குறையொன்றுமில்லை குறுங்குடி நாதா

By வே.இசக்கிமுத்து

‘‘குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா‘‘ என்று  எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் அமரத்துவம் வாய்ந்தது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் சிவபெருமானைப் பார்த்து தினசரி குறையேதும் உண்டா என்று இன்றும் விசாரிக்கப்படுகிறது.

பரமனுக்குக் குறையுண்டோ?

108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள அழகிய நம்பிராயர் கோயிலில், பெருமாளுக்கு அருகிலேயே சிவபெருமான் மகேந்திரகிரி நாதர் என்ற திருநாமத்துடன்  உறைந்துள்ளார்.

இக்கோயிலில் நாள்தோறும் காலையில் பெருமாளுக்கு திருவாராதனம் நடைபெறும் போது, பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கோயிலுக்கு வந்து பெருமாளைத் தரிசிப்பார். பூஜை தொடங்கும் முன் கோயில் பட்டாச்சாரியாரிடம், ‘பக்கத்திலிருக்கும் பரமனுக்கு (மகேந்திரகிரி நாதருக்கு) குறை ஏதும் உண்டோ?’ என்று பேரருளாள ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கேட்பார்.

இதற்கு பட்டாச்சாரியார், ‘குறை ஒன்றுமில்லை’ என்று பதில் சொல்வார். இதன் பிறகே பெருமாளுக்கு திருவாராதன பூஜை நடைபெறும். இந்த நடைமுறை  இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்படுவது கண்கூடு.

ஒரே தலம் ஐந்து நம்பிகள்

எண்ணற்ற அதிசயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இக்கோயிலில், நி்ன்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி என   திருக்கோலத்திலும், மேற்குத் தொடர்ச்சி மலை மீதுள்ள கோயிலில், மலைமேல்  நம்பியாகவும் காட்சி தருகிறார். தாயாரின் திருநாமம் குறுங்குடிவல்லி நாச்சியார்.

ஆழ்வார்திருநகரியை ஆண்ட காரிமன்னனும், அவரது இல்லாள் உடையநங்கையும்  தங்களுக்கு புத்திரபாக்கியம் வேண்டி இத்தலத்துக்கு வந்து வழிபட்டதன் பலனாக, அவர்களுக்கு சாட்சாத் பெருமாளின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார்.     இக்கோயிலுக்கு வந்து தரிசித்து தங்களது மனக்குறைகளை முறையிட்டால், அழகிய நம்பிராயரின் அருட்கடாட்சத்தால் அவை நீங்குவது திண்ணம் என்பது பக்தர்களின்  நம்பிக்கை.

பைரவர் சன்னிதி விளக்கு

இக்கோயிலில் பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக இங்கு  காட்சி தரும் பைரவரிர் சிலையின் அருகில் மேலும், கீழுமாக தொங்கவிடப்பட்டுள்ள இரண்டு சர விளக்குகளில், சுவாமியின் நாசி அருகிலுள்ள விளக்கின் சுடர் மட்டும் எப்போதும் அசைந்தவாறே  இருக்கும். அதன்கீழே விளக்கின் சுடர் அசையாமல் நின்றிருக்கும். உயிரோட்டத்துடன் வடிக்கப்பட்டுள்ள இந்த பைரவரை வாயு பகவான் அனுதினமும் வழிபடுவதாக ஐதீகம்.

தேய்பிறை அஷ்டமிதோறும் திரளான பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை ராகுகால  வேளையில் இவரை வழிபட்டால் பித்ருதோஷம், தீராத பிணிகள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. இக்கோயில் பிரகாரத்தில் குத்துப்பிறை இசக்கி அம்மனுக்கும் தனி சன்னிதி உள்ளது. வேறு எந்த வைணவத் தலங்களிலும் இதுபோன்ற அமைப்பைக் காண முடியாது.

கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்காக மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பிரம்மாண்டமான தேக்கு மரத்தை வெட்டிக்கொண்டு வந்தபோது, அதனடியில் உறைந்திருந்த இசக்கி அம்மனும், பைரவரும் கூடவே வந்து விட்டதாகவும், இதனாலேயே அவர்களுக்குத்  தனி சன்னிதி அமைத்து அவர்களுக்கு வழிபாடு  நடத்தப்படுவதாகவும் உள்ளூர் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமங்கையாழ்வார் திருவரசு

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகத் திகழ்பவரும், பெருமாள் மீது 1,253 பாசுரங்களை படைத்தவருமான திருமங்கையாழ்வார் தனக்கு வீடுபேறு அருளுமாறு பெருமாளைப் பிரார்த்திக்க, தனது தெற்கு வீடாகிய திருக்குறுங்குடி செல்லுமாறு அவர் பணித்ததை ஏற்று இங்கு வந்து, கைங்கர்யம் பல செய்து நம்பியிடம் வீடுபேறு வேண்ட,  நம்பியும் அவரை தனது திருவடிகளில் சேர்த்துக் கொண்டார்.

திருமங்கை ஆழ்வாரின் திருவரசு (சமாதி) இவ்வூரின் வடகோடியில்  வயல்களுக்கு மத்தியில் உள்ளது. இங்கு  தொழுத கரங்களுடன்  அவர் திருக்காட்சி அருள்கிறார். குறையில்லா வாழ்வுக்கு திருக்குறுங்குடி சென்று நம்பிராயரை தொழுதல் சிறப்பு.

கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி புராணம் நடைபெற்ற தலம் இதுவே. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசியன்று இவ்விழா வெகுசிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.

எம்பெருமானார் ராமானுஜர் தங்கி வழிபட்ட தலம் இது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. ராயகோபுரம், ராஜகோபுரம், நாயக்கர் மண்டபம், ஆழ்வார்கள் சன்னிதி, மணவாள மாமுனிகள் சன்னிதி, மகா மண்டபம் ஆகியவற்றில் உள்ள சிற்பங்கள் புகழ்பெற்றவை.

செல்லும் வழி

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் திருக்குறுங்குடிக்கு தனியார் பேருந்து மூலம் நேரடியாக செல்லலாம். அல்லது நாகர்கோவில் (வழி ஏர்வாடி) செல்லும் பேருந்தில், ஏர்வாடியில் இறங்கி, அங்கிருந்து மினி பேருந்துகள் அல்லது ஆட்டோ மூலம் இத்தலத்தை 45 நிமிடங்களில் அடையலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்