் ஆஞ்சநேயர், பெருமாள்கோயிலுக்கு தெற்கில் திருமங்கை நாச்சியார் சன்னதியும், அதன் முன்பே வன்னிமரமும், பிரம்மன் சன்னதியும் உள்ளன.

கோயில் கோபுரத்துக்கு உள்பாகத்தில் சூரியன், சந்திரனும் இருபக்கத்திலும் உள்ளனர். பக்கத்தில் நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு நடுவில் மூலவரும், உள்சுற்றுப் பிரகாரத்தில் தெற்கில் அறுபத்து மூவரும், மேற்கில் காவிரி கண்ட விநாயகரும், உமா மகேஸ்வரர், அகத்தீஸ்வரர், கஜலட்சுமி, ஆறுமுகப்பெருமானும், வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

பெருமாள் கோயிலுக்கு உள்ளே இருபுறமும் பன்னிரு ஆழ்வார்களும், பரமபதநாதர், உடையவர், வெங்கடாசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீரநாராயணப் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார். கோயிலுக்கு எதிரில் காவிரிக்கரையில் சக்திவிநாயகர் காட்சியளிக்கிறார்.

பாண்டிய, பல்லவ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட இக்கோயிலில் பிற்காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குரிய கல்வெட்டுகள் பெருமாள் கோயிலிலும், வெளியிடங்களிலும், செப்பேட்டிலும் உள்ளன. சுந்தரபாண்டியன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரநாராயணப்பெருமாள் கோயிலில் உள்ளது.

பிரம்மா வீற்றிருக்கும் வன்னிமரம்

மகுடேஸ்வரர் கோயிலின் தல விருட்சமான வன்னிமரம் கோயில் வளாகத்தில் உள்ளது. 2000 ஆண்டுகள் பழமையான இம்மரத்தின் ஒருபுறக் கிளைகள் முட்களுடனும், மறுபுறம் முட்கள் இல்லாமலும், பூக்காமல், காய்க்காமல், தெய்விகத்தன்மையுடன் திகழ்கிறது. வன்னிமர இலைகளை காவிரி தீர்த்தக்கலசத்தில் இட்டுச் சென்று பழனியாண்டவர் மற்றும் இதர தெய்வங்களை பூஜிக்க பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.

பிரம்மா வீற்றிருக்கும் வன்னி மரத்தை 12 (கால் மண்டலம்), 24 (அரை மண்டலம்), 48 (ஒரு மண்டலம்), வயதின் எண்ணிக்கை, 108 முறை வலம் வந்து அருள் பெருகின்றனர்.

இம்மரத்தினை பிரதட்சணம் செய்வதால், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரகதோஷங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனி பகவானுக்கு உரிய மரமாகவும், அவிட்ட நட்சத்திரக்காரர்களின் விருட்சமாகவும் வன்னிமரம் போற்றப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்திருந்தபோது, தனது ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நான்கு கரங்களுடன்

அட்சமாலை கமண்டலத்துடன் மூன்று முகம் கொண்ட பிரம்மா வன்னிமரத்தடியில் அருள்பாலிக்கிறார்.

வன்னிமர அடியில் வீற்றிருக்கும் பிரம்மாவிற்கு ஒவ்வொரு வாரமும் திங்களன்று அபிஷேக ஆராதனை செய்வதற்கும், பிரம்மாவின் முன் அமர்ந்து தியானம் செய்வதற்கும், புனர்ஜென்ம பூஜை வழிபாட்டிற்காகவும் கர்நாடக மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.

கொடுமுடியில் காவிரியின் தெற்கில் இருந்து கிழக்கு நோக்கித் திரும்பி சோழநாட்டை நோக்கிப் பயணிக்கிறது. இவ்விடத்தில் காவிரியின் நடுவில் அகத்தியர் பாறை அமைந்துள்ளது. பரிசல் மூலமாகக் காவிரியைக் கடந்து சென்றால், அகத்தியர் பாறையில் இவ்வுருவங்கள் குறித்த ஓவியங்களைக் காண முடியும்.

காவடி பூஜை

கொங்கு மண்டலத்தில் உள்ள பெரும்பாலான கோயில் திருவிழாக்களின்போது, கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாளை வழிபட்டு, காவிரித் தீர்த்தம் கொண்டு செல்வது ஐதீகமாக உள்ளது. பங்குனி மாதத்தில் பழனி முருகனுக்கு காவடி எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களால் கொடுமுடி நிரம்பி வழியும். பங்குனி உத்திரகாவடி எடுக்கும் பக்தர்கள், காவிரியில் நீராடி, தீர்த்தம் எடுத்துக்கொண்டு கொடுமுடியின் அடையாளமாய் வன்னி இலையை கலசத்தில் வைத்துக்கொண்டு பாதயாத்திரையாய் பழனிக்கு புறப்படுவர். அப்போது தப்பாட்டம், பதலைப்பறை, சிறுபறை, உடுக்கை, பம்பை, உறுமி, பேரிகை, ஊதுகொம்பு, தாரை, திருச்சின்னம், துத்தாரி என வாத்தியங்களின் முழக்கத்தால் கொடுமுடி நகரம் திருவிழா கோலம் பூண்டு காணப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

8 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்