மூச்சுக்கென்ன அவ்வளவு முதன்மை? ஏனென்றால், மூச்சுதான் மூளையை இயக்குகிறது. மூளைதான் நம்மை இயக்குகிறது. எனில், நம்மை இயக்கும் மூளையையே இயக்கும் மூச்சு முதன்மையானதுதானே?
மூளை ஒன்றுதான் என்றாலும், அது ஒற்றைத் திரளாய் இயங்காமல், இரட்டையாய், இரண்டு அரைக்கோளங்களாய் (hemispheres), வகுபட்டு இயங்குகிறது. மூளையின் இரண்டு அரைக்கோளங்களும், ஒரே வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகளைப் போல ஒருங்கிணைக்கப்பட்டு இயங்குகின்றன.
மூளை அரைக்கோளங்களை ஒருங்கிணைப்பது ‘குறுக்கிணைப்புக் கற்றை’ (corpus callosum) என்கிற, நுண்ணிழைகளால் ஆன நரம்புக் கற்றை.
மூளையின் இடது அரைக்கோளம், வலது அரைக்கோளம் ஆகியவற்றின் செயல்பாடுகளும் தூண்டல்களும் வேறுவேறானவை. இடது அரைக்கோளம், உடலின் வலப்பகுதியைச் செயல்படுத்துகிறது; பகுத்தாராய்தல், மொழியறிவு, கணக்கிடுதல்போன்ற ஆற்றல்களைத் தூண்டுகிறது; வலக்கைப் பழக்கத்தை உருவாக்குகிறது.
வலது அரைக்கோளம், உடலின் இடப்பகுதியைச் செயல்படுத்துகிறது; கலைகளில் ஈடுபாடு, கற்பனை, படைப்பூக்கம் போன்ற ஆற்றல்களைத் தூண்டுகிறது; இடக்கைப் பழக்கத்தை உருவாக்குகிறது. இரண்டு கோளங்களும் தத்தம் செயல்பாடுகளைத் தனித்தனியாக வகுத்துக்கொண்டாலும், செயல்பாடுகளின்போது தாங்கள் பெற்ற செய்திகளைக் குறுக்கிணைப்புக் கற்றையின் வழியாக ஒன்றுக்கொன்று பரிமாறித் தங்களை ஒருங்கிணைத்துக் கொள்கின்றன.
காட்டாக, உங்கள் விரல்கள் கணினியின் விசைப்பலகையைத் தொடுகின்றன என்றால், அப்போது ஏற்படும் தொடுவுணர்ச்சிபற்றிய செய்தி மூளையின் இடது அரைக்கோளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதே செய்தி, ஒருங்கிணைப்புக்காக, குறுக்கிணைப்புக் கற்றையின்வழியாக, மூளையின் வலது அரைக்கோளத்துடனும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
அவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படாவிட்டால், மொழியறிவைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் வலது அரைக்கோளம், நீங்கள் தொட்டு உணர்ந்த பொருளின் பெயர் ‘விசைப்பலகை’ என்ற செய்தியை உங்களுக்கு வழங்காது.
நல்லது. இவற்றுக்கும் மூச்சுக்கும் என்ன தொடர்பு? மூளையைப் போலவேதான் மூச்சும். மூச்சு ஒன்றுதான் என்றாலும், அது ஒற்றையாக இயங்காமல், இடது நாடியான இடகலையாகவும், வலது நாடியான பிங்கலையாகவும், இரண்டாக வகுபட்டு இயங்குகிறது.
இடகலை எழுச்சி பெற்று இயங்கும்போது பிங்கலை குன்றுவதையும், பிங்கலை எழுச்சி பெற்று இயங்கும்போது இடகலை குன்றுவதையும்போலவே, மூளையின் இடது அரைக்கோளம் செயலூக்கம் பெற்று இயங்கும்போது வலது அரைக்கோளம் செயலூக்கம் குன்றியும், வலது அரைக்கோளம் செயலூக்கம் பெற்று இயங்கும்போது இடது அரைக்கோளம் செயலூக்கம் குன்றியும் இயங்குகின்றன.
மூச்சைக் கொண்டு தீர்மானிக்கலாம்
மூளையின் வலது கோளத்தையும் இடது கோளத்தையும் குறுக்கிணைப்புக் கற்றை ஒருங்கிணைத்துக் கட்டுவதுபோலவே, மூச்சின் இடகலையையும் பிங்கலையையும் ஒருங்கிணைத்துக் கட்டுகிறது சுழிமுனை.
ஒன்று முதல் ஒன்றரை மணிநேரத்துக்கு ஒரு முறை இடகலையும் பிங்கலையும் தங்கள் எழுச்சியைச் சுழற்சிமுறையில் ஒன்றுக்கொன்று மாற்றிக்கொள்வதுபோலவே, மூளையின் வலது கோளமும் இடது கோளமும் தங்கள் எழுச்சியைச் சுழற்சிமுறையில் மாற்றிக்கொள்கின்றன.
இனி, மூளையின் இடது அரைக்கோளத்தின் செயல்பாடு வலதுநாடியான பிங்கலை நாடியோடு தொடர்புடையது; வலது அரைக்கோளத்தின் செயல்பாடு இடதுநாடியான இடகலை நாடியோடு தொடர்புடையது. அதாவது, பிங்கலைவழியான மூச்சிழுப்பு, மூளையின் இடது அரைக்கோளத்தைத் தூண்டும்;
இடகலைவழியான மூச்சிழுப்பு, மூளையின் வலது அரைக்கோளத்தைத் தூண்டும். என்றால், உங்களில் எந்த ஆற்றல் ஊக்கம் பெறவேண்டும், நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை, மூச்சை மாற்றுவதன்மூலம் நீங்களே தீர்மானிக்கலாம்.
ஒரு நாடியில் இயங்கும் மூச்சின் இயக்கத்தை மற்றொரு நாடிக்கு மடை மாற்ற முடியுமா என்றால், முடியும். எந்த நாடியில் உங்கள் மூச்சு இயங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதற்கு எதிர் அக்குளில் அழுத்தம் செலுத்தினால் மூச்சு மடை மாறும்.
ஓகிகள் ஓகத் தண்டொன்று வைத்திருப்பார்கள்; அதை அக்குளில் இடுக்கித் தங்கள் மூச்சை மடை மாற்றிக்கொள்வார்கள். அக்குளில் அழுத்தம் உண்டாகும்படி ஒருக்களித்துப் படுப்பதன்மூலமாகவும் மூச்சை மடை மாற்றலாம்.
அல்லது, எந்த நாடிக்கு மூச்சை மடை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த நாடிக்கு எதிர்ப்புறமாக உள்ள காலை மடக்கி அமர்ந்தீர்கள் என்றாலும் மூச்சு மடை மாறும். வலக்காலை மடக்கினால் இடநாடிக்கு மாறும்; இடக்காலை மடக்கினால் பிங்கலைக்கு மாறும். இரண்டு கால்களையும் சமமாக மடக்கினால், மூச்சு இரண்டுக்கும் சமமாக நடுநாடியாகிய சுழிமுனையில் ஓடும்.
இரு கால்களையும் சமமாக மடக்கி உட்கார்வதற்குச் சமணம் என்று பெயர். சம+அணம் = சமணம். அணம் என்பது அண்மித்தல், அணைத்தல். கால்களைச் சமமாக மடக்கி அணைத்து உட்காரும் இருக்கைக்குப் பெயர் சமணம், சமணமிடுதல், சமணக்கால் இட்டு உட்கார்தல். ஒரு கால் மடக்கி மறுகால்மேல் போட்டு அடமாக உட்கார்வது அட்டணக்கால் ஆவதுபோல, இருகால் மடக்கிச் சமமாக உட்கார்வது சமணக்கால். சமணக்கால் போட்டவர்கள் சமணர்கள் என்பார்கள்.
ஓகம் பயிலச் சிறந்தவை
வலக்கால் மடக்கினால், மூச்சு இடநாடிக்கு மடை மாறி, மூளையின் வலது அரைக்கோளத்தைச் செயல்படுத்தி, பகுத்தாராய்தல், மொழியறிவு, கணக்கிடுதல்போன்ற ஆற்றல்களைத் தூண்டும். இடக்காலை மடக்கினால், மூச்சு பிங்கலைக்கு மடை மாறி, இடது அரைக்கோளத்தைச் செயல்படுத்தி, கலைகளில் ஈடுபாடு, கற்பனை, படைப்பூக்கம்போன்ற ஆற்றல்களைத் தூண்டும். இரண்டு கால்களையும் சமமாக மடக்கிச் சமணம் இட்டாலோ, இரண்டு அரைக்கோளங்களுமே சமமான அளவில் தூண்டப்பட்டு, இரு திறத்து ஆற்றல்களும் மிகும் வாய்ப்புண்டு. சமணம் இடவே சொல்கிறார் திருமூலர்:
பங்கயம் ஆதி பரந்தபல் ஆதனம்;
அங்குஉள வாம்இரு நாலும்; அவற்றினுள்
சொங்குஇல்லை யாகச் சுவத்திகம் எனமிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே. (திருமந்திரம் 558)
ஆதனம் என்பது ஆசனம். ஆசனம் என்பது இருக்கை; உடம்பை இருத்திக்கொள்ளும் முறை. இருக்கைகள் பல்வேறு இருந்தாலும், சிறந்தவை எட்டு. அவற்றில் ஒன்று பங்கய ஆசனம் என்றும் பதுமாசனம் என்று சொல்லப்படும் தாமரை இருக்கை. எட்டில் எதுவுமே மோசமில்லை என்றாலும், தனக்குத் தானே தலைவனாக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் பயில வேண்டியது சுவத்திகாசனம் (Swastikasana); கால்களைச் சமமாக மடக்கி வைத்து உட்காரும் இருக்கை. இருக்கட்டும். திருமூலர் சொல்லும் சிறந்த எட்டு இருக்கைகள் எவை?
பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி,
சொத்திரம், வீரம், சுகாதனம், ஓர்ஏழும்
உத்தம மாம்முது ஆதனம் எட்டெட்டுப்
பத்தோடு நூறு பலஆ தனமே. (திருமந்திரம், 563)
அந்த எட்டு எவை என்றால், பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொல் திரம், வீரம், சுகாதனம் ஆகிய ஏழோடு, ஏற்கெனவே சிறப்பித்துச் சொல்லப்பட்ட இருக்கையாகிய சுவத்திகாதனம். ஓகம் பயிலச் சிறந்தவை இவை. இந்த எட்டோடு, எண்பது, நூறு என்று ஆதனங்களின் பட்டியல்கள் பலவாக விரிகின்றன. அவற்றை இங்குச் சொல்லவில்லை.
திருமூலர் தேர்வு செய்திருக்கும் எட்டுமே, மூச்சாகிய சரத்தைச் சமமாக ஓட்ட உதவும் வகையில், கால்களைச் சமமாக மடக்கி உட்காரும் இருக்கைகள் என்பதை நினைவில் நிறுத்துக. இவற்றில் சுவத்திகம் தவிரத் திருமூலர் கூடுதலாகச் சிறப்பிப்பது சொல் திரம் என்கிற பாத திர ஆதனம்.
இந்த இருக்கையில் கால்களை மடக்கி உட்கார்வதோடு, கைகளையும் மடக்கி அக்குள்களில் இடுக்கிக்கொள்ள வேண்டும். இடக்கை வலது அக்குளிலும், வலக்கை இடது அக்குளிலும் இடுக்கிக்கொள்ளப்படும். நடுநாடியில் மூச்சைப் பயில இதுவே உகந்த இருக்கை என்று திருமூலர் கருதியிருக்கக்கூடும். மூச்சாக இழுக்கப்படும் காற்றுக்குக் கால் என்று பெயர். காலை மடக்கினால் காலை அடக்கலாம்.
(இருக்கப் பயில்வோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago