இறையை உருவங்களில் வழிபடும் முறை வைதிக மரபு சார்ந்ததன்று; மாற்று மரபான தந்திர மரபு சார்ந்தது. வைதிக மரபு வேள்வி வழிப்பட்டது என்றால், தந்திர மரபு உருவ வழிப்பட்டது. வைதிக மரபு தீயினால் தூய்மை செய்வது என்றால், தந்திர மரபு நீரினால் தூய்மை செய்வது. வைதிக மரபு தேவர்களை வானத்தில் வைத்து வணங்குவது என்றால், தந்திர மரபு தெய்வங்களைப் பூமியில் அடையாளப்படுத்திக் கும்பிடுவது.
தந்திர மரபில் இறை வழிபாட்டுக்கு என்று ஒரு வரிசைமுறை உண்டு. வழிபாட்டு இடத்தைத் தூய்மை செய்து கோலமிடுதல், ‘பிள்ளையார் பிடித்தல்’ என்ற பெயரில் நாம் இன்னும் செய்துகொண்டிருப்பதைப் போல, மஞ்சளோ சந்தனமோ சாணியோ மண்ணோ மாவோ கொண்டு, கூம்பு பிடித்துக் கோலத்தில் வைத்தல், மந்திரங்கள் சொல்லி, அந்தக் கூம்பில் இறை எழுந்தருளியதாக உருவகித்து வாழ்த்துதல், எழுந்தருளிய இறையை நீர் இறைத்துத் தூய்மை செய்தல், பூ இடுதல், உணவு படைத்தல், புறத்தே பிடித்து வைத்திருக்கும் இறையின்மீது கருத்துச் செலுத்திக் கவனம் குவித்து அகத்தே கொண்டு வருதல், அகத்துக்கு வந்த இறையோடு சேர்ந்து திளைத்திருத்தல் என்று வரிசை சொல்கிறது தந்திர வழிபாட்டு மரபு.
சுருங்கச் சொன்னால் ஒரு விருந்தினரை வரவேற்பதுபோல இறை வரவு ஏற்றுக்கொள்ளல். வந்த விருந்தினர்க்குக் கைகால் கழுவ நீர் இறைத்து, துடைக்கத் துண்டு கொடுத்து, உட்காரத் தடுக்கு இட்டு, உண்ண உணவிட்டு, உரையாடி மகிழ்ந்திருந்து, விடைகொடுத்துப்பின் வருவிருந்து பார்த்திருப்பதுபோல இது.
தீ வளர்த்து, ஆகுதி செலுத்தி, இறை வழிபாடு செய்யும் வைதிக முறைமைக்குப் பெயர் வேள்வி; நீரூற்றி வரவேற்று, விருந்தளித்து, இறை வழிபாடு செய்யும் தந்திர முறைமைக்குப் பெயர் பூசை. பூசுதல் என்றால் நீரால் கழுவுதல்; சாணமிட்டு மெழுகுதல்; தூய்மை செய்தல்; நெய்யும் நீறும் சந்தனமும் குங்குமமும் பிறவும் கொண்டு பூசுதல்; விளக்கேற்றி வெளிச்சம் காட்டி, நறும்புகை மூட்டிப் பூ செய்து வணங்குதல்.
சலம், பூவொடு தூபம் மறந்துஅறியேன்;
தமிழோடுஇசை பாடல் மறந்துஅறியேன்;
நலம்தீங்கிலும் உன்னை மறந்துஅறியேன்;
உன்நாமம் என்நாவில் மறந்துஅறியேன்...
(தேவாரம், 1:1:6)
என்று பூசை முறைமை பேசுகிறார் திருநாவுக்கரசர். நீர் இறைத்து, பூப் போட்டு, நறும்புகை மூட்டிச் செய்யும் பூசனையை இனி மறக்க மாட்டேன்; தமிழாலே இசைபாடி உனை வாழ்த்தும் கடமையை ஒரு நாளும் மறக்க மாட்டேன்; நன்மையிலும் தீமையிலும் உனை மறக்க மாட்டேன்; திருப்பெயரைச் சொல்லாமல் இருக்கவே மாட்டேன்.
புறத்தில் சேகரிக்கப்பட்டு அகத்துக்குள் கொண்டு வரப்படும் தந்திர வழிபாட்டின் வரிசை முறையை ஒப்புக்கொள்ளும் பட்டினத்தார், புறப்பூசை பேசாமல், அதன் சாரப் பலனான அகப்பூசையை மட்டும் அழுத்திப் பேசுகிறார்:
வெட்டாத சக்கரம், பேசாத மந்திரம், வேறுஒருவர்க்கு
எட்டாத புட்பம், இறையாத தீர்த்தம், இனிமுடித்துக்
கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம், கருத்தின்உள்ளே
முட்டாத பூசைஅன்றோ குருநாதன் மொழிந்ததுவே.
(பட்டினத்தார் பாடல்கள், பொது, 50)
இடப்படாத கோலம், வாயைத் திறந்து சொல்லாத மந்திரம், வேறெவரும் பறிப்பதற்கு எட்டாமல் எனக்குள்ளே பூத்திருக்கும் பூ, வேறு ஒருவர் வாரி இறைக்காத வண்ணம் எனக்குள்ளே ஊறி நிறைந்திருக்கும் நீர், மஞ்சளோ சந்தனமோ சாணியோ கொண்டு திரட்டி யாரும் கூம்பாகப் பிடித்து வைக்காத இறை, தனியாகப் பொழுது ஒதுக்கி அந்த இறையைக் கருதிப் பார்க்காத நெஞ்சம், முடிவடைந்துவிடாத பூசை என்றல்லவா என் குருநாதர் எனக்குச் சொன்னார்?
அகத்தில் காண்பதே மேல்
இட்ட கோலம் கலைந்து போகும்; வாய் திறந்து சொன்ன சொல் தீர்ந்து போகும்; பறித்துச் சூட்டிய பூ சூடிய பூவாகிக் கூரையில் வீசப்படும்; மஞ்சளோ மற்றவையோ கொண்டு பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார்க் கூம்புகள் வழிபாடு முடிந்தபின் கரைக்கப்படும்; கடவுளைக் கருதத் தனியாகப் பொழுது ஒதுக்கும் நெஞ்சம், ஒதுக்கிய பொழுது கழிந்து போனதும், வேறு கருதத் தொடங்கும்; காலத்திலும் இடத்திலும் தொடங்கும் பூசை ஏதேனும் ஒரு புள்ளியில் முற்றுப் பெறும். எனவே, புறத்தில் கண்டுகொள்வதைக் காட்டிலும் அகத்தில் கண்டுகொள்வது மேல் என்று கருதினார்போலும்.
‘பேசாத மந்திரம்’ என்று பட்டினத்தார் குறிப்பதை ‘அசபை’ என்று சொல்கிறார் திருமூலர். மந்திரம் என்பது, ஓர் அதிர்வு கருதி, இடையறாது மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதும் உருவேற்றப்படுவதுமான ஓர் ஒலிக்குறிப்பு. உருவேற்றுதல் என்பது செபித்தல். ஒலித்துச் செபிக்கும் மந்திரம் ‘சபை’; ஒலிக்காமல் செபிக்கும் மந்திரம் ‘அசபை’.
ஒலித்துச் செபிக்கும் சபை மந்திரங்களையும் திருமூலர் நிறையக் குறிக்கிறார் என்றாலும் ஒலிக்காமல் செபிக்கும் அசபையையே முன்னிலைப்படுத்துகிறார். ஏன்? ஒலித்துச் செபிக்கும் மந்திரங்கள் வடிவம் பெறுகின்றன; சொற்களாகக் கருதப்படுகின்றன; சொற்களாகக் கருதப்படும் நிலையில் அவற்றுக்கு விளக்கம் கோரப்படுகிறது; மொழிக்குள் நுழையாமல் அவை விளக்கம் பெற முடியாது. இந்த நிலையில், மந்திரங்கள் எல்லாவற்றையும் தாங்களே மொத்தக் குத்தகைக்கு எடுத்திருப்பதாகத் தம்பட்டம் தட்டிக்கொள்ளும் சில மொழிகள், மற்ற மொழிகளை மட்டம் தட்டி, மந்திரங்களின்மேல் அறிவுச் சொத்துரிமை கோருகின்றன.
பொதுத் திரட்சியில் வந்த பொருளைத் ‘தனது’ என்று ஒருவன் தனி உடைமை பாராட்டுவானாகில், அதைப் பொய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் கிடைக்கும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். பொறாமை காரணமாகப் பொங்கி அதை நம்முடையது என்று சொல்ல வேண்டாம். ‘வெவ்வியன் ஆகிப் பிறர் பொருள் வவ்வன்மின்’ (திருமந்திரம் 196). நம்மிடம் சில இருக்கின்றன. அதைத் தனியுடைமை என்று அடைத்து வைத்துக்கொள்ளாமல் நாமும் புழங்கி மற்றவர்க்கும் பங்கிடுவோம்; என்ன குறை என்பதே திருமூலரின் நிலைப்பாடு ஆகையால், காப்புரிமை கோரப்படும் சபை மந்திரங்களை அழுத்தாமல் யாரும் காப்புரிமை கோரமுடியாத அசபை மந்திரத்தை அழுத்திப் பேசுகிறார்.
இனி. அசபை மந்திரம் என்பதென்ன?
போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி;
சாற்றுகின் றேன் அறை யோசிவ யோகத்தை;
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே.
(திருமந்திரம், 884)
தலைவனாகிய சிவனின் ஓர் எழுத்து ‘சி’. அதுவே எல்லா மந்திரங்களையும்விட உயர்ந்தது, ஆகையால் அதனைப் புகழ்கின்றேன். சிவஞானம் தருவதும், சிவனடி தருவதும் நாயோட்டு மந்திரமான ‘சி’. (இதை ஓங்காரம் என்பாரும் உண்டு; அதுவும் பொருந்துவதே; ஓங்காரத்தையும் மூச்சொலியாகக் கொள்ளலாம்). வாய் திறந்து ஒலிக்காமல் மூச்சாலே ஒலிக்கப்படும் இந்த மந்திரம் அசபை. இதைக் கொண்டு செய்யப்படுவது சிவயோகம் அல்லது வாசி ஓகம்.
கூத்தனைக் காணும் குறிபல பேசிடில்,
கூத்தன் எழுத்தின் முதல்எழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்;
கூத்தனைக் காணும் குறிஅது ஆமே.
(திருமந்திரம், 935)
கூத்தனைக் காண்பதற்குப் பல அடையாளங்கள் உள்ளன; அடையாளங்களைக் காண்பதைவிட அவனையே காண்பது சிறந்ததல்லவா? அவனையே காண்பதற்கு வழி என்ன? கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதுதல். கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ‘சி’ என்னும் மூச்செழுத்து. அதை நினைந்தும் கூர்ந்தும் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.
(தொடர்ந்து ஓதுவோம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago