ஆன்மா என்னும் புத்தகம் 24: எதுவும் தவறாய்ப் போகாது

By என்.கெளரி

நிசர்கதத்த மஹராஜின் பெயரிலேயே அவரது போதனைகளை அறிந்து கொள்வதற்கான சாவியும் உள்ளது. மகிழ்ச்சி, இயற்கையானது என்று கூறுபவர் அவர். ‘நிசர்க’ என்றால் இயற்கை. இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் உரையாடல் வடிவத்தில் ‘I AM That’ (நான் ப்ரம்மம்) என்ற புத்தகமாக 1973-ம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்மேன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் இந்தப் புத்தகம் சி. அர்த்தநாரீஸ்வரன் மொழிபெயர்ப்பில் 2016-ம் ஆண்டு வெளியானது.

தன்னை உணர்ந்தறிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு இவர் மெய்ஞானத்தின் பாதையில் பயணிப்பதற்கு வழிகாட்டினார். இவர் எந்தக் கருத்தியலையும் மதத்தையும் சாராத ஆன்மிக ஆசிரியர். சுயத்தைப் பற்றிய புதிரை விடுவிப்பதற்கான போதனைகளை இவர் வழங்கியிருக்கிறார். இவரது செய்தி எளிமையானதாகவும் நேரடியானதாகவும் உன்னதமானதாகவும் அறியப்படுகிறது. புனேயில் இல்லறத் துறவியாக மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்திவந்த அவரைத் தேடிவருபவர்களிடம் அவர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்புதான் ‘நான் ப்ரம்மம்’ புத்தகம்.

துன்பத்திலிருந்து விடுதலை

மனிதனைத் துன்பத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவதே அவரது போதனைகளின் ஒரே நோக்கம் என்று அவர் தெரிவிக்கிறார். இது, அதுவென்று இல்லாமல், இங்கேயும் அங்கேயும் அலையாமல், எப்போது, இப்போது என்று இல்லாமல் காலமற்ற தன் இருப்பை மனம் புரிந்துகொள்ள வேண்டுமென்று அவர் சொல்கிறார்.

இந்த காலமற்ற இருப்பை தனிநபர்களுக்குப் புரியவைப்பதுதான் தன் பயணம் என்று அவர் கூறுகிறார். “மெய்யான அனுபவத்துக்குப் பின்னால் மனம் இல்லை, சுயம்தான் இருக்கிறது. அதில்தான் எல்லாவற்றுக்குமான ஒளியும் தோன்றுகிறது” என்று அவர் கூறுகிறார்.

நீங்கள் யார்?

நீங்கள் எப்படித் தோற்றமளிக்கி றீர்களோ, அது அல்ல நீங்கள்.  பெயரளிக்கக் கூடியது, விளக்கக்கூடியதுமான கருத்துகளை எதிர்த்து  முழு வலிமையுடன் போராடுங்கள். நீங்கள் அது அல்ல. உங்களை அது, இது என்று நினைப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். அது, இது என்ற நினைப்பதை ‘நான்’ நிறுத்திவிட்டால், எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன என்று  நிசர்கதத்த மஹராஜ் தெரிவிக்கிறார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உங்கள் முயற்சி தோற்கும்போது, மாயத் தோற்றம் ஒன்று உருவாகும்.

அந்த மாயத் தோற்றத்தைக் கைவிடும்போதுதான் உங்களால் பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும். எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல், உங்களைப் பற்றி நீங்களே உருவாக்கிக் கொள்ளும் குருட்டு நம்பிக்கையைக் கொண்டு துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு வழியேயில்லை. துன்பம் என்பது விசாரணைக்கான அழைப்பு. எல்லா வலிகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவைதான் என்று அவர் வலியுறுத்துகிறார்.

நபர் என்று யாரும் இல்லை

நீங்கள் யாரென்று வரையறுத்து உங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன. ‘நபர்’ என்று யாரும் கிடையாது. வெறும் தடைகளும் வரம்புகளும்தான் மீதமிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்துதான் ‘ஒரு நபர்’-ஐ வரையறுக்கின்றன. நீங்கள் யாரென்று தெரிந்துவைத்திருக்கும்போது உங்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும் என நினைத்திருப்பீர்கள். ஆனால், உங்களுக்கு நீங்கள் யாரென்று எப்போதும் தெரியாது. ஒரு காலியான பூந்தொட்டிக்குள் இருக்கும் இடத்தில் வடிவம், கொள்ளளவு, மண்ணின் மணம் இருப்பதைப் போன்று ஒரு நபரும் தோற்றமளிப்பார்.

வாழ்நாளில் உங்களை நீங்கள் காலத்துக்கும் இடத்துக்கும் இடையில் அழுத்திவைத்திருக்கிறீர்கள். அதனால், உடலின் கொள்ளளவு என்பது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் எண்ணற்ற முரண்பாடுகளையும், நம்பிக்கைகள், பயங்களையும், இன்பங்களையும் வெறுமை களையும் உருவாக்கி வைத்திருக்கிறது.

இடத்துக்கும் காலத்துக்கும் இடையே இருக்கும் தோற்ற மயக்கத்தால் உங்களை ஒரு தனி நபராக உணர்கிறீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குறிப்பிட்ட கொள்ளளவைப் பெற்றிருப்பதாக நம்புகிறீர்கள். ஆனால், உண்மையில், காலமும் இடமும் உங்களுக்குள் இருக்கிறது. அவற்றுக்குள் நீங்கள் இல்லை. காலமும் இடமும் காகிதத்தில் எழுதிவைக்கப்பட்ட வார்த்தைகள் போன்றவை. காகிதம் தான் உண்மை; வார்த்தைகள் மனத்தின் மரபு, அவ்வளவே.

காலம், இடம் இரண்டும் மனத்தின் உருவாக்கம்தான். எல்லாமே இங்கே, இப்போதில் இருக்கிறது. ஆனால், பொதுவாக அதை நாம் பார்ப்பதில்லை. உண்மையில், எங்கு இருப்பவையும் என்னில் என்னால் இருப்பவைதான். வேறு எதுவும் இல்லை. ‘வேறெது’ என்பது தொடர்பான நம்பிக்கையே ஓர் பேரிடர்தான் என்று அவர் தெரிவிக்கிறார்.

தான் என்பது உண்மையில் யார், தனது துயரங்களின் இயல்பு என்னவென்று தெரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் உதவும் வழிகாட்டி இந்தப் புத்தகம்.

 

நான் ப்ரம்மம் | விலை: ரூ. 250
கண்ணதாசன் பதிப்பகம்
தொடர்புக்கு: 044 2433 2682 / 2433 8712

 

நிசர்கதத்த மஹராஜ்

இவர் 1897-ம் ஆண்டு மஹாராஷ்ட்ராவில் பிறந்தார். இவரது இயற்பெயர் மாருதி. பள்ளி, கல்லூரிக்குப் போகவில்லை. பம்பாயில் புகையிலை, சுருட்டு விற்கும் சில்லறை வியாபாரியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1933-ம் ஆண்டு, ஆன்மிக குரு சித்தராமேஷ்வர் மஹராஜை சந்தித்தது இவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தன் குரு கற்றுத் தந்த தியானப் பயிற்சிகளையும் மந்திரங்களையும் பின்பற்றினார்.

ஞானத்தைத் தேடி இமயமலையில் சிறிது காலம் சுற்றிய அவர், ஒருகட்டத்தில் எதையும் எங்கேயும் தேடவேண்டியதில்லை என்பதை உணர்ந்து வீடு திரும்பி தனது இல்லற, தொழில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். பெட்டிக்கடைக்காரர் மாருதி என்ற இவரது அடையாளத்திலிருந்து நிசர்கதத்த மஹராஜாக உருவான கதை அத்தனை எளிதானதுதான். 1966-ம் ஆண்டு பெட்டிக்கடை தொழிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தன் வீட்டில் தினமும்  இருவேளை சொற்பொழிவுகளை நடத்திவந்தார். இவர் 1981-ம் ஆண்டு மறைந்தார்.


aanma-2jpg100
 

அன்புக்கும் ஞானத்துக்கும் இடையே

# நான் எதுவுமில்லை என்று ஞானம் சொல்கிறது. நான்தான் எல்லாம் என்று அன்பு சொல்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில்தான் என் வாழ்க்கை பாய்கிறது.

# நான் யார் என்ற கேள்வியைத் தவிர அனைத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் இருக்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் நம்பும் ஒரே உண்மை. ‘நான்’ என்பதுதான் உறுதியானது.

# இங்கே, இப்போதில்தான் அறுதியான முழுமை இருக்கிறது. எதிர்காலத்திலோ அருகிலோ தொலைவிலோ அது இல்லை. இங்கே, இப்போது செய்யும் செயல்தான் ரகசியம். நீங்கள் என்னவென்று நினைக்கிறீர்களோ அதை மறுதலியுங்கள். அறுதியான முழுமையுடன் நீங்கள் இருப்பதைப் போன்று செயல்படுங்கள். துணிச்சல் மட்டும்தான் அதற்கு தேவை.

# மனம் பாதாளத்தை உருவாக்குகிறது. இதயம் அதைக் கடக்கிறது.

# எதையும் புரிந்துகொள்ள வேண்டுமென்று முயற்சிக்காதீர்கள். தவறாகப் புரிந்துகொள்ளாமலிருப்பதே போதுமானது.

# நீங்கள் மனம் அல்ல.  நீங்கள் மனம் அல்ல என்பதைப் தெரிந்துகொண்டபிறகு, அது தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தாலும், அமைதியாக இருந்தாலும் என்ன வித்தியாசத்தை ஏற்படுத்திவிட போகிறது? நீங்கள் மனம் அல்ல.

# நீங்கள் கோபத்திலோ வேதனையிலோ இருக்கும்போது உங்களிடமிருந்து கோபத்தையும் வேதனையையும் பிரித்து பாருங்கள். வெளியே தள்ளியிருந்து அதை நோக்குவதுதான் விடுதலைக்கான முதல் படி. 

# உங்களிடம் இல்லாததைத் தேடிக்கொண்டிருப்பதைவிட, நீங்கள் எப்போதும் தொலைக்காமல் இருப்பது என்னவென்று கண்டுபிடியுங்கள்.

# உங்கள் உலகம் என்பது உங்களின் பிரதிபலிப்புதான். அதனால், பிரதிபலிப்பில் தவறுகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள்.

# அமைதியிலும் நிம்மதியிலும் ‘நான்’ என்பதின் தோல் கரைந்துவிடுகிறது. அகமும் புறமும் ஒன்றாகிவிடுகிறது.


கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்