உயிர் வளர்க்கும் திருமந்திரம் 60: பொருள்தேட வேண்டிய பழமறை நீங்கள்தான்

By கரு.ஆறுமுகத்தமிழன்

‘நமச்சிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க’ என்று தொடங்கும் திருவாசகம், ‘நமச்சிவாயத்தை’ நாதன்தாளுக்கும் முன்பாக முதன்மைப்படுத்தித் தொடக்கச் சொல்லாக வைத்துக்கொள்கிறது. ‘நமச்சிவாய’ என்பது பஞ்சாக்கரம் என்று சொல்லப்படும் ஐந்தெழுத்து. மாணிக்கவாசகர் தமிழ் மரபுப்படி எழுதிய நமச்சிவாயத்தில் ஆறெழுத்து வருகிறதே என்றால், ‘நம’வுக்கும் ‘சிவாய’வுக்கும் இடையில் சந்தியாக வந்து அரை மாத்திரையளவு ஒலிக்கும் ‘இச்சன்னா’ கணக்கில் வராது; ஆகவே ஐந்தெழுத்துத்தான்.

ஐந்தெழுத்து ஓதுதல் என்பது, வலுவாக ஆதரிக்கப்பட்ட சைவ மரபுகளில் ஒன்று. இந்த மரபு திருமூலர் காலத்திலிருந்துதான் தொடங்குகிறது. தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் ‘நமச்சிவாய’ என்றோ ‘சிவாயநம’ என்றோ, எந்த வடிவத்திலும் ஐந்தெழுத்து இடம்பெறவில்லை என்பது இருக்க, முதல் நாயன்மார்களில் ஒருவர் என்றும் திருமூலருக்கு முந்தையவர் என்றும் கருதப்படுகிற காரைக்கால் அம்மையார் பாடல்களில்கூட ஐந்தெழுத்து இடம்பெறவில்லை. ஐந்தெழுத்தை முன்னிறுத்தும் முதல் தமிழ்ச் சைவர் திருமூலர்தாம். அவருக்குப் பின் வந்தவர்களெல்லாம் அவரை வழிமொழிந்து, ஐந்தெழுத்தை மரபாக்கிவிட்டார்கள்.

கிரணங்கள் ஏழும் கிளர்ந்துஎரி பொங்கிக்

கரணங்கள் விட்டுஉயிர் தான்எழும்போதும்,

மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும்போதும்,

அரணம்கை கூட்டுவது அஞ்சுஎழுத்து ஆமே. (திருமந்திரம் 2702)

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என்று ஒளிக்கு ஏழு கதிர்கள். கருவிகள் எல்லாம் கைவிட்டுச் சாகப்போகும் நிலையில், அணையும் விளக்கில் எழும் ஒளிபோல, உடம்பில் எழுகதிர் ஒளிவீச, உயிர் எழும். சாவு நம் சட்டையைப் பிடித்து உயிரை உருவப் போகும் நிலையிலும்கூட அரணாய் நின்று பாதுகாப்புத் தருவது ஐந்தெழுத்து மட்டுந்தான் என்று திருமூலர் புகழ, ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று அப்பர் நமச்சிவாயப் பதிகம் பாட,

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,

நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்;

வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த, வந்த கூற்று

அஞ்சஉ தைத்தன அஞ்சு எழுத்துமே (தேவாரம், 3:22:1)

என்று பஞ்சாக்கரத் திருப்பதிகம் பாடுகிறார் திருஞான சம்பந்தர். தூங்கும்போதும், தூங்காமல் விழித்திருக்கும்போதும், நெஞ்சம் நைந்துபோகுமாறு நாளும்நாள் இடைவிடாது நினையுங்கள். எதை? ஐந்தெழுத்தைக் கொண்டு வாழ்த்தியதால் மார்க்கண்டேயனின் உயிர் பிரிக்க வந்த கூற்றுவனுக்கு உதை விழுந்ததே, அதை.

ஐந்தெழுத்தின் ஐந்து வகை

இவ்வாறாக ஐந்தெழுத்து தமிழ் மரபில் ஊன்றிக்கொண்டது என்பதிருக்க, ஐந்தெழுத்தை அஞ்சாக வகை பிரிக்கிறார்கள்: பரு ஐந்தெழுத்து (தூல பஞ்சாக்கரம்), நுண் ஐந்தெழுத்து (சூக்கும பஞ்சாக்கரம்), மீநுண் ஐந்தெழுத்து (அதிசூக்கும பஞ்சாக்கரம்), காரண ஐந்தெழுத்து (காரண பஞ்சாக்கரம்), பெருங்காரண ஐந்தெழுத்து (மகாகாரண பஞ்சாக்கரம்).

எழுத்தோடு சொல்வதென்றால் ‘நமசிவாய’ என்பது பரு ஐந்தெழுத்து; ‘சிவாயநம’ என்பது நுண் ஐந்தெழுத்து, ‘சிவாய’ என்பது மீநுண் ஐந்தெழுத்து, ‘சிவ’ என்பது காரண ஐந்தெழுத்து, ‘சி’ என்பது பெருங்காரண ஐந்தெழுத்து.

இந்த ஐந்தெழுத்துக்களும் எவற்றைக் குறித்து நிற்கின்றன என்பதையும் திருமூலரே விளக்குகிறார்:

சிவன்,சத்தி, சீவன், செறுமலம், மாயை,

அவம்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர,

அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே. (திருமந்திரம் 2710)

‘சி’ சிவனையும், ‘வா’ சத்தியாகிய அருளையும், ‘ய’ உயிரையும், ‘ந’ அறியாமையாகிய ஆணவத்தையும், ‘ம’ மலங்களாகிய மாயை முதலிய அழுக்கு களையும் குறிக்கும். சி-வா-ய-ந-ம என்னும் ஐந்தெழுத்தில், ‘ய’ என்னும் உயிர், ‘சி’, ‘வா’ என்னும் சிவன்-அருள் ஆகியவற்றுக்கும், ‘ந’, ‘ம’ என்னும் ஆணவம்-மலங்கள் ஆகியவற்றுக்கும் இடையில், சிவன்-அருள்-உயிர்-ஆணவம்-மலங்கள் என்ற வரிசையில் நிற்கிறது.

அதாவது சார்ந்து நிற்கத் தகுந்த பொருளுக்கும், சார்ந்து நிற்கத் தகாத பொருளுக்கும் இடையில் நிற்கிறது. இந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம்; அந்தப் பக்கம் சாய்ந்தாலும் சாயலாம். இந்தப் பக்கம் சாய்ந்தால் சிவனருள்; அந்தப் பக்கம் சாய்ந்தால் பிறவிப் பெருங்கடல். தவித்து நிற்கும் உயிர் தகுந்த கட்சியில் சேர்ந்தால் வம்பு வழக்குகள் வாரா.

சிவாயநம சிறந்தது

‘நமசிவாய’ வுக்கும் ‘சிவாயநம’ வுக்கும் என்ன வேறுபாடு? ‘நமசிவாய’ என்னும் பரு ஐந்தெழுத்து, மலங்களை முன்னால் வைத்துச் சிவனையும் அருளையும் இடையில் வைத்து உயிரைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது. ‘சிவாயநம’ என்னும் நுண் ஐந்தெழுத்தோ, சிவனையும் அருளையும் முன்னால் வைத்து, உயிரை நடுவில் வைத்து, மலங்களைக் கடைசிக்குத் தள்ளிவிடுகிறது. ஆகவே ‘நமசிவாய’ என்னும் பரு ஐந்தெழுத்தைக் காட்டிலும் ‘சிவாயநம’ என்னும் நுண் ஐந்தெழுத்தே சிறந்தது.

‘சிவாயநம’ என்றும் நுண் ஐந்தெழுத்தைவிடவும் ‘சிவாய’ என்னும் மீநுண் ஐந்தெழுத்துச் சிறப்பு. ஏன்? அது ‘ந’, ‘ம’ என்னும் மலங்களை முற்றிலுமாகக் கழித்துக் கட்டிவிடுகிறது. இப்போது இருப்பது சிவனும் அருளும் உயிரும்தான்.

‘சிவாய’ என்னும் மீநுண் ஐந்தெழுத்தைக் காட்டிலும் ‘சிவ’ என்னும் காரண ஐந்தெழுத்து இன்னும் சிறப்பு. ஏன்? உயிர் தன்னை மறந்து அருளுக்குள் ஒடுங்கிவிட்டது என்பதால்.

‘சிவ’ என்னும் காரண ஐந்தெழுத்தைவிட, ‘சி’ என்னும் பெருங்காரண ஐந்தெழுத்தே உச்சம். ஏன்? உயிர் தானற்றுப்போய்ச் சிவன்மட்டுமே நிற்றலால்.

‘சி’ என்னும் இந்தப் பெருங்காரண ஐந்தெழுத்தை ‘நாயோட்டு மந்திரம்’ என்கிறார் திருமூலர். அதென்ன நாயோட்டு மந்திரம்? தெருவில் போகையில் வாலைக் குழைத்து வரும் நாயை எப்படி ஓட்டுவீர்கள்? ‘சி’ என்றுதானே?

நாய்ஓட்டும் மந்திரம் நான்மறை நால்வேதம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்;

நாய்ஓட்டும் மந்திரம் நாதஅந்தம் ஆம்சோதி;

நாய்ஓட்டும் மந்திரம் நாம்அறி யோமே. (திருமந்திரம், 3051)

நால்வேதப் பொருள் என்கிறார்கள். என்ன பெரிய நால்வேதப் பொருள்? எல்லாம் வெறும் நாயோட்டும் மந்திரந்தான். இறைவன் இருப்பதே நாயோட்டும் மந்திரத்தில்தான். ‘சி’ என்னும் நாயோட்டும் மந்திரம் வேத மந்திரங்களைப்போல வாய் திறந்து எழுப்பும் ஒலிக்குறிப்பன்று; அது எல்லா ஒலிகளும் முடியுமிடம். நாளும் நம்மில் இயங்கிக்கொண்டிருக்கும் அதை அறிந்தோமா நாம்?

‘சி’ நாளும் நம்மில் இயங்குகிறதா? எங்கே? நம் வாங்கிவிடும் மூச்சாக. மூச்சின் ஒலியான ‘சி’, வாய் திறந்து பேசாத மந்திரம்; ஊமை எழுத்து; நெஞ்செழுத்து.

அஞ்சுஎழுத்தி லேபிறந்து, அஞ்சுஎழுத்தி லேவளர்ந்து,

அஞ்சுஎழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!

அஞ்சுஎழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லிரேல்

அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!

(சிவவாக்கியர், யோகநிலை 20)

என்று பாடுகிறார் சிவவாக்கியர். அஞ்சு மலங்களின் காரணமாக, அஞ்சு பூதங்களால் பிறந்து, அஞ்சு புலன்களில் வளர்ந்து, ஐந்தெழுத்தை ஓதுகின்ற அறியாதவர்களே! ஐந்தெழுத்தில் ‘சி’ என்னும் ஓர் எழுத்தை, அதாவது மூச்சை, அதன் பயனை அறிந்து ஓதியிருந்தால், அஞ்சாதே என்று அம்பலத்தான் வந்து ஆடியிருக்க மாட்டானா?

பழுத்தன ஐந்தும் பழமறை உள்ளே;

விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வார்இல்லை;

எழுத்துஅறி வோம்என்று உரைப்பர்கள் ஏதர்;

எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே. (திருமந்திரம் 2721)

என்று திருமூலர் முத்தாய்ப்பு வைக்கிறார். நீங்கள் பொருள் தேட வேண்டிய பழமறை நீங்கள்தான். ஐந்தெழுத்தின் மிகுமீநுண்வடிவம் ‘சி’ என்னும் எழுத்தாக, உயிர்வாழ்வின் பெருங்காரணமாகப் பழுத்துக் கிடப்பதும் உங்களுக்குள்ளேதான். அந்தப் பழத்தைப் பறித்து உண்ணாமல் உறங்கலாமா? உறங்கும்போதுகூட ஒழுங்காக இயங்குமாறு மூச்சைப் பயிற்ற வேண்டாமா? ‘தூங்கையிலே வாங்கிவிடும் மூச்சு சுழிமாறிப் போனாலும் போச்சு’ இல்லையா? எங்களுக்குத் தெரியாத ஐந்தெழுத்தா என்று பேசுகிறவர்களே! தலையெழுத்தை அழுத்தி மாற்றும் மூச்செழுத்தை அறிவீர்களா? சி.

(எழுத்தெழுத்தாக அறிவோம்…) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்