சூபி வழி 04: நேசத்தைத் தவிர எதுவுமில்லை

By முகமது ஹுசைன்

நேசம் எனும் மார்க்கத்தை

நாடுபவன் நான்

நேசமே எனது மார்க்கம்

நேசமே எனது சுவாசம்

நேசமே எனது நம்பிக்கை

நேசத்தின் குழந்தை நான்

நேசத்தைத் தவிர, என்னிடம்

பேசுவதற்கு எதுவுமில்லை

- ஜலாலுதீன் ரூமி

கற்றதைத் துறப்பதே உண்மையான துறவு. கற்றதால் பெற்ற அறிவைத் துறப்பது ஞானத்தின் உச்சம். புறத்தில் மட்டுமல்லாமல்; அகத்திலும் எதுவுமில்லாமல் வெறுமையாய் இருப்பவரே உண்மையான ஞானி. பாக்தாத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அபூ ஸயுத் அல் ஹ்ர்ராஸ் அத்தகைய ஞானிகளில் ஒருவர்.

காலணிகளைச் செப்பனிடுவது அவரது தொழில். கடவுளை நினைப்பது அவரது வாழ்வு. சூபி ஞான வழியில் அவர் அளவுக்கு இறைவனைப் பற்றியும் மறுமைப் பற்றியும் பேசிய ஞானிகள் கிடையாது. 400 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். பற்றை இழந்து இருப்பைத் தொலைப்பதே அவரது எழுத்தின் சாராம்சம். உடலைத் தாண்டிய வாழ்வைப் பற்றியும் இறைவனுடன் தொடரும் வாழ்வைப் பற்றியும் மட்டுமே பேசினார். எழுதினார். ‘சூபி ஞானத்தின் நாவு’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.

சிறுவயதிலேயே ஆன்மிகத் தாகம் கொண்டவராக அவர் இருந்தார். உலக வாழ்வும் அதன் தேவைகளும் அவருக்கு எப்போதும் சுமையாகவே இருந்தன. புறத் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளத்தை அவரது தொழில் கொடுத்தது. அகத் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளமின்றி வாடியவருக்கு, அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சூபி ஞானியாகத் திகழ்ந்த துன்னூன் மிஸ்ரியுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பின் நடந்தவை எல்லாம் அற்புதங்கள்தாம். பிஷ்ர் ஹாபி, ஸரீ அஸ்ஸகதி எனப் பல ஞானிகள் அவருக்கு தோழர்களாக விளங்கினார்கள்.

ஞானிகளின் பரிச்சயம் அவருக்கு இன்பத்தின் பேரூற்றாக அமைந்தது. தொழிலைத் தொலைத்தார். இருப்பதைத் துறந்தார். கற்றதை மறந்தார். உடலையும் மனத்தையும் வெறுமையால் நிரப்பினார். ஞானிகளின் உரைகளும் ஆன்மிகப் பயணங்களும் ஆன்மிக அமிர்தத்தை அவருள் நிரப்பின. ஆன்மிகப் பானத்தின் ருசி அவரது பசியைக் களவாடிச் சென்றது. பசி என்ற ஒன்றே அவருக்கு இல்லாமல் போனது. உடலின் வலுவுக்காக மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட்டார். அதுவும் வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டார்.

பாலைவனத்தினூடே ஒருமுறை ஆன்மிக பயணம் மேற்கொண்டார். வழக்கம்போல உண்ண மறந்து பயணித்தார். பகலில் தகிக்கும் வெயிலும் இரவில் வாட்டும் குளிரும் அவரை மிகவும் களைப்படைய வைத்தன. உடலின் களைப்பை உணர்வதற்கு அவருக்கு ஒரு வாரம் பிடித்தது. தான் சாப்பிட மறந்து பயணித்துக்கொண்டிருப்பது அப்போதுதான் அவரது நினைவுக்கு வந்தது. பாலைவனத்தின் நடுவில் உணவுக்கு வழி ஏது?அவரது நா வறண்டு, கால்கள் தள்ளாடின.

தன்னையறியாமல், அவரது கைகள் உயர்ந்து, தாகத்துக்குத் தண்ணீரும் உடல் வலுவுக்கு உணவும் இறைவனிடம் வேண்டின. அப்போது காற்றினூடே அவரது செவிகளுக்குள் ஒரு குரல் நுழைந்து. ‘அகமும் புறமும் இறைவனால் தம்மை நிறைத்தவர்கள், அவனிடம் எதையும் வேண்டுவது என்பது இறைவனின் மீதான அவர்களது நம்பிக்கையைக் கேள்விக்கு உள்ளாக்கும்’ என்று அந்தக் குரல் சொன்னது.

எல்லாம் அறிந்த இறைவனிடம் ’வேண்டுவதை’ விடப் பெரிதான நம்பிக்கையற்ற செயல் இவ்வுலகில் எதுவுமில்லை என்ற புரிதல் அந்த நொடியே அவரது மனத்துக்குள் ஆழமாக வேர்விட்டது. ’பசியையும் தாகத்தையும் தாங்கும் பொறுமையையும் ஆற்றலையும் தா என இறைவனிடம் வேண்டலாமா?’ அவர் எண்ணி முடிக்கும் முன்னே, கடவுளின் கருணையால் நிரம்பிய வர்களிடம் பொறுமை ஆற்றலும் தேவைக்கு அதிகமாக இருக்கும் என்று அவரது உள்மனம் சொன்னது.

அவர் செல்லுமிடம் எல்லாம் மன்னர்களும் செல்வந்தர்களும், முன்னின்று வரவேற்று அவரைக் கொண்டாடி மகிழ்ந்னர். அன்பின் மிகுதியால், அவர்கள் ஏதேனும் கொடுக்க விழைந்தால், எனக்குத் தயவு கூர்ந்து கடவுளை மட்டும் கொடுங்கள் என்று கேட்பார். மன்னர் ஒருவர் இவரிடம், ’என்னை நேசிப்பீர்களா?’ என்று கேட்டதற்கு, ”இறைவனைத் தவிர வேறு எவரையும் நேசிப்பதற்கு எனது மனத்தில் இடமும் இல்லை, வாழ்வில் நேரமும் இல்லை” என்று வெறுமையால் நிரம்பிய கண்களால் வெறித்துப் பார்த்தபடி சொன்னார்.

வாழ்வில் எப்போதும் எதையாவது அவர் தேடிக் கொண்டேயிருப்பார். ’எதைத் தேடுகிறீர்கள்?’ என்று யாராவது கேட்டால், கடவுளைத் தேடுகிறேன் என்று பதில் அளிப்பார். ’உலகைத் துறந்து இறைவனிடம் திரும்பி, தன்னை இறைவனிடம் இணைத்து, அவனது அருகாமையில் ஊறித் திளைப்பவன், உலகை மட்டுமல்ல; தன்னையே இறைவனுள் தொலைத்துவிடுவான். காலத்தையும் தூரத்தையும் கடந்தவன் அவன். அவனது வாழ்வும் எண்ணமும் கடவுளால் மட்டும் நிரம்பிய ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவனின் தேடல் எப்படி கடவுளைத் தவிர வேறொன்றாக இருக்கும்’ என்று பின்னாளில் ஒருமுறை அதற்கு விளக்கமளித்தார்.

‘இறைவனின் அருகாமை ஒருவனை இறைவனாகவே மாற்றிவிடும்’ என்று ஒருமுறை சொன்னார். அது அப்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதவாதிகள் அவருக்கு எதிராகத் திரண்டு எழுந்தனர். மதத்தையும் அதன் மார்க்கத்தையும் நிந்தனைச் செய்துவிட்டார் என மக்கள் அவரைத் தூற்றினர், அவர் மீது வன்முறையும் ஏவிவிடப்பட்டது.

சிறுவர்கள் கூட அவர்மீது கல்கொண்டு எறிந்தனர். இறைவனின் மீதான காதலைக்கொண்டு, தனது மனத்தை நிரப்பி இருந்தவருக்கு, அந்த எதிர்ப்பின் அர்த்தம், இவ்வுலகில் அவர் வாழும்வரை புரியவே இல்லை. காதலால் நிறைந்த அவரது பயணம் முடிவற்றதாக இன்றும் தொடர்கிறது, எழுத்தின் வழி.

(ஞானிகள் தொடர்வார்கள்)
கட்டுரையாளர்  தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்